காக்க காக்க… ‘பேட்டிங்’ காக்க * இந்திய ரசிகர்கள் எதிர்பார்ப்பு

Spread the love


லண்டன்: ஓவல் டெஸ்டில் பேட்ஸ்மேன்கள் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இந்திய அணியை காப்பாற்ற வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். 

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று டெஸ்ட் முடிவில் தொடர் 1–1 என சமனில் உள்ளது. நான்காவது டெஸ்ட், லண்டன், கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 191 ரன் எடுத்தது. முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 53 ரன் எடுத்து, 138 ரன் பின்தங்கி இருந்தது. 

உமேஷ் நம்பிக்கை

நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. வேகத்தில் மிரட்டிய உமேஷ் யாதவ், தனது முதல் ஓவரில் ‘நைட் வாட்ச்மேன்’ ஓவர்டனை (1) வெளியேற்றினார். மீண்டும் அசத்திய இவரது பந்தில், டேவிட் மலான் (31) கொடுத்த ‘கேட்ச்சை’ ரோகித் சர்மா கலக்கலாக பிடித்து கைகொடுத்தார். 

ரன் வேகம்

அடுத்து போப், பேர்ஸ்டோவ் இணைந்தனர். இருவரும் வேகமாக ரன்கள் சேர்த்தனர். ஷர்துல் வீசிய 31 வது ஓவரில் போப், மூன்று பவுண்டரி அடித்தார். மறுபக்கம் சிராஜ் ஓவரில், பேர்ஸ்டோவ் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி விளாச, ஸ்கோர் 100 ஐ கடந்தது. ஒரு கட்டத்தில் அணியின் ரன்ரேட், 6.60 ஆக அதிகரித்தது. 

தொடர்ந்து இந்த ஜோடியை பிரிக்க கோஹ்லி எடுத்த எந்த முயற்சிக்கும் பலன் கிடைக்கவில்லை. ஆறாவது விக்கெட்டுக்கு 89 ரன் சேர்த்த நிலையில், முகமது சிராஜ் ‘வேகத்தில்’ ஒருவழியாக பேர்ஸ்டோவ் (37) வெளியேறினார். 

போப் அரைசதம்

போப், டெஸ்ட் அரங்கில் 6 வது அரைசதம் அடித்தார். ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக அமைய இங்கிலாந்து அணி, இந்தியாவை முந்தியது. ஒருகட்டத்தில் 62/5 என இருந்த இங்கிலாந்து விரைவாக முன்னேறி 221/6 என்ற நிலைக்கு சென்றது. இந்நிலையில் ஜடேஜா சுழலில் மொயீன் அலி (35), ராபின்சன் (5) சிக்கினர். போப்பை (81) ஷர்துல் போல்டாக்கினார். வோக்ஸ் (50) அரைசதம் அடித்து அவுட்டானார். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 290 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. உமேஷ் யாதவ் 3, பும்ரா 2, ஜடேஜா 2 விக்கெட் வீழ்த்தினர்.

முதல் இன்னிங்சில் 99 ரன் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை துவக்கிய இந்திய அணி இரண்டாவது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் எடுத்திருந்தது. ரோகித் (20), ராகுல் (22) அவுட்டாகாமல் இருந்தனர். இன்னும் 56 ரன்கள் பின்தங்கியுள்ள நிலையில் இன்று பேட்ஸ்மேன்கள் கைகொடுத்தால், இந்திய அணியை காப்பாற்றலாம். 

15,000

நேற்று 12 ரன் எடுத்த போது, மூன்று வித கிரிக்கெட்டிலும் சேர்த்து 15,000 ரன்கள் எடுத்த 8வது இந்திய வீரர் ஆனார் ரோகித் சர்மா. இவர் 42 டெஸ்டில் 2917, 227 ஒருநாள் போட்டிகளில் 9205, 111 சர்வதேச ‘டுவென்டி–20’ ல் 2864 என மொத்தம் 15,008 ரன்கள் எடுத்துள்ளார். 

* முதல் மூன்று இடங்களில் சச்சின் (34,357 ரன்), டிராவிட் (24,208), கோஹ்லி (23,049) உள்ளனர். 

 

இது சரியா ஷமி

இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. நேற்று இவருக்கு 31வது பிறந்த நாள். ஓவல் டெஸ்டில் ஓய்வெடுத்து வரும் ஷமியை நேற்று, காலரியில் இருந்த ரசிகர்கள் ‘கேக்கை’ காண்பித்து அழைத்தனர். சிரித்துக் கொண்டே அருகில் சென்ற ஷமி, ரசிகரிடம் இருந்த பிறந்தநாள் ‘கேக்கை’ வெட்டி மகிழ்ந்தார். இந்திய வீரர்கள் கொரோனா பாதுகாப்பில் உள்ள நிலையில் ஷமியில் இச்செயல், அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

அத்துமீறும் ரசிகர் * பாதுகாப்பில் அலட்சியம்

லண்டன்: இங்கிலாந்து தொடரில் டேனியல் ஜார்விஸ் என்ற ரசிகர் தொடர்ந்து அத்துமீறுகிறார். லார்ட்சில் நடந்த இரண்டாவது டெஸ்ட், 4வது நாளில் இந்திய அணியினர் பீல்டிங் செய்த போது, இந்திய ‘ஜெர்சியுடன்’ பீல்டிங் செய்ய மைதானத்துக்குள் புகுந்தார். மீண்டும் இத்தவறை செய்ய மாட்டார் என்ற எண்ணத்தில் பாதுகாவலர்கள் விடுவித்தனர்.

* லீட்ஸ் டெஸ்டில் ரோகித் சர்மா அவுட்டானதும், இந்திய வீரர்கள் ‘ஜெர்சி’ அணிந்து, காலில் ‘பேடு’, கையில் பேட்டுடன் இரண்டாவது முறையாக மைதானத்துக்குள் புகுந்தார். ஆடுகளத்தில் பேட்டிங் செய்யத் தயாரானார். இதையடுத்து இம்மைதானத்தில் நுழைய ஜார்விசிற்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.

* நேற்று மூன்றாவது முறையாக மைதானத்துக்குள் புகுந்தார் ஜார்விஸ். இம்முறை உமேஷ் யாதவ் பவுலிங் செய்யத் தயாராக நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென புகுந்த இவர், பவுலர் போல வேகமாக ஓடிசென்று பந்து வீசுவது போல ‘ஆக் ஷன்’ செய்தார். அப்போது, அங்கிருந்த பேர்ஸ்டோவ் மீது மோதினார்.

அனைவரும் கொரோனா பாதுகாப்பு வளையத்தில் உள்ள நிலையில் தொடர்ந்து மூன்று டெஸ்டில், ஜார்விஸ் இப்படிச் செய்தது, வீரர்கள் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியது.

150

ஓவல் டெஸ்டில் 2 விக்கெட் சாய்த்த உமேஷ் யாதவ், டெஸ்ட் அரங்கில் 150 விக்கெட் என்ற மைல்கல்லை எட்டினார்.

* அதிக டெஸ்ட் விக்கெட் சாய்த்த இந்திய வேகப்பந்து வீச்சாளர்களில் 6வது இடம் பிடித்தார் உமேஷ் யாதவ். முதல் ஐந்து இடங்களில் கபில் தேவ் (434), ஜாகிர் கான் (311), இஷாந்த் சர்மா (311), ஸ்ரீநாத் (236), முகமது ஷமி (295) உள்ளனர். 7, 8 வது இடங்களில் கார்சன் காவ்ரி (109), இர்பான் பதான் (100) உள்ளனர்.

* தவிர 150 விக்கெட் என்ற இலக்கை அதிவேகமாக எட்டிய இந்திய பவுலர்களில் கபில்தேவ் (39 போட்டி), ஸ்ரீநாத் (40), ஷமிக்கு (42) அடுத்து உள்ளார் உமேஷ் யாதவ் (48).

Advertisement

THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: