சென்னை ‘கில்லீஸ்’ சாம்பியன்: கடைசி ஓவரில் ‘திரில்’ வெற்றி

Spread the love


சென்னை: டி.என்.பி.எல்., பைனலில் கடைசி ஓவரில் அசத்திய சென்னை அணி 8 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, மீண்டும் கோப்பை வென்றது. திருச்சி அணி ஏமாற்றம் அடைந்தது.

சென்னையில், தமிழக பிரிமியர் லீக் (டி.என்.பி.எல்.,) கிரிக்கெட் 5வது சீசன் நடந்தது. சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த பைனலில் சென்னையின் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற திருச்சி அணி கேப்டன் ராஹில் ஷா, ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

 

நல்ல துவக்கம்: சென்னை அணிக்கு கேப்டன் கவுசிக், நாராயண் ஜெகதீசன் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 58 ரன் சேர்த்த போது பொய்யாமொழி பந்தில் கவுசிக் (26) அவுட்டானார். ராதாகிருஷ்ணன் (3) ஏமாற்றினார். பொறுப்பாக ஆடிய ஜெகதீசன், 37வது பந்தில் அரைசதமடித்தார். சசிதேவ் (12), ராஜகோபால் சதிஷ் (11) நிலைக்கவில்லை. அபாரமாக ஆடிய ஜெகதீசன் (90 ரன், 58 பந்து, 2 சிக்சர், 7 பவுண்டரி) கைகொடுத்தார். ஹரிஷ் குமார் (13) ‘ரன்–அவுட்’ ஆனார்.

சென்னை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 183 ரன் குவித்தது. சோனு யாதவ் (17) அவுட்டாகாமல் இருந்தார். திருச்சி அணி சார்பில் ராஹில் ஷா, பொய்யாமொழி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

 

சரவணன் ஆறுதல்: சவாலான இலக்கை விரட்டிய திருச்சி அணிக்கு சந்தோஷ் ஷிவ் (16) சுமாரான துவக்கம் தந்தார். அமித் சாத்விக் (36), நிதிஷ் ராஜகோபால் (26) ஆறுதல் தந்தனர். அந்தோணி தாஸ் (13), ஆதித்யா கணேஷ் (10), மதிவண்ணன் (13) நிலைக்கவில்லை. கடைசி ஓவரில் வெற்றிக்கு 13 ரன் தேவைப்பட்டன. சாய் கிஷோர் வீசிய 20வது ஓவரில் 4 ரன் மட்டுமே கிடைத்தது.

திருச்சி அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 175 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. சரவணன் குமார் (45), பொய்யாமொழி (9) அவுட்டாகாமல் இருந்தனர். சென்னை சார்பில் சோனு யாதவ் 2 விக்கெட் வீழ்த்தினார்.

 

மூன்றாவது முறை

இதன்மூலம் டி.என்.பி.எல்., அரங்கில் சென்னை அணி 3வது முறையாக (2017, 2019, 2021) சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. சென்னை அணிக்கு கோப்பையுடன், ரூ. 50 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. பைனல் வரை சென்ற திருச்சி அணிக்கு ரூ. 30 லட்சம் பரிசு கிடைத்தது.

Advertisement





THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: