சென்னையில் இன்று 16 தொகுதிகளிலும் போலீசார், அரசு அலுவலர்கள் தபால் ஓட்டு போட்டனர்

Spread the loveசென்னையில் இன்று 16 மையங்களில் காவலர்கள், அரசு அலுவலர்கள் தபால் ஓட்டு போட்டனர். ஒவ்வொருவரும் தங்களது ஓட்டுகளை பதிவு செய்வதற்கு 10 நிமிடங்கள் வரை ஆனது.

சென்னை:

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந் தேதி நடைபெறுவதையொட்டி தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தேர்தல் நடைபெறுவதால், முதியவர்களிடம் வீட்டுக்கே சென்று தபால் ஓட்டுகளை வாங்கும் பணிகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றன.

இதேபோன்று தேர்தல் பணியில் ஈடுபட உள்ள காவல்துறையினர், அரசு அலுவலர்கள் ஆகியோரும் தபால் ஓட்டுகளை அளிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 16 தொகுதிகளில் இன்று தபால் ஓட்டுகளை அளிப்பதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியில் தபால் ஓட்டு செலுத்துபவர்கள் இன்று தண்டையார்பேட்டையில் உள்ள அரசு பால்டெக்னிக் கல்லூரியில் ஓட்டுப்போட்டனர்.

தபால் ஓட்டு போட காத்திருந்தவர்கள்

பெரம்பூர் தொகுதியில் எருக்கஞ்சேரி அம்பேத்கர் கல்லூரியிலும், கொளத்தூர் தொகுதியில் பெரம்பூர் பந்தர்காடன் தெருவில் உள்ள சென்னை மேல்நிலை பள்ளியிலும் தபால் ஓட்டுகள் போடும் பணி நடைபெற்றது.

வில்லிவாக்கம் தொகுதியை சேர்ந்த காவலர்கள், அரசு ஊழியர்கள், ஐ.சி.பி. காலனியில் உள்ள மேல்நிலை பள்ளியிலும், திரு.வி.க. நகர் தொகுதியை சேர்ந்த பெரம்பூர் மாதவரம் நெடுஞ்சாலையில் உள்ள சென்னை மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும் தபால் ஓட்டுகளை செலுத்தினர்.

எழும்பூர் தொகுதியை சேர்ந்தவர்கள் சென்னை மகளிர் மேல்நிலை பள்ளியிலும், ராயபுரம் தொகுதிக்கு உட்பட்டவர்கள் செயின்ட் பீட்டர் மேல்நிலைப் பள்ளியிலும், துறைமுகம் தொகுதியை சேர்ந்தவர்கள் பாரதி கலைக் கல்லூரியிலும் தபால் வாக்குகளை செலுத்தினார்கள்.

இதேபோன்று சேப்பாக்கம், ஆயிரம் விளக்கு, அண்ணாநகர், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தி.நகர், மயிலாப்பூர், வேளச்சேரி, உள்ளிட்ட தொகுதிகளை சேர்ந்த காவலர்கள், அரசு ஊழியர்களும் தபால் ஓட்டுகளை அந்தந்த பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இதனைத் தொடர்ந்து இன்று 16 மையங்களில் காவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் ஓட்டு போட்டனர்.

தபால் ஓட்டு போடுவதற்கு தகுதியான காவலர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி ஒன்று ஏற்கனவே அனுப்பப்பட்டு உள்ளது. அதனை காட்டிய பிறகே காவலர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தபால் வாக்குப்பதிவு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

இதன்பின்னர் அவர்களுக்கு படிவம் ஒன்று வழங்கப்பட்டது. அதனை மறைவான இடத்தில் வைத்து பூர்த்தி செய்து, தங்களுக்கு பிடித்த சின்னங்களில் காவலர்களும், அரசு ஊழியர்களும் ஓட்டு போட்டனர்.

போலீசார் 6000 பேரும், அரசு அலுவலர்கள் ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களும் ஓட்டு போட்டனர்.

இதன் பின்னர் தங்களது தபால் ஓட்டை ஒரு கவரில் வைத்து பெட்டியில் போட்டனர். ஒவ்வொருவரும் தங்களது தபால் ஓட்டுகளை பதிவு செய்வதற்கு 10 நிமிடங்கள் வரை ஆனது குறிப்பிடத்தக்கது.


https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *