கோப்பை வென்றது இந்தியா: கடைசி ஓவரில் ‘டென்ஷன்’ வெற்றி

Spread the love


புனே: மூன்றாவது ஒருநாள் போட்டியின் கடைசி கட்ட பரபரப்பை ரசிகர்கள் ‛என்ஜாய்’ பண்ணினர். திக்..திக்..கடைசி ஓவரில் நடராஜன் அசத்த, இந்திய அணி 7 ரன்னில் ‛திரில்’ வெற்றி பெற்றதும், ‛குக்கூ… குக்கூ’ என ஆடிப்பாடி மகிழ்ந்தனர். தொடரை 2–1 என வென்ற இந்தியா, கோப்பை கைப்பற்றியது. இங்கிலாந்து சார்பில் சாம் கர்ரான்(95) போராட்டம் வீணானது. 

இந்தியா வந்த இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதல் இரு போட்டி முடிவில், தொடர் 1–1 என சமனில் இருந்தது. வெற்றியாளரை நிர்ணயிக்கும்மூன்றாவது போட்டி புனேயில் நடந்தது. இந்திய அணியில் குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு, தமிழக வேகப்பந்துவீச்சாளர் நடராஜன் இடம் பெற்றார். ‘டாஸ்’ ஜெயித்த இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.  

நல்ல அடித்தளம்: இந்திய அணிக்கு ரோகித் சர்மா, தவான் சேர்ந்து நல்ல ‘ஓபனிங்’ கொடுத்தனர். இருவரும் பவுண்டரி மழை பொழிய, 8 ஓவரில் 53 ரன்கள் எடுக்கப்பட்டன. 44 பந்தில் தவான் அரைசதம் எட்டினார். முதல் விக்கெட்டுக்கு 103 ரன்கள் சேர்த்த போது, ரஷித் சுழலில் ரோகித் சர்மா(37) போல்டானார். சிறிது நேரத்தில் ரஷித் வலையில் தவானும்(67) சிக்கினார். மொயீன் அலி பந்தில் கேப்டன் கோஹ்லி(7) போல்டானார். லோகேஷ் ராகுல்(7) ஏமாற்றினார்.

பின் ஹர்திக் பாண்ட்யா, ரிஷாப் பன்ட் மிரட்டினர். இங்கிலாந்து பந்துவீச்சை துவம்சம் செய்த இவர்கள், அதிவிரைவாக ரன் சேர்த்தனர். மொயீன் அலி வீசிய போட்டியின் 28வது ஓவரில் ஹர்திக் 3 சிக்சர்கள் விளாச, மொத்தம் 20 ரன்கள் எடுக்கப்பட்டன. அரைசதம் கடந்த ரிஷாப், 78 ரன்களில் வெளியேறினார். 36 பந்தில் அரைசதம் எட்டிய ஹர்திக், 64 ரன்னில் அவுட்டானார். கடைசி கட்டத்தில் ஷர்துல் தாகூர்(30), குர்னால் பாண்ட்யா(25) கைகொடுக்க, இந்திய அணி 48.2 ஓவரில் 329 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

‘வேகம்’ அமோகம்: கடின இலக்கை துரத்திய இங்கிலாந்து அணியின் ‘டாப்–ஆர்டரை’ இந்திய வேகங்கள் தகர்த்தனர். புவனேஷ்வர் வீசிய முதல் ஓவரில் 4 பவுண்டரி விளாசிய ஜேசன் ராய்(14), 6வது பந்தில் போல்டானார். பேர்ஸ்டோவையும்(1) வெளியேற்றினார் புவனேஷ்வர். ‘ஆபத்தான’ பென் ஸ்டோக்ஸ்(35), நடராஜன் வேகத்தில் நடையை கட்டினார். ஷர்துல் தாகூர் பந்தில் ஜோஸ் பட்லர்(15), ‘ரிவியு’ முறையில் அவுட்டாக, இங்கிலாந்து அணி 15.1 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 95 ரன்கள் எடுத்து தத்தளித்தது. 

தாகூர் கலக்கல்: பின் டேவிட் மலான், லிவிங்ஸ்டோன் இணைந்து போராடினர். இந்த நேரத்தில் தாகூர் திருப்பம் ஏற்படுத்தினார். இவரது வேகத்தில் லிவிங்ஸ்டோன்(36), மலான்(50) வெளியேற, இந்தியாவுக்கு நிம்மதி பிறந்தது. புவனேஷ்வரிடம் மொயீன் அலி(29) வீழ்ந்தார். தாகூர் பந்தை அடித்த ரஷித்(19), கோஹ்லியில் சூப்பர் கேட்ச்சில் அவுட்டானார். கடைசி கட்டத்தில் துணிச்சலாக ஆடிய சாம் கர்ரான் தொல்லை தந்தார். 

ஹீரோ நடராஜன்: கடைசி ஓவரில் இங்கிலாந்து வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்டன. கைவசம் 2 விக்கெட் மட்டுமே இருந்தது. நடராஜன் பந்துவீசினார். முதல் பந்தில் மார்க் உட்(14) ரன் அவுட்டானார். தொடர்ந்து கட்டுக் கோப்பாக பந்துவீசிய நடராஜன், 6 ரன் மட்டுமே விட்டுக் கொடுத்தார். இங்கிலாந்து அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 322 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. சாம் கர்ரான்(95), டாப்லி(1) அவுட்டாகாமல் இருந்தனர். 

இந்தியா சார்பில் ஷர்துல் தாகூர் 4, புவனேஷ்வர் 3 விக்கெட் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருதை இங்கிலாந்தின் சாம் கர்ரான் வென்றார். தொடர் நாயகன் விருதை இங்கிலாந்தின் பேர்ஸ்டோவ் கைப்பற்றினார்.

 

இரண்டு முறை

இங்கிலாந்து தொடரில் விளையாடிய 12 போட்டிகளில் (4 டெஸ்ட், 5 ‘டுவென்டி–20’, 3 ஒருநாள்) இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி, 2 முறை (2வது டெஸ்ட், 2வது ‘டுவென்டி–20’) மட்டுமே ‘டாஸ்’ வென்றார். மீதமுள்ள 10 போட்டிகளில் ‘டாஸ்’ (3 டெஸ்ட், 4 ‘டுவென்டி–20’, 3 ஒருநாள் போட்டி) இழந்தார். இதில் தொடர்ச்சியாக 6 போட்டிகளில் (3 ‘டுவென்டி–20’, 3 ஒருநாள் போட்டி) ‘டாஸ்’ இழந்தார்.

 

‘ஹாட்ரிக்’ கோப்பை

இங்கிலாந்துக்கு எதிரான  டெஸ்ட் தொடரை 3–1 எனக் கைப்பற்றிய இந்தியா, ‘டுவென்டி–20’ தொடரை 3–2 என வென்றது. தொடர்ந்து அசத்திய இந்திய அணி ஒருநாள் தொடரை 2–1 என தன்வசப்படுத்தியது. இதனையடுத்து ‘ஹாட்ரிக்’ கோப்பை கைப்பற்றியது.

 

219 ரன்கள்

அதிக ரன் சேர்த்த பேட்ஸ்மேன்கள் வரிசையில் இங்கிலாந்தின் பேர்ஸ்டோவ் முதலிடம் பிடித்தார். இவர், 3 போட்டியில், ஒரு சதம், ஒரு அரைசதம் உட்பட 219 ரன்கள் குவித்தார். அடுத்த மூன்று இடங்களை இந்தியாவின் லோகேஷ் ராகுல் (177 ரன், 3 போட்டி, ஒரு சதம், ஒரு அரைசதம்), ஷிகர் தவான் (169 ரன், 3 போட்டி, 2 அரைசதம்), ரிஷாப் பன்ட் (155 ரன், 2 போட்டி, 2 அரைசதம்) கைப்பற்றினர்.

 

7 விக்கெட்

அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில் இந்தியாவின் ஷர்துல் தாகூர் முதலிடத்தை கைப்பற்றினார். இவர், 3 போட்டியில் 7 விக்கெட் சாய்த்தார். அடுத்த நான்கு இடங்களை முறையே இந்தியாவின் புவனேஷ்வர் குமார் (6 விக்கெட்), பிரசித் கிருஷ்ணா (6), இங்கிலாந்தின் மார்க் உட் (5), பென் ஸ்டோக்ஸ் (4) பிடித்தனர்.

 

அடுத்து ஐ.பி.எல்.,

இங்கிலாந்து தொடர் முடிந்த நிலையில் இந்திய வீரர்கள் வரும் ஏப். 9ல் துவங்கவுள்ள 14வது ஐ.பி.எல்., சீசனில் பங்கேற்க உள்ளனர்.

 

70 சிக்சர்

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 70 சிக்சர் அடிக்கப்பட்டது. இதில் இந்தியா சார்பில் 33, இங்கிலாந்து சார்பில் 37 சிக்சர் பதிவாகின. அதிகபட்சமாக இங்கிலாந்தின் பேர்ஸ்டோவ் 14 சிக்சர் பறக்கவிட்டார். இந்தியாவின் ரிஷாப் பன்ட், இங்கிலாந்தின் ஸ்டோக்ஸ் தலா 11 சிக்சர் விளாசினர்.

இதன்மூலம் 4 அல்லது அதற்கு குறைவான போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அதிக சிக்சர் பதிவானது.

 

9 முறை

இந்திய அணி கேப்டன் கோஹ்லி, அடில் ரஷித் பந்தில் அவுட்டானார். இதன்மூலம் சர்வதேச அரங்கில் அதிக முறை கோஹ்லியை அவுட்டாக்கிய பவுலர்கள் பட்டியலில் 2வது இடத்தை சகவீரர் மொயீன் அலியுடன் பகிர்ந்து கொண்டார். இவர்கள் இருவரும் தலா 9 முறை கோஹ்லியை வெளியேற்றினர். முதலிடத்தில் நியூசிலாந்தின் டிம் சவுத்தீ (10 முறை) உள்ளார்.

 

ஹர்திக் பாண்ட்யா நன்றி

புவனேஷ்வர் வீசிய 4.4வது ஓவரில் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் (15 ரன்) துாக்கி அடித்த பந்தை ஹர்திக் பாண்ட்யா நழுவவிட்டார். இந்நிலையில் நடராஜன் வீசிய 10.3வது ஓவரில் ஸ்டோக்ஸ் (35 ரன்) துாக்கி அடித்த பந்தை ஷிகர் தவான் கச்சிதமாக பிடித்தார். அப்போது ஹர்திக் பாண்ட்யா, தவானுக்கு கைகூப்பி நன்றி தெரிவித்தார்.

 

17 முறை

இந்தியாவின் ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 103 ரன் சேர்த்தது. இந்த ஜோடி, 17வது முறையாக 100 அல்லது அதற்கு மேல் ரன் சேர்த்தது. இதன்மூலம் ஒருநாள் போட்டி அரங்கில், அதிக முறை இம்மைல்கல்லை எட்டிய துவக்க ஜோடி வரிசையில் ஆஸ்திரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்ட்–மாத்யூ ஹைடன் (16 முறை) ஜோடியை முந்தி 2வது இடம் பிடித்தது. முதலிடத்தில் இந்தியாவின் சச்சின்–கங்குலி (21 முறை) ஜோடி உள்ளது.

* ரோகித்–தவான் ஜோடி (17), ஒருநாள் போட்டியில் அதிகமுறை 100 அல்லது அதற்கு மேல் ரன் சேர்த்த ஜோடி வரிசையில் 4வது இடம் பிடித்தது. முதல் மூன்று இடங்களில் இந்தியாவின் சச்சின்–கங்குலி (26), இலங்கையின் தில்ஷன்–சங்ககரா (20), இந்தியாவின் கோஹ்லி–ரோகித் (18) ஜோடி உள்ளன.

 

5023 ரன்கள்

இந்தியாவின் ரோகித், தவான் ஜோடி, 80வது ரன்னை எடுத்த போது ஒருநாள் போட்டி அரங்கில் 5000 ரன்கள் சேர்த்த 7வது ஜோடியானது. இந்த ஜோடி 112 இன்னிங்சில், 5023 ரன்கள் குவித்துள்ளது. அதிக ரன் சேர்த்த ஜோடி வரிசையில் இந்தியாவின் சச்சின்–கங்குலி ஜோடி (8227 ரன், 176 இன்னிங்ஸ்) முன்னிலை வகிக்கிறது.

 

95 ரன்கள்

இங்கிலாந்தின் சாம் கர்ரான் 95* ரன் விளாசினார். இதன்மூலம் ஒருநாள் போட்டி அரங்கில், ‘பேட்டிங்’ வரிசையில் 8வது இடத்தில் களமிறங்கி அதிக ரன் எடுத்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை சகவீரர் கிறிஸ் வோக்சுடன் பகிர்ந்து கொண்டார். கடந்த 2016ல் நாட்டிங்காமில் நடந்த இலங்கைக்கு எதிரான போட்டியில் வோக்ஸ், 95 ரன் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.

 

தொடரும் சோகம்

இந்திய மண்ணில் இங்கிலாந்தின் சோகம் தொடர்கிறது. கடந்த 15 ஆண்டுகளில் இரு அணிகள் மட்டும் மோதும் தொடரில் (‘பைலேட்ரல் சீரிஸ்’) பங்கேற்க 6 முறை (2006, 2008, 2011, 2013, 2017, 2021) இந்தியா வந்த இங்கிலாந்து அணி ஒரு முறை கூட தொடரை வென்றதில்லை.

 

651 ரன்கள்

இப்போட்டியில் இந்தியா (329), இங்கிலாந்து (322) அணிகள் இணைந்து 651 ரன்கள் குவித்தன. இதில் இரு அணிகளை சேர்ந்த ஒரு வீரர் கூட சதமடிக்கவில்லை. இதன்மூலம் ஒருநாள் போட்டி அரங்கில், ஒரு வீரர் கூட சதமடிக்காமல் அதிக ரன்கள் சேர்த்த போட்டிகள் வரிசையில் 2வது இடம் பிடித்தது. கடந்த 2002ல் போர்ட் எலிசபெத்தில் நடந்த தென் ஆப்ரிக்கா (326), ஆஸ்திரேலியா (330) அணிகள் மோதிய போட்டியில் 656 ரன்கள் குவிக்கப்பட்டது. ஆனால் ஒருவர் கூட சதமடிக்கவில்லை.

Advertisement

THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: