ஜோதிடத்தின் மீதான நம்பிக்கையால் 5 வயது மகனை எரித்துக் கொலை செய்த தந்தை கைது | Father arrested for murdering son

Spread the love

திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் ஜோதிடத்தின் மீதான நம்பிக்கையால் தனது மகனால் ஆபத்து ஏற்படும் என நம்பி, 5 வயது மகனை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த தந்தை கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பாக, காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் ராம்கி (29). இவருக்கும் எரவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த காயத்ரி என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமான நிலையில், 5 வயதில் ஒரு மகன் இருந்தார். மேலும், மூன்று மாத ஆண் மகனும் உள்ளார்.

ஆட்டோ மற்றும் வாடகை கார் ஓட்டுநரான ராம்கி, ஜோதிடத்தில் அதிகம் நம்பிக்கை கொண்டவராக இருந்துள்ளார். இதனால் பல்வேறு ஜோதிடர்களை அவர் சந்தித்து தனது வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட என்ன செய்ய வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு, ஒரு ஜோதிடர் ராம்கியின் மூத்த மகன் இருக்கும் வரை அவருக்கு வாழ்வில் முன்னேற்றம் இருக்காது என தெரிவித்துள்ளார். இதனால், மூத்த மகனை 15 ஆண்டுகள் ஹாஸ்டலில் தங்க வைக்கப் போவதாக காயத்ரியிடம் தெரிவித்துள்ளார்.

இதனால், ராம்கி – காயத்ரி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று (மார்ச் 2) மது போதையில் வீட்டுக்கு வந்த ராம்கி, மூத்த மகனை உடனடியாக வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என மனைவி காயத்ரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும், அருகில் இருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து மகன் மீது ஊற்றி பற்ற வைத்துள்ளார்.

காயத்ரியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர், ஓடிவந்து சிறுவனை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 90 சதவீத காயங்களுடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட சிறுவன், மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த நிலையில், இன்று (மார்ச் 3) சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தார்.

தகவலறிந்த நன்னிலம் காவல்துறையினர் நேற்றைய தினமே தந்தை ராம்கியை கைது செய்து தொடர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, ராம்கி அளித்த வாக்குமூலத்தின்படி, தான் ஜோதிடத்தின் மீது நம்பிக்கை கொண்டு தனது மகனை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்ததாக காவல்துறையில் ராம்கி வாக்குமூலம் அளித்துள்ளார். இதனைக்கேட்ட காவல் துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், ராம்கியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மன்னார்குடி கிளை சிறையில் அடைத்துள்ளனர். ஜோதிடத்தால் பெற்ற மகனையே மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த சம்பவம், நன்னிலம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *