டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணித் தேர்வு: யாருக்கெல்லாம் வாய்ப்பு? வாஷிங்டன் சுந்தருக்கு இடம் கிடைக்குமா? | T20 WC: All eyes on Washington Sundar as Indian selectors gear up to pick squad

Spread the love

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் எந்தெந்த வீரர்களுக்கு இடம் கிடைக்கும் என்பது பெரிய எதிர்பார்ப்பாக இருந்துவருகிறது. காயம் காரணமாக ஐபிஎல் டி20 தொடரில் விளையாட முடியாத நிலையில் இருக்கும் வாஷிங்டன் சுந்தருக்கு இடம் கிடைக்குமா என்பது தெரியவில்லை.

அக்டோபர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும் டி20 உலகக் கோப்பைக்கான இறுதிப் பட்டியலை அறிவிக்கக் கோரி ஐசிசி தெரிவித்துள்ளது. இந்த முறை 23 வீரர்கள் கொண்ட அணியாக அல்லாமல் பெருந்தொற்றைக் கருத்தில் கொண்டு அணி வீரர்கள், உதவி அலுவலர்கள் என 30 பேர் வரை அறிவிக்க அனுமதித்துள்ளது.

இதுவரை நியூஸிலாந்து, பாகிஸ்தான் அணிகள் 15 வீரர்கள் கொண்ட பட்டியலை அறிவித்துள்ளன. ஆனால், இந்திய அணியைப் பொறுத்தவரை 23 வீரர்கள் வரை அறிவிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

மும்பையில் தேர்வுக் குழுத் தலைவர் சேத்தன் சர்மா தலைமையில் நாளை அல்லது இன்று கூடும் கூட்டத்தில் உலகக் கோப்பைக்கான வீரர்கள் பட்டியல் குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும். இந்தக் கூட்டத்தில் கேப்டன் விராட் கோலி, பிசிசிஐ தலைவர் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் காணொலி மூலம் பங்கேற்கலாம்,

இந்திய அணியில் தொடக்க வீரர்களுக்கு கே.எல்.ராகுல், ரோஹித் சர்மா கூட்டணி வலுவாக இருக்கிறது. இதில் கே.எல்.ராகுலைச் சேர்ப்பதன் மூலம் கூடுதலாக விக்கெட் கீப்பர் தேர்வு செய்யப்படுவார்.

ஒரு வேளை ரோஹித் சர்மாவுடன் சேர்ந்து கோலி ஆட்டத்தைத் தொடங்கினால், ஒன்டவுனில் சூர்யகுமார் யாதவுக்கு வாய்ப்பு கிடைக்கும். நடுவரிசையில் ராகுல் களமிறங்குவார்.

ஷிகர் தவணை டி20 அணியில் இருந்து நீக்க முடியாவிட்டாலும்கூட அவர் ரிசர்வ் ஓப்பனராகவே வைக்கப்படுவார். அதேபோல ப்ரித்விஷாவும் இலங்கைக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடியதால் அவரும் ரிசர்வ் ஓப்பனராகவே வைக்கப்படுவார்.

நடுவரிசையில் ஸ்ரேயாஸ் அய்யர் தேர்வு முக்கியமானது. கடந்த மார்ச் மாதத்துக்குப் பின் எந்தவிதமான போட்டியிலும் ஸ்ரேயாஸ் காயம் காரணமாக விளையாடவில்லை. ஐபிஎல் டி20 தொடரில் அவரின் பங்களிப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆல்ரவுண்டர்களைப் பொறுத்தவரை ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா இருவரும் ஆட்டோமேட்டிக் தேர்வாக இருக்கலாம். இதில் ஹர்திக் பாண்டியா டி20 தொடரில் 4 ஓவர்கள் வரை வீசும் அளவுக்குத் தகுதியாக இருக்கிறாரா என்பது ஆய்வு செய்யப்படும்.

சுழற்பந்துவீச்சாளர்களைப் பொறுத்தவரை யஜுவேந்திர சஹல், ராகுல் சஹர், வருண் சக்ரவர்த்தி ஆகியோருக்கு இடையே கடும் போட்டி இருக்கிறது. இதில் சஹல், வருணுக்கு அதிகமான வாய்ப்புள்ளது.

ஆஃப்-ஸ்பின்னர்களில் வாஷிங்டன் சுந்தர் தேர்வு செய்யப்படலாம் என்றால், காயம் காரணமாக அவரின் பெயர் பரிசீலிக்கப்படுமா என்பது கடைசி நேர கேள்விக்குட்பட்டது. ஆனால், சுந்தர் தவிர்த்து ஆஃப்-ஸ்பின்னர் அணியில் யாருமில்லை. ஜெயந்த் யாதவ், அஸ்வின் இருவர் மட்டுமே உள்ளனர். இதில் அஸ்வின் அளவுக்கு ஜெயந்த் யாதவுக்கு திறமையும், அனுபவம் குறைவு. ஆனால், சீனியர் வீரர் என்ற அடிப்படையில் அஸ்வினுக்கு வாய்ப்பு மறுக்கப்படலாம்.

விக்கெட் கீப்பர்களைப் பொறுத்தவரை ரிஷப் பந்த், இஷான் கிஷன் இருவரும் தேர்வு செய்யப்படலாம். ராகுல் அணியில் இடம் பெற்றால் ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேனாக இடம் பெறுவார்.

வேகப்பந்துவீச்சைப் பொறுத்தவரை பும்ரா, ஷமி, புவனேஷ்வர் குமார் ஆட்டமேட்டிக்காக தேர்வு உறுதியாகிவிடும். அடுத்தாக ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், தீபக் சஹர் மூவருக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்திய அணிக்கு இடதுகை வேகப்பந்துவீச்சாளர் தேவை என்பதால் தமிழக வீரர் நடராஜன் பெயரும் பரிசீலிக்கப்படலாம்.

இதில் ஆல்ரவுண்டர் வரிசையில் தீபக் சஹரைவிட, தாக்கூருக்கு முன்னுரிமை வழங்கப்படலாம் என்றாலும், புதிய பந்தில் தாக்கூரைவிட தீபக் சஹர் சிறப்பாக ஸ்விங் செய்யக்கூடியவர் என்பதால், இருவரில் ஒருவர் மட்டுமே தேர்வு செய்யப்படுவர். மற்றொருவர் ரிசர்வ் வீரராக வைக்கப்படலாம்.

உமேஷ் யாதவ், முகமது சிராஜ், சேத்தன் சக்காரியா ஆகியோர் காத்திருப்பு வீரர்ளாக இருக்க வாய்ப்பு உண்டு.

ரிசர்வ் வீரர்கள் உள்பட உத்தேச இந்திய அணி :

விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, சூர்யகுமார் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, புவனேஷ்வர் குமார், யஜுவேந்திர சஹல், தீபக் சஹர், ஷிகர் தவண், இஷான் கிஷன், வாஷிங்டன் சுந்தர், ராகுல் சஹர், சேத்தன் சக்காரியா, ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், வருண் சக்ரவர்த்தி, குர்னல் பாண்டியா, பிரித்வி ஷா.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: