ஜொலித்த இளமை பட்டாளம் * இந்திய அணி எழுச்சி

Spread the love


புனே: இங்கிலாந்துக்கு எதிரான மூன்று தொடரிலும் முழு ஆதிக்கம் செலுத்திய இந்தியா, அஞ்சத்தக்க அணியாக உருவெடுத்துள்ளது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட், ‘டுவென்டி–20’, ஒருநாள் என மூன்று தொடர்களையும் வென்று அசத்தியது கோஹ்லி தலைமையிலான இந்திய அணி. முன்னணி வீரர்களுடன் சேர்த்து, இளம் வீரர்களும் ஜொலித்தனர்.

இஷாந்த் சர்மா, பும்ரா, முகமது ஷமி வரிசையில் வேகப்பந்து வீச்சாளராக அணியில் சேர்க்கப்பட்டவர் ஷர்துல் தாகூர். கடைசியில் சிறப்பான ‘ஆல் ரவுண்டராக’ மாறி விட்டார். ‘டுவென்டி–20’ அரங்கில் அறிமுக போட்டியில் அரைசதம் அடித்த சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷானும் சவால் கொடுத்தனர்.

கேள்விக்கு விடை

மொத்தத்தில் இங்கிலாந்து தொடர் இந்திய அணியின் பல்வேறு கேள்விகளுக்கு விடை கொடுத்தது.

* சேப்பாக்கம் போட்டியில் தோற்ற போதும் அஷ்வின், அக்சர் (27 விக்.,) அசத்தலில் சிறப்பாக மீண்ட இந்தியா, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு (ஜூன் 18–22, சவுத்தாம்ப்டன், எதிர்–நியூசி.,) முன்னேறியது.

* உலக ‘பைனல்’, இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு (5 போட்டி) செல்லும் வீரர்கள் யார் என்பதை இத்தொடர் முடிவு செய்தது. ரோகித் சர்மா, சுப்மன் கில், ராகுல், ஜடேஜா வரவில்லை என்றால் அக்சர் படேல், பேட்ஸ்மேனாக வாஷிங்டன் சுந்தர், வேகப்பந்துவீச்சு ‘ஆல் ரவுண்டர்’ ஷர்துல் தாகூர், இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்ட் பலர் இடத்தை உறுதி செய்தனர்.

* ‘டுவென்டி–20’ தொடரில் சிறப்பாக செயல்பட்டதால், வரும் அக்டோபர்–நவம்பரில் இந்திய மண்ணில் நடக்கவுள்ள ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடருக்கான வீரர்களை அடையாளம் காண முடிந்தது.

* ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணிக்கு மாற்று வீரர்கள் பலர் இருப்பது தெரியவந்தது.

தவிர மூன்று வித கிரிக்கெட்டிலும் முத்திரை பதித்து வருகிறார் இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்ட். பவுலிங்கை பொறுத்தவரையில் பும்ரா, புவனேஷ்வர் குமார், ஷர்துல் தாகூர் தங்களது இடத்தை தக்கவைத்தனர். தமிழகத்தின் ‘யார்க்கர்’ நடராஜனும் வெற்றிக்கு கைகொடுக்கிறார். கொரோனாவுக்கு முன் சிறப்பாக செயல்பட்ட தீபக் சகார், புதிய வரவு பிரசித் கிருஷ்ணாவும் போட்டியில் உள்ளனர்.

 

ஆதிக்கம் ஆரம்பம்

ஆஸ்திரேலிய அணி முன்னாள் வீரர் இயான் சாப்பல் கூறுகையில்,‘‘இந்திய அணி வீரர்கள் தங்கள் திறமையால், எந்த சூழ்நிலையிலும் வெற்றி பெற முடியும் என நம்புகின்றனர். மற்ற அணிகள் அன்னிய மண்ணில் தடுமாறும் நிலையில், இந்திய அணி வெற்றிக்கு இளம் வீரர்கள் கூட கைகொடுக்கின்றனர். இந்திய அணியை வீழ்த்த, மிரட்டும் ‘வேகங்களை’ தேர்வு செய்தால் போதும் என எதிரணிகள் இனிமேல் கூற முடியாது. இந்திய அணியின் ஆதிக்கம் துவங்கி விட்டது, கிரிக்கெட் உலகம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்,’’ என்றார்.

Advertisement





THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: