“காஷ்மீர் பிரச்னையை தீர்த்தால் மட்டுமே அமைதி சாத்தியம்” – மோடிக்கு இம்ரான் கான் கடிதம் | We too want peaceful relations, writes Imran Khan to Modi | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online

Spread the love


We-too-want-peaceful-relations--writes-Imran-Khan-to-Modi

“காஷ்மீர் பிரச்னையை தீர்த்தால் மட்டுமே அமைதி சாத்தியம்” என்று பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடிதம் எழுதியுள்ளார்.

பாகிஸ்தான் தினத்தை முன்னிட்டு வாழ்த்துகளைத் தெரிவிக்க கடந்த வாரம் பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில், “பாகிஸ்தானுடனான நல்லுறவை இந்தியா விரும்புகிறது. ஒரு அண்டை நாடாக இணக்கமான உறவையே பேண விரும்புகிறோம். அது நிறைவேற, நம்பிக்கையான சூழல் அமைய வேண்டும். ஆனால், அதற்குத் தீவிரவாதமும் வெறுப்பும் ஒழிக்கப்பட வேண்டும்” என்று கூறியிருந்தார்.

மோடியின் இந்தக் கடிதத்திற்கு இம்ரான் கான் பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ள இம்ரான் கான், “பாகிஸ்தான் தினத்தில் வாழ்த்துகளைத் தெரிவித்த உங்கள் கடிதத்திற்கு நான் நன்றி கூறுகிறேன். பாகிஸ்தான் மக்களும் இந்தியா உட்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் அமைதியான கூட்டு உறவை விரும்புகிறார்கள்.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலுவையில் உள்ள அனைத்து பிரச்னைகளையும், குறிப்பாக ஜம்மு – காஷ்மீர் பிரச்னையையும் தீர்த்து, தெற்காசியாவில் நீடித்த அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை தொடர்ந்து நிலவச் செய்ய முடியும் என்று நம்புகிறோம்.

பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையில், குறிப்பாக ஜம்மு – காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண ஓர் ஆக்கபூர்வமான மற்றும் முடிவு சார்ந்த உரையாடலுக்கு தகுந்த சூழலை உருவாக்குவது அவசியம். காஷ்மீர் போன்ற நிலுவையில் உள்ள பிரச்னைகள் தீர்க்கப்பட்டால் மட்டுமே அமைதி சாத்தியமாகும்” என்று இம்ரான் கான் கூறியுள்ளார்.

மேலும், கொரோனா தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இந்திய மக்களுக்கு வாழ்த்தும் தெரிவித்தார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்.

முன்னதாக, சில வாரங்களுக்கு முன்பு தான், “பாகிஸ்தானுடன் சுமுகமாக செல்வதன் மூலம் இந்தியா பொருளாதார ரீதியாக பயனடைகிறது. ஏனெனில், இந்திய அரசால் பாகிஸ்தான் பிரதேசத்தின் வழியாக வளங்கள் நிறைந்த மத்திய ஆசிய பிராந்தியத்தை நேரடியாக அணுக முடியும். இதில் இந்தியா முதல் படியை எடுத்து வைக்க வேண்டியிருக்கும்.

இந்தியா அவ்வாறு செய்யாவிட்டால், எங்களால் எதுவும் செய்ய முடியாது. மத்திய ஆசிய பிராந்தியத்திற்கு நேரடி பாதை வழியாக செல்வது இந்தியாவுக்கு பொருளாதார ரீதியாக பயனளிக்கும். மத்திய ஆசியாவில் எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் நிறைந்துள்ளது” என்று இம்ரான் கான் கூறியிருந்தார். இதேபோல் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வாவும் இந்தியாவுடன் இணக்கமான சூழல் குறித்து விரிவாக பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *