வேகப்பந்துவீச்சாளர்கள் – பெரண்டார்ஃப் / வில்லியான்
ஹேசில்வுட்டுக்குப் பதில் ஒரு வேகப்பந்துவீச்சாளரையே வாங்கவேண்டுமெனில், சென்னைக்கு நிறைய ஆப்ஷன்கள் இருக்கிறது. ஐபிஎல் அனுபவம் கொண்ட பல பௌலர்கள் இந்த ஏலத்தில் விலை போகவில்லை. ஷெல்டன் காட்ரல், பில்லி ஸ்டேன்லேக், ஜேசன் பெரண்டார்ஃப், ஹார்ட்டஸ் விலியான், இசுரு உடானா, ஷான் அபாட், ஒஷேன் தாமஸ், ஸ்காட் குகுலீன் என ஒரு பெரும் படையே இருக்கிறது. ரீஸ் டாப்ளி, ஜெரால்ட் கோட்ஸி போன்று ஐபிஎல் அனுபவம் இல்லாதவர்களும் இருக்கிறார்கள். ஆனால், அதில் யார் சூப்பர் கிங்ஸுக்கு நல்ல ஆப்ஷனாக இருப்பார்கள் என்று பார்த்தால் – பெரண்டார்ஃப், ஸ்டேன்லேக் இருவரையும் சொல்லலாம்.
ஜேசன் பெரண்டார்ஃப் ஏற்கெனவே மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடியிருக்கிறார். ஹேசில்வுட்டை (6 அடி 5 அங்குலம்) போல் இவரும் உயரமான (6 அடி 4 அங்குலம்) வீரர். பௌன்சர்கள் வீசுவதில் கில்லாடி. இந்தியாவில் டி20 போட்டிகள் விளையாடிய அனுபவம் ஓரளவு கொண்டவர். இந்த பிக்பேஷ் சீசனில் 16 போட்டிகளில் 16 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார். இவர் நல்ல ஆப்ஷனாக இருப்பார். ஒருவேளை இவர் இடது கை வேகப்பந்துவீச்சாளர் என்று கருதினால், ஸ்டான்லேக் நல்ல ஆப்ஷன். அதேசமயம், கடந்த ஆண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் (இப்போது பஞ்சாப் கிங்ஸ்) அணிக்கு ஆடிய ஹார்டஸ் விலியான், இந்த ஆண்டு சூப்பர் கிங்ஸ் அணியின் நெட் பௌலராக இருக்கிறார். அதனால், அவரையேகூட சென்னை ஒப்பந்தம் செய்வதற்கு வாய்ப்புகள் நிறைய இருக்கிறது.