வெலிங்டன்: வங்கதேசத்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் அசத்திய நியூசிலாந்து அணி 164 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 3–0 என தொடரை முழுமையாக கைப்பற்றி கோப்பை வென்றது.
நியூசிலாந்து சென்றுள்ள வங்கதேச அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டிகளில் வென்ற நியூசிலாந்து 2–0 என, ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. மூன்றாவது போட்டி வெலிங்டனில் நடந்தது.
‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்’ செய்த நியூசிலாந்து அணிக்கு மார்டின் கப்டில் (26), ஹென்றி நிக்கோல்ஸ் (18), ராஸ் டெய்லர் (7), கேப்டன் டாம் லதாம் (18) ஏமாற்றினர். அபாரமாக ஆடிய டேவன் கன்வே (126), டேரில் மிட்செல் (100*) ஒருநாள் அரங்கில் முதல் சதத்தை பதிவு செய்தனர். நியூசிலாந்து அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 318 ரன்கள் குவித்தது.
கடின இலக்கை விரட்டிய வங்கதேச அணிக்கு நியூசிலாந்து பவுலர்கள் தொல்லை தந்தனர். மாட் ஹென்றி ‘வேகத்தில்’ கேப்டன் தமிம் இக்பால் (1), லிட்டன் தாஸ் (21), சவுமியா சர்கார் (1) அவுட்டாகினர். ஜேம்ஸ் நீஷாம் பந்தில் முஷ்பிகுர் ரஹிம் (21), மெஹிதி ஹசன் மிராஸ் (0), முஸ்தபிஜுர் ரஹ்மான் (0) சரணடைந்தனர். பொறுப்பாக ஆடிய மகமதுல்லா (76*) அரைசதம் கடந்தார்.
வங்கதேச அணி 42.4 ஓவரில் 154 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. நியூசிலாந்து சார்பில் நீஷாம் 5, ஹென்றி 4 விக்கெட் கைப்பற்றினர். ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருதுகளை கன்வே வென்றார்.
Advertisement