சோகத்தில் தனியாக அமர்ந்திருந்த அஸ்வின்; நெட்டிசன்கள் ஆதரவு: கேப்டன் கோலி வறுத்தெடுப்பு | ENG vs IND: Twitter dejected spotting Ravichandran Ashwin sitting all alone at The Oval

Spread the love

லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வரும் இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டியைப் பார்வையாளர்கள் மாடத்தில் தனி ஆளாக அமர்ந்து பார்த்த ரவிச்சந்திரன் அஸ்வினின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

சோகத்துடன் தனி ஆளாக அமர்ந்து போட்டியைப் பார்த்த அஸ்வினுக்கு நெட்டிசன்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் தொடர்ந்து 4 போட்டிகளாக அஸ்வினை ஓரம் கட்டிய கேப்டன் கோலியை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

நியூஸிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் விளையாடிய அஸ்வினுக்கு, இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. ஆனால், இதுவரை இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 4 போட்டிகளில் ஒன்றில் கூட கேப்டன் கோலி வாய்ப்பு வழங்கவில்லை.

உலக டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 2 பந்துவீச்சாளராக அஸ்வின் இருந்தும் அவரை ப்ளேயிங் லெவனில் சேர்க்காமல் கோலி தொடர்ந்து புறக்கணித்து வருகிறார். ஆனால், ஜடேஜாவுக்கு மட்டும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.

தற்போது 4-வது டெஸ்ட் போட்டி நடந்து வரும் ஓவல் மைதானத்தில் சர்ரே அணிக்காக கவுண்டி அணியில் விளையாடிய அஸ்வின், சோமர்செட் அணிக்காக 27 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

சுழற்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்காத ஓவல் மைதானத்திலேயே அஸ்வின் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆனால், ஓவல் மைதானத்தில் நடக்கும் போட்டியில் அணியில் அஸ்வினைச் சேர்க்காமல் ஜடேஜாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

4 வேகப்பந்துவீச்சாளர்கள், ஒரு சுழற்பந்துவீச்சாளர் என்ற கூட்டணியிலேயே தொடர்ந்து கோலியின் திட்டம் நகர்ந்து வருகிறது. அடுத்ததாக மான்செஸ்டரில் நடக்கும் கடைசி டெஸ்ட் போட்டியிலும் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்குமா எனத் தெரியவில்லை.

79 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அஸ்வின் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய சுழற்பந்துவீச்சாளர்களில் 3-வது இடத்தில் இருந்தும் அவர் புறக்கணிக்கப்பட காரணம் என்ன என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் அஸ்வினின் பந்துவீச்சு, பேட்டிங்கும் சிறப்பாக இருந்தது. இந்தியாவில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 32 விக்கெட்டுகளை அஸ்வின் வீழ்த்தினார். இருப்பினும் டெஸ்ட் அணியில் வாய்ப்பு இல்லை.

ஓவலில் நடந்து வரும் 4-வது டெஸ்ட் போட்டியைத் தனியாக அமர்ந்து பார்த்த அஸ்வினின் புகைப்படத்தைப் பகிர்ந்து நெட்டிசன்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “ ஓவலில் என்ன மாதிரியான டெஸ்ட். இரு அணிகளுமே வெற்றி பெற நேர்மையான வாய்ப்பு இருக்கிறது. அஸ்வின் விளையாடியிருந்தால் இங்கிலாந்து வெற்றி பெற வாய்ப்பு இல்லை. அஸ்வின் இல்லாமலும் வாய்ப்புள்ளது. மிகச் சிறந்த சீசன்” எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கருத்தில், “ இந்த ஒரு புகைப்படம் அனைத்தையும் கூறும். இந்த ஒரு மனிதரை இந்திய அணி தவறவிட்டுவிட்டது” எனத் தெரிவித்துள்ளார்.

மற்றொரு நெட்டிசன் பதிவிட்ட கருத்தில், “ஒருவரின் ஈகோவால் எது வேண்டுமானாலும் இதுபோன்றும் நடக்கலாம். எதிர்காலத்தில் இந்திய அணிக்குத் தகுதியான கேப்டனை நியமிக்க வேண்டும். ஈகோவால் அணியை அழிப்பதை நிறுத்துங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

மற்றொருவர் பகிர்ந்த கருத்தில், “ஓவல் ஆடுகளத்தைப் பார்க்கும்போது அஸ்வினை நாம் இழக்கிறோம். அஸ்வினைத் தேர்ந்தெடுக்காததற்கு இந்திய அணி வருத்தப்படப் போகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

மற்றொருவர் புள்ளிவிவரத்தைப் பதிவிட்டு கருத்து தெரிவித்துள்ளார். அதில், “கடந்த 4 டெஸ்ட் போட்டிகளில் ஜடேஜா 93 ஓவர்கள் வீசி 222 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார். இந்தியாவின் சிறந்த சுழற்பந்துவீச்சாளர் வாழ்க்கையில் விளையாட அகங்காரம் பிடித்த கேப்டனை பிசிசிஐ அனுமதிக்கக் கூடாது” என்று தெரிவித்துள்ளார்.

அஸ்வினின் புகைப்படத்தைப் பகிர்ந்து ஒருவர் உருக்கமாகப் பதிவிட்ட கருத்தில், “உங்களை அணிக்குத் தேர்வு செய்யாத கேப்டன் மீதுள்ள பயத்தால், உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு அணி வீரரும் உங்களைக் கைவிட்டுவிட்டார்கள். நம்பர் 2 பந்துவீச்சாளர் பின்னணியில் மிகப்பெரிய வலி இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: