கோலி உண்மையாகவே ஒழுங்காக விளையாடவில்லை: வறுத்தெடுத்த சுனில் கவாஸ்கர் | Kohli hasn’t really played well, the method has to differ, says Gavaskar

Spread the love

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் கேப்டன் விராட் கோலி ஒழுங்காக பேட் செய்யவில்லை. அவரின் பேட்டிங்கில் மிகப்பெரிய தொழில்நுட்பச் சிக்கல் இருக்கிறது என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்தார்.

கேப்டன் விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம் கழுதை தேய்ந்து கட்டெறும்பாகிவிட்டதுபோல் இருக்கிறது. 2019-ம் ஆண்டில் விராட் கோலி 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 612 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 2 சதங்கள், 2 அரை சதங்கள். இரு சதங்களுமே இந்தியாவில் அடிக்கப்பட்டவை என்பதை மறந்துவிடக் கூடாது. சராசரி 68 ரன்களாக இருந்தது.

2020-ம் ஆண்டில் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய கோலி 116 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார், ஒரு அரை சதம் மட்டுமே அடித்துள்ளார். இந்த ஆண்டில் கோலியின் சராசரி 19 ரன்கள்தான்.

2021-ம் ஆண்டில் 6 டெஸ்ட் போட்டிகளில் இதுவரை ஆடிய கோலி 229 ரன்கள்தான் சேர்த்துள்ளார். இதில் 2 அரை சதங்கள் அடங்கும், சராசரி 25 ரன்கள்தான். மூன்று முறை டக் அவுட் ஆகியுள்ளார்.

2018-ம் ஆண்டில் 10 டெஸ்ட் போட்டிகளில் 4 சதங்கள், 2 அரை சதங்கள் உள்பட 1,036 ரன்கள் சேர்த்த கோலி, 2019, 2020, 2021 ஆகிய 3 ஆண்டுகளில் சேர்த்து 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 2 சதங்கள், 5 அரை சதங்கள் உள்ளிட்ட, 957 ரன்கள்தான் சேர்த்துள்ளார்.

அதாவது 2018-ம் ஆண்டில் ஆயிரம் ரன்களுக்கு மேல் சேர்த்த விராட் கோலி, கடந்த 3 ஆண்டுகளாக 17 டெஸ்ட்போட்டிகளில் விளையாடி ஆயிரம் ரன்களைக் கூட எட்ட முடியவில்லை என்றால், அவரின் பேட்டிங் திறமை எங்கு போனது?

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியிலும் கேப்டன் கோலி அரை சதம் அடிக்கக் கூட திணறி, ஆப்ஃசைடில் விலகிச் செல்லும் பந்தைத் தொட்டு ஆட்டமிழந்துள்ளார்.

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

”லார்ட்ஸ் மைதானத்தில் 2-வது இன்னிங்ஸில் சாம் கரன் பந்துவீச்சில் கோலி ஆட்டமிழந்தவிதம் எனக்கு அதிருப்தியளிக்கிறது. சிறந்த வீரர், 8 ஆயிரம் ரன்கள் வரை கோலி அடித்துள்ளார். ஆனால், அவரின் பேக் அண்ட் கிராஸ் நகர்வு ஆட்டம் திருப்திகரமாக இல்லை.

ஆஃப் சைடுக்கு வெளியே செல்லும் பந்தை ஆடும் கோலியின் பேட்டிங் முறை மோசமாக இருக்கிறது. விரைவாகவே பேட்டை நகர்த்தி விடுகிறார். இந்த முறை காலையும் சேர்த்து நகர்த்தி விக்கெட்டை எளிதாகக் கொடுத்துவிட்டார். இதன் மூலம் கோலி ஒழுங்காக பேட் செய்யவில்லை என்பது தெரிகிறது.

பேட்ஸ்மேன்களுக்கு ரன் அடிக்க வேண்டும் என்ற நோக்கம் இருக்க வேண்டும். ஆனால், டெஸ்ட் போட்டியில் ஒவ்வொரு வீரரும் ரன் ஸ்கோர் செய்ய நினைத்தாலும் அவர்கள் கையாளும் முறை வேறுபட்டதாக இருக்க வேண்டும்.

இது டெஸ்ட் போட்டி ஒவ்வொரு பேட்ஸ்மேனும் தனித்தன்மையுடன் விளையாட வேண்டும், தனித்தன்மையை தேட வேண்டும். ஆனால், கோலியிடம் இப்போது அது இல்லை.

டி20 , ஒருநாள் போட்டிகள் வேறுபட்டவை. வெவ்வேறு சூழலில் விளையாடப்படுபவை. ஆனால், டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரை, நீண்ட நேரம் நிலைத்துப் பழங்கால முறைப்படி விளையாட வேண்டும், களத்தில் போராட வேண்டும். இவை விராட் கோலியிடம் இல்லை”.

இவ்வாறு கவாஸ்கர் தெரிவித்தார்.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: