ஜெர்டு முல்லர் காலமானார்: ஜெர்மனி கால்பந்து அரங்கில் சோகம்

Spread the love

முனிக்: கால்பந்து ஜாம்பவான் ஜெர்டு முல்லர் காலமானார்.

மேற்கு ஜெர்மனி கால்பந்து அணியின் முன்னாள் வீரர் ஜெர்டு முல்லர் 75. சர்வதேச அரங்கில் 62 போட்டியில், 68 கோல் அடித்துள்ள இவர், ஐரோப்பிய சாம்பியன்ஷிப் (1972), ‘பிபா’ உலக கோப்பை (1974) தொடரில் மேற்கு ஜெர்மனி அணி கோப்பை வெல்ல உதவினார். இதில் நெதர்லாந்துக்கு எதிரான பைனலில் வெற்றிக்கான கோல் அடித்தார். உலக கோப்பை அரங்கில் 14 கோல் அடித்துள்ள இவர், அதிக கோலடித்த வீரர்கள் பட்டியலில் ஜெர்மனியின் மிரோஸ்லவ் குளோஸ் (16 கோல்), பிரேசிலின் ரொனால்டோ (15) ஆகியோருக்கு பின், 3வது இடத்தில் உள்ளார். கடந்த 1970ல் நடந்த உலக கோப்பையில் 10 கோலடித்த இவர், ‘கோல்டன் பூட்’ விருது வென்றார்.

பேயர்ன் முனிக் அணியில் 1964ல் இணைந்த ஜெர்டு முல்லர், 607 போட்டியில், 566 கோல் அடித்துள்ளார். இதில், ‘பண்டஸ்லிகா’ தொடரில் 365 கோல் (427 போட்டி), ஐரோப்பிய சாம்பியன்ஷிப் தொடரில் 66 கோல் (74 போட்டி) அடித்துள்ளார். தவிர இவர், பேயர்ன் முனிக்கு அணி, 4 ‘பண்டஸ்லிகா’ கோப்பை, 3 ஐரோப்பிய சாம்பியன்ஷிப் பட்டம் வெல்ல கைகொடுத்தார்.

கடந்த 2015ல் ‘அல்சைமர்’ (மறதி, மூளை நரம்பியல் தொடர்பான பிரச்னை) நோயால் பாதிக்கப்பட்ட ஜெர்டு முல்லர், வயது மூப்பு காரணமாக மரணமடைந்தார். இவரது மறைவுக்கு பேயர்ன் முனிக் அணி நிர்வாகம் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், ‘‘ஜெர்டு முல்லர் சிறந்த ‘ஸ்டிரைக்கர்’ மட்டுமின்றி நல்ல மனிதராகவும் திகழ்ந்தார். இவரது மரணம், பேயர்ன் முனிக், ஜெர்மனி கால்பந்துக்கு மிகப் பெரிய இழப்பு. இவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்,’’ என, தெரிவிக்கப்பட்டிருந்தது.

Advertisement

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: