ஜெனிவா விவகாரத்தை அனைத்து கட்சிகளும் தேசிய பிரச்சினையாக கருத வேண்டும் – ஆளும் கட்சி

Spread the love

(இராஜதுரை ஹஷான்)

இலங்கை இராணுவத்தினரை சர்வதேச நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவது சாதாரண காரியமல்ல. நிறைவேற்றப்பட்டுள்ள 46/1 பிரேரணையினை செயற்படுத்த ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு அதிகாரம் கிடையாது. உள்ளக பொறிமுறை ஊடாக ஒரு சில விடயங்களை செயற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜெனிவா விவகாரத்தை அனைத்து அரசியல் கட்சிகளும் தேசிய பிரச்சினையாக கருதவேண்டும். 

அரசியல் நோக்கங்களை விடுத்து  ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காண அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட 46.1 பிரேரணை  முற்றிலும் அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

இலங்கை தொடர்பில்  மனித உரிமை ஆணையாளர் ஒருதலைப்பட்சமான கொள்கையினை கடைப்பிடிக்கிறார். 

இறுதிக்கட்ட யுத்தத்தில் இராணுவத்தினரால் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் இடம் பெறவில்லை என  சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை தொடர்பில் அவர் கவனம் செலுத்தவில்லை.

ஜெனிவா விவகாரத்தை எதிர்த் தரப்பினர் தங்களின் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள். 

இலங்கை இராணுவத்தினரை  சர்வதேச நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவது சாதாரண விடயமல்ல,  சர்வதேச நீதிமன்ற  கட்டமைப்பினை அடிப்படையாக கொண்டுள்ள ரோம் ஒப்பந்தத்தில் இலங்கை கைச்சாத்திடவில்லை. 

ஆகவே, இலங்கை தொடர்பில் சர்வதேச நீதிமன்றில் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது.

இலங்கை விவகாரத்தை சர்வதேச நீதிமன்றிற்கு கொண்டு செல்லும் அதிகாரம்  ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு கிடையாது. பாதுகாப்பு சபைக்கு இவ்வதிகாரம் காணப்படுகிறது. 

பாதுகாப்பு சபையில் சீனா,  ரஷ்யா ஆகிய நாடுகள் இலங்கைக்கு  ஆதரவாக செயற்படும். ஆகையால், சர்வதேச நீதிமன்றம் விவகாரம்  சாத்தியமற்றது.

இறுதிக்கட்ட யுத்தத்தில் இராணுவத்தினர் மனித உரிமை மீறல் குற்றங்களில் ஈடுப்படவில்லை என பல ஆதாரங்கள் சர்வதேச அரங்கில் முன்வைக்கப்பட்டுள்ளன. 

கொழும்பில் உள்ள இலங்கைக்கான பிரித்தானிய தூதுவராலயத்தில் சேவையாற்றிய  என்டன் கேஷ்  என்பவர் 2009 ஜனவரி மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் 2009 மே மாதம் 19 ஆம் திகதி வரை  இலங்கையில்  காணப்பட்ட இறுதிக்கட்ட யுத்த சூழலை கண்காணித்து அறிக்கையொன்றை சமர்பித்துள்ளார். 

இலங்கை இராணுவத்தினர் மனித உரிமை மீறல் குற்றங்களில் ஈடுப்படவில்லை என தெளிவாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

என்டன் கேஷ் சமர்ப்பித்த அறிக்கை பிரித்தானியாவில் மறைக்கப்பட்டுள்ளது.  அறிக்கையின் முழு உள்ளடக்கங்கள் இதுவரையில்  முழுமையாக பகிரங்கப்படுத்தப்படவில்லை.  

2011 ஆம் ஆண்டு  ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச்செயலாளர் பான் கி மூன் தருஷ்மன் குழுவை நியமித்தார். இக்குழு இலங்கைக்கு எதிரானதல்ல.  இலங்கை விவகாரம் குறித்து தனக்கு ஆலோசனை வழங்க  நியமிக்கப்பட்டுள்ளது என தனிப்பட்ட முறையில் தெரிவித்தார்.

தருஸ்மன் அறிக்கையில் இலங்கைக்கு எதிராக 4,000 ஆயிரம் சாட்சியங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. 2,300 நபர்களிடம் பெற்றுக் கொண்ட வாக்குமூலத்தின் ஊடாக  சாட்சியங்கள் தயாரிக்கப்பட்டுள்ன. சாட்சியாளர்களின் பாதுகாப்பு கருதி  20 வருட காலத்திற்கு அறிக்கை மறைக்கப்பட்டுள்ளது.  

2031 ஆம் ஆண்டுதான் முழுமையான அறிக்கையினை ஆராய முடியும்.  இலங்கை தொடர்பில் யார் சாட்சியம் வழங்கினார்கள் என்பதை கூட அறிய முடியாத நெருக்கடி நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான அறிக்கை குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கவனம் செலுத்தியுள்ளமை கவலைக்குரியது.

ஜெனிவா விவகாரத்தை அரசியல் கட்சிகள் குறுகிய அரசியல் தேவைக்காக பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். 

இதனை தேசிய பிரச்சினையாக கருத்திற்கொண்டு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு  தீர்வு காண ஒத்துழைப்பு வழங்கவேண்டும். சர்வதேச நிபுணர்கள் இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிட ஒருபோதும் அனுமதி வழங்க முடியாது என்றார்.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *