செவன்ஸ் போட்டியில் சர்வதேச வீராங்கனைகள்… இந்தியாவில் பெண்கள் கால்பந்துக்கு இப்போது இதுவே நிலை!

Spread the love

பெண்கள் கால்பந்து – மற்ற பெண்கள் விளையாட்டைப் போல் புறக்கணிக்கப்படும் ஒரு விளையாட்டுதான். சொல்லப்போனால், மற்ற விளையாட்டுகளுக்கு அக்கறை செலுத்தும் அளவுக்குக்கூட விளையாட்டு அமைப்புகள் இதில் கவனம் செலுத்துவதில்லை.

ஏன், ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் இந்தத் துறைக்கு வேலையும் இல்லை. 3 ஆண்டுகளுக்கு முன்பு தேசிய சாம்பியன்ஷிப் வென்ற தமிழக அணி வீராங்கனைகள் சிலருக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை.

தமிழக பெண்கள் கால்பந்து அணி

சாதாரணமாகவே இந்த நிலைதான் எனும்போது, கொரோனா, லாக்டெளன் என்ற பெரும் காரணங்கள் இருக்கும்போது என்ன நடவடிக்கைகள் எடுத்துவிடுவார்கள்! “இந்திய தேசிய கால்பந்து அணியின் போட்டி அட்டவணை, பயிற்சி அட்டவணை வெளியாகிவிட்டது. ஆனால், பெண்கள் கால்பந்து அணியின் கேம்ப் பற்றி எந்த அறிவிப்பும் வரவில்லை. வருமா என்றும் தெரியவில்லை” என்று சில தினங்களுக்கு முன் சொல்லியிருந்தார் இந்திய வீராங்கனை ஜோதி ஆன் புரெட்.

இப்படியிருக்கும் நிலையில், பெண்களுக்காக நடத்தும் ஒவ்வொரு சிறு தொடரையும்கூட முக்கியத்துவம் கொடுத்து அணுகவேண்டியது அவசியம். அதுவும் மீண்டும் மீண்டும் கொரோனாவால் லாக்டெளன் வந்துகொண்டிருக்கும் இச்சமயத்தில், அதைக் காரணம் காட்டி விளையாட்டு அமைப்புகள் அமைதியாக இருக்கும்போது திருவாரூரில் ஒரு செவன்ஸ் டோர்னமென்ட் நடத்தப்பட்டிருக்கிறது.

எட்டு அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரில் தமிழ்நாடு போலீஸ் ஏ டீம், பி டீம், திருவாரூர் FC, வேல்ஸ் யுனிவர்சிட்டி, மண்ணை FC, Immaculate FC மற்றும் சேலம், நெய்வேலி அணிகளும் கலந்துகொண்டன. பங்கேற்ற அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடந்தன. இரண்டு குரூப்களிலும் முதலிடம் பிடிக்கும் அணி நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறும். இரண்டாவது மற்றும் மூன்றாவது இடம் பிடித்த அணிகள் காலிறுதிப் போட்டியை விளையாடி அரையிறுதிக்கு முன்னேறும்.

இந்திய கால்பந்து அணி வீராங்கனைகள் இந்துமதி தமிழ்நாடு போலீஸ் ஏ டீமுக்கும், கார்த்திகா திருவாரூர் FC டீமுக்கும் விளையாடினர். தொடரின் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை ஹாட்ரிக் அடித்து அசத்தினார். இந்த இரண்டு அணிகளும் மோதிய இறுதிப் போட்டியில் 3-0 என தமிழ்நாடு போலிஸ் ஏ டீம் வெற்றி பெற்றது.

—-

“நான் செவன்ஸ் ஆடுறது தெரிஞ்சதும் என்னை டீம்ல இருந்தே தூக்கிடுவேன்னு கோச் மிரட்டினாரு” – இந்திய கால்பந்து ஜாம்பவான் ராமன் விஜயன் சொன்ன வார்த்தைகள் இவை.

செவன்ஸ் கால்பந்து போட்டிகள் பார்க்க, ரசிக்க அட்டகாசமாக இருக்கும். ஆனால், கொஞ்சம் ஆபத்தானவை. வழக்கமான விதிகள் இல்லை என்பதால், வீரர்களுக்கு எளிதில் காயம் ஏற்பட்டுவிடும். அதனால், தேசிய, சர்வதேச அளவில் ஆடும் வீரர்களை அவர்களின் பயிற்சியாளர்கள் செவன்ஸ் போட்டிகளில் ஆட அனுமதிக்கமாட்டார்கள்.

இந்துமதி

இந்துமதியும், கார்த்திகாவும் மட்டும் ஏன் இப்படியொரு தொடரில் விளையாடினார்கள்? ஏப்ரல் மாதம் நடந்த சர்வதேச போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக இருந்த இந்துமதியைப் போன்ற ஒரு வீரர், இப்படியொரு தொடரில் பங்கேற்கவேண்டிய அவசியம் என்ன?

எப்பேர்ப்பட்ட வீரராக இருந்தாலும் ‘கேம் டைம்’ என்பது மிகவும் அவசியம். தொடர்ந்து விளையாடிக்கொண்டே இருக்கவேண்டும். இல்லையெனில் வீரர்களின் ஃபிட்னஸ், ஃபார்ம் எல்லாம் பாதிக்கப்படும். முன்பே சொன்னதுபோல் பெண்கள் கால்பந்துக்காக தமிழ்நாட்டு அசோசியேஷனோ, தேசிய அசோசியேஷனோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையெனில், இந்த வீராங்கனைகள் என்னதான் செய்வார்கள்!

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: