கோஹ்லி, ஷர்துல் தாகூர் அசத்தல் * இந்திய அணி பதிலடி

Spread the love


லண்டன்: ஓவல் டெஸ்டில் கோஹ்லி, ஷர்துல் தாகூர் அரைசதம் விளாச, சரிவில் இருந்து மீண்டது இந்திய அணி. பந்து வீச்சில் பும்ரா 2 விக்கெட் சாய்த்தார். 

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. மூன்று டெஸ்ட் முடிவில் தொடர் 1–1 என சமனில் உள்ளது. நான்காவது டெஸ்ட், லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நேற்று துவங்கியது. ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், பீல்டிங் தேர்வு செய்தார்.

இந்திய அணியில் முகமது ஷமி, இஷாந்த் நீக்கப்பட்டு உமேஷ் யாதவ், ஷர்துல் தாகூர் சேர்க்கப்பட்டனர். அஷ்வினுக்கு மீண்டும் அணியில் இடம் கிடைக்கவில்லை. 

திடீர் சரிவு

இந்திய அணிக்கு லோகேஷ் ராகுல், ரோகித் சர்மா ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. பின் திடீரென நிலைமை மாறியது. ரோகித் (11), ராகுல் (17), புஜாரா (4) என வரிசையாக வெளியேறினார். முதல் 7 ஓவரில் 28/0 ரன் எடுத்த இந்தியா, அடுத்த 13 ஓவரில் 11 ரன் எடுத்து 3 விக்கெட்டுகளை (39/3) இழந்தது. 

கோஹ்லி அரைசதம்

ஐந்தாவது இடத்தில் ரகானேவுக்குப் பதில் வந்த ஜடேஜா 10 ரன் எடுத்தார். 22 ரன்னில் ‘கண்டம்’ தப்பிய கோஹ்லி, டெஸ்ட் அரங்கில் 27 வது அரைசதம் எட்டினார். இவர் 50 ரன்னுக்கு கிளம்பினார். அடுத்த சில நிமிடத்தில் ரகானே (14), ரிஷாப் பன்ட் (9) அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர்.

ஷர்துல் கலக்கல்

பின் வரிசையில் ஷர்துல் தாகூர் ரன் மழை பொழிந்தார். வோக்ஸ், ஓவர்டன், ராபின்சன் பந்துகளை சிக்சருக்கு பறக்க விட்ட இவர், 31 பந்தில் அரைசதம் கடந்தார். 8 வது விக்கெட்டுக்கு 63 ரன் சேர்த்த போது, ஷர்துல் தாகூர் (57) அவுட்டானார். உமேஷ் யாதவ் (10), பும்ரா (0) அவுட்டாக, இந்திய அணி முதல் இன்னிங்சில் 191 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து சார்பில் வோக்ஸ் 4, ராபின்சன் 3 விக்கெட் வீழ்த்தினர்.

பும்ரா நம்பிக்கை

இங்கிலாந்து அணியின் பர்ன்ஸ் (5), ஹசீப் ஹமீது (0) ஜோடியை, தனது இரண்டாவது ஓவரில் அவுட்டாக்கி அனுப்பி வைத்தார் பும்ரா. 

அபாயகரமான ஜோ ரூட்டை (21), உமேஷ் யாதவ் போல்டாக்கினார். முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 53 ரன் எடுத்து, 138 ரன் பின்தங்கி இருந்தது. மாலன் (26), ஓவர்டன் (1) அவுட்டாகாமல் இருந்தனர். பும்ரா 2, உமேஷ் யாதவ் 1 விக்கெட் வீழ்த்தினர்.

 

கருப்பு பட்டை

இந்திய கிரிக்கெட்டின் ‘துரோணாச்சார்யா’ என்றழைக்கப்பட்டவர் வாசுதேவ் பரன்ஜபே. கவாஸ்கர், சச்சின், டிராவிட் உட்பட பல வீரர்களின் ஆலோசகராக இருந்தார். சமீபத்தில் வயது மூப்பு காரணமாக மறைந்தார். இவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்திய அணியினர் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடினர். 

10

அன்னிய மண்ணில் ஒரு அணிக்கு எதிராக 10 டெஸ்டில் கேப்டனாக இருந்த இந்திய வீரர் ஆனார் கோஹ்லி. இவர், நேற்று இங்கிலாந்தில் 10 வது டெஸ்டில் கேப்டனாக களமிறங்கினார். இதற்கு முன் தோனி, இங்கிலாந்து மண்ணில் 9 டெஸ்டில் கேப்டனாக பங்கேற்றதே அதிகமாக இருந்தது.

* இந்த வரிசையில் கவாஸ்கர் (8 டெஸ்ட், எதிர்–பாக்.,) மூன்றாவதாக உள்ளார். 

 

11

டெஸ்ட் அரங்கில் புஜாராவை அதிகமுறை அவுட்டாக்கிய பவுலர் ஆனார் இங்கிலாந்தின் ஆண்டர்சன் (இதுவரை 11 முறை). லியான் (10 முறை, ஆஸி.,), கம்மின்ஸ் (7, ஆஸி.,) அடுத்த இரு இடத்தில் உள்ளனர். 

 

95

சொந்தமண்ணில் அதிக டெஸ்டில் பங்கேற்ற வீரர் ஆனார் இங்கிலாந்தின் ஆண்டர்சன். நேற்று தனது 95வது போட்டியில் பங்கேற்றார். இந்தியாவின் சச்சின் (94 டெஸ்ட்), பாண்டிங் (92, ஆஸி.,), அலெஸ்டர் குக் (89, இங்கிலாந்து), ஸ்டீவ் வாக் (89, ஆஸி.,) அடுத்த இடங்களில் உள்ளனர். 

 

ஆண்டர்சனுக்கு காயமா

இங்கிலாந்து அணி வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன். இந்திய அணி பேட்டிங் செய்த போது போட்டியின் 43 வது ஓவரை வீசினார். அப்போது இவரது வலது முழங்காலில் ரத்தம் வழிந்தது தெரிந்தது. எப்போது காயம் ஏற்பட்டது எனத் தெரியவில்லை என்ற போதும், ரத்தம் வழிய ஆண்டர்சன் பந்து வீசியது சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

Advertisement

THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: