கோலி ஒரு வேட்டைப்புலி… இந்தப் புலியிடம் பயந்து ஓடும் மானைத் தேடாதீர்கள்! | why everybody is criticizing kohli’s attitude

Spread the love

இங்கிலாந்து முதலில் பேட்டிங் ஆடி 255 ரன்கள் அடித்தது. அதை இந்தியா சேஸ் செய்கிறது. கடைசி ஓவரில் 11 ரன்கள் எடுக்க வேண்டும். ஆண்ட்ரூ ஃப்ளின்ட்டாப் கையில் பந்து இருக்கிறது. களத்தில் ஹேமங் பதானியும், அணில் கும்ப்ளேவும் இருக்கிறார்கள். இந்த ஓவரின் முதல் மூன்று பந்துகளில் 5 ரன்கள் மட்டுமே கொடுத்து அடுத்த பந்தில் கும்ப்ளேவை ரன் அவுட்டாக்கி, அதற்கடுத்த பந்தில் ஶ்ரீநாத்தை போல்டாக்கி இங்கிலாந்தைத் தொடர் தோல்வியிலிருந்து காப்பாற்றினார் ஃபிளின்ட்டாப். ஶ்ரீநாத்தின் விக்கெட்டை வீழ்த்தியதுமே டிஷர்ட்டைக் கழற்றி மைதானத்தில் சுற்றிவந்தார் ஃபிளின்டாப். இந்தியாவிடம் தொடரை இழப்பதை அவமானமாகக் கருதியதன் வெளிப்பாடுதான் ஃப்ளின்டாப்பின் டீஷர்ட் கழற்றலும், கெட்ட வார்த்தைகளால் இந்திய வீரர்களைத் திட்டித்தீர்த்ததும், இந்திய ரசிகர்களை அவமானப்படுத்தியதும். ஆனால், அப்போது யாரும் ஃபிளின்டாப்பை விமர்சிக்கவில்லை. ஆனால், இதையே லார்ட்ஸில் கங்குலி செய்தபோது லார்ட்ஸின் புனிதத்தைக் கெடுத்துவிட்டார் என லண்டன் மீடியாக்கள் அலறின. லார்ட்ஸுக்கு ஒரு புனிதத்தன்மை இருக்கிறது என்றால், மும்பைக்கு அந்தப் புனிதம் இல்லையா, லார்ட்ஸுக்கு மட்டும் புனிதத்தன்மையைக் கட்டமைத்தது யார்?!

விராட் கோலி

விராட் கோலி
Kirsty Wigglesworth

கோலியின் முடிவுகளை விமர்சிக்கிறோம் என்கிற பெயரில் தொடர்ந்து இங்கிலாந்து மீடியாக்களும், முன்னாள் வீரர்களும் அவரின் நம்பிக்கையைக் குலைக்கும் வகையில் தொடர்ந்து சோஷியல் மீடியாக்களில் எழுதுவருகின்றன. அஷ்வினை ஏன் ப்ளேயிங் லெவனில் சேர்க்கவில்லை என்கிற குரல் இந்தியாவிலிருந்து கேட்பதைவிடவும், இங்கிலாந்தில் ஓவராகக் கேட்கிறது. அவர்களின் நோக்கம் எல்லாம் கோலியின் கவனத்தைச் சிதறடித்து இந்தியாவைத் தோல்வியடைய வைக்கவேண்டும் என்பது மட்டும்தான். அவர்களுக்கு அஷ்வின் மீதோ அல்லது இந்திய கிரிக்கெட்டின் மீதோ உண்மையிலேயே எந்தக் கரிசனமும், அக்கறையும் கிடையாது.

இங்கிலாந்து வந்திருக்கும் இந்திய அணி டெஸ்ட் தொடரை இழந்து வெளியேற வேண்டும்; அவர்களை அவமானப்படுத்தி வெளியேற்ற வேண்டும் என்பது மட்டும்தான் இங்கிலாந்தின் முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்களின் நோக்கமாக இருக்கிறது. ‘’நீயெல்லாம் இங்க வந்து ஜெயிச்சுடுவியா, அதைப் பார்த்து நாங்க கைதட்டிட்டுப்போகணுமா’’ என்கிற இங்கிலாந்து முன்னாள், இந்நாள் வீரர்களின், ரசிகர்களின் ஆட்டிட்யூட் இங்கே விமர்சிக்கப்படுவதில்லை. ஏனென்றால் அவர்களின் ஆட்டியூட் எல்லாம் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டது.

இங்கிலாந்தில் இன்னொரு நாட்டை 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட வைப்பதையே மிகப்பெரிய கெளரமாக நினைக்கும் அளவுக்கு இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகத்தின் ஆட்டியூட் இருக்கிறது. 1959-க்குப் பிறகு இங்கிலாந்தில் இந்தியா 5 டெஸ்ட் போட்டிகள் தொடரை விளையாட 55 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. இத்தனைக்கும் 1983-ல் ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற அணி இந்தியா. 2014-ல்தான் இந்தியா மீண்டும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இங்கிலாந்தில் ஆட அனுமதிக்கப்பட்டது அல்லது அந்த ‘கெளரவம்’ வழங்கப்பட்டது. இங்கிலாந்து அதுவரை தங்களுக்கு நிகராக ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்க அணிகளுக்கே அந்த கெளரவத்தைக் கொடுத்தது. 2002 வரை இலங்கை அணியை ஒற்றை டெஸ்ட்டுடன் விரட்டியடித்திருக்கிறது இங்கிலாந்து. இன்னமும் அவர்களுக்கெல்லாம் 5 டெஸ்ட் அந்தஸ்து இல்லை. இதுதான் இங்கிலாந்தின் மனோபாவம்.

விராட் கோலி

விராட் கோலி
Kirsty Wigglesworth

இப்போது அவர்கள் மண்ணில் ஒரு இந்தியன், இந்திய அணியை வெற்றிகரமாக வழிநடத்துகிறான், இங்கிலாந்து அணியை விரட்டியடிக்கிறான், எவ்வளவு இழிவுபடுத்தினாலும் திருப்பியடிக்கிறான் என்றதும் கோலி மீது விமர்சனங்களை வாரியிறைக்கிறார்கள். கோலி இப்படித்தான் நடந்துகொள்ள வேண்டும் என யார் வரையறுப்பது?! ஒருவரை இப்படி நடந்துகொள், இப்படிப் பேசு, இப்படிப் பழகு என்று சொல்வதே வன்முறையல்லவா?!

ஒரு புலி ஏன் இவ்வளவு மூர்க்கமாக இருக்கிறது, ஏன் இப்படி வெறிகொண்டு வேட்டையாடுகிறது, மானைப்போல இருக்கக்கூடாதா என யாராவது எதிர்பார்க்கிறோமா?! கோலி ஒரு புலி. இந்தப் புலிக்கு எதிரிகளை விரட்டி விரட்டி வேட்டையாடத்தான் பிடித்திருக்கிறது. இந்தப் புலியிடம் கருணையை எல்லாம் எதிர்பார்க்கமுடியாது. நீங்கள் இந்தப்புலியைச் சீண்டிவிட்டுவிட்டீர்கள். அதற்கான பலனை அனுபவித்துதான் ஆகவேண்டும்.

ஓவல் டெஸ்ட் இங்கிலாந்து வெற்றி பெற்றிருக்க வேண்டிய அல்லது டிரா செய்திருக்க வேண்டிய போட்டி. அன்றைய பிட்ச் முழுக்க முழுக்க பேட்டிங்குக்கு சாதகமாக இருந்தது. போட்டி இங்கிலாந்தில் இங்கிலாந்து ரசிகர்கள் ஆக்கிரமித்திருக்கும் மைதானத்தில் நடந்தது. இங்கிலாந்தின் கைகளில் 10 விக்கெட்டுகள் இருந்தன. ரோரி பர்ன்ஸ், ஹமீது என இரண்டு செட்டான பேட்ஸ்மேன்கள் களத்தில் இருந்தார்கள். ஆனாலும், இந்தியாவால் வெற்றிபெறமுடிகிறது. இங்கிலாந்து வீரர்களின் நம்பிக்கையை உடைக்க முடிகிறது. அவர்களிடம் பதற்றத்தை ஏற்படுத்தமுடிகிறது என்றால் இதற்கு ஒற்றைக் காரணம் கோலி.

இந்தியா வெற்றிபெற ரோஹித் ஷர்மாவின் பேட்டிங், பும்ராவின் பெளலிங் காரணமாக இருக்கலாம்… ஆனால், இந்திய அணிக்குள் வெற்றிபெறமுடியும் என்கிற நம்பிக்கையையும், இங்கிலாந்து அணிக்குள் ‘எந்த நேரமும் இந்தியா நம்மை வீழ்த்திவிடும்’ என்கிற பதற்றத்தையும் விதைக்க ஒருவனால் மட்டும்தான் முடிந்தது. அவன் பெயர் கோலி… இந்தப் புலி களத்தில் புலியாகத்தான் இருக்கும். ஒரு போதும் பயந்து ஓடும் மானாக இருக்காது!

இந்தப் புலி ”டிரைவ் ஆடாதே அவுட் ஆகிவிடுவாய்… சச்சினைப் பார்த்துக் கற்றுக்கொள்” என கவாஸ்கரே சொன்னாலும் கேட்காது. ஏனென்றால் இது புலி. புலிக்கு வேட்டையாடுவது எப்படி என யாரும் கற்றுத்தர வேண்டியதில்லை!

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: