சர்ச்சைக்குரிய எண்ணெய்யை இறக்குமதி செய்த கம்பனிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஜே.சி.அலவத்துவல

Spread the love

(செ.தேன்மொழி)

புற்றுநோயை ஏற்படுத்தும் இராசாயன கூறு அடங்கிய எண்ணெயை இறக்குமதி செய்த கம்பனிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது ,

சீனி மோசடி தொடர்பில் பல முறைப்பாடுகள் அளிக்கப்பட்டுள்ளன. அது தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை என்ன? , அரசாங்கத்திற்கு 1590 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்ற நிலையில் , அதன் பயன்கள் மக்களுக்கு கிடைக்கப் பெற்றுள்ளதா? இந்த இறக்குமதி வரி குறைப்பு ஊடாக , ஒரு கிலோ சீனியை 85 ரூபாவுக்கு விற்பனை செய்வதாக அரசாங்கம் தெரிவித்தது. 

ஆனால் அது நிறைவேற்றப்படவில்லை. பின்னர் சதொச விற்பனை நிலையத்தின் ஊடாக ஒரு கிலோ சீனியை 85 ரூபாவுக்கு விற்பனை செய்வதாக கூறினார்கள். அதுவும் நிறைவேற்றப்படவில்லை.

இது தொடர்பில் முறையான பரிசீலனை செய்யுமாறு நாம் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம். அரசாங்கம் ஏன் அதனை செய்யாது உள்ளது.

இதேவேளை , தேசிய உற்பத்திகளை மேம்படுத்த வேண்டும் என்றே அரசாங்கம் தெரிவித்து வந்தது.ஆனால் அதற்கு புறம்பான வகையிலேயே செயற்பட்டு வருகின்றது. தேங்காய் உற்பத்தியாளர்கள் இன்று பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். 

அவர்களின் முன்னேற்றத்திற்காக அரசாங்கம் எந்த வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்க வில்லை. இந்நிலையில் வெளிநாட்டிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்துள்ளார்கள்.

இதுவும் புற்று நோயை ஏற்படுத்தும் இராசாயண பதார்த்தங்கள் அடங்கியுள்ள எண்ணெயாகும். இதன்போதும் இறக்குமதிக்கான வரி குறைக்கப்பட்டுள்ளதாக கூறுப்படுகின்றது. யாருடைய நலனுக்காக இவ்வாறு இறக்குமதி வரி குறைப்பு செய்யப்பட்டது.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் , கொவிட் – 19 வைரஸ் பரவல் காரணமாக கடந்த வருடம் தமிழ் – சிங்கள புத்தாண்டை நாட்டு மக்களினால் கொண்டாட முடியாமல் போயிருந்தது. தற்போது நஞ்சு அடங்கிய எண்ணெயை இறக்குமதி செய்து, மக்கள் மத்தியில் உணவு பண்டங்களை தயாரிப்பதற்கும் பீதியை ஏற்படுத்தியுள்ளனர்.

தங்களது நகைகளை அடகுவைத்தாவது இம்முறை புதுவருட பிறப்பை கொண்டாட எதிர்பார்த்திருத்த மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளார்கள். இந்நிலையில் இந்த எண்ணெயை மீள் ஏற்றுமதி செய்யப்போவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சட்டவிரோதமாக நாட்டுக்குள் எடுத்துவரப்பட்ட மஞ்சள் தொகையை எரித்த அரசாங்கம் , புற்று நோய்க்கான மூலக்கூறுகள் காணப்படும் எண்ணெயை  மீள் ஏற்றுமதி செய்வதற்கான நோக்கம் என்ன?  இந்த எண்ணெய் ஆபத்தானது என தெரிந்தும் அதனை இன்னுமொரு நாட்டுக்கு அனுப்புவது நியாயமானதா? அல்லது மீள் ஏற்றுமதி செய்வதாக தெரிவித்து , இந்த பிரச்சினைகள் ஓய்வடைந்த பின்னர் மீண்டும் நாட்டுக்குள் அந்த எண்ணெயை கொண்டு வருவதற்கான முயற்சியா? என்று எமக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில் , இந்த எண்ணெயை நாட்டுக்கு எடுத்துவந்த கம்பனிகளை பாதுகாப்பதை விடுத்து அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும்.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *