களமிறங்குகிறது இந்திய கால்பந்து அணி * ஓமன் அணியுடன் மோதல்

Spread the love


துபாய்: கொரோனாவுக்குப் பின் முதன் முறையாக இந்திய கால்பந்து அணி சர்வதேச போட்டியில் களமிறங்குகிறது. துபாயில் நடக்கும் இப்போட்டியில் ஓமனை சந்திக்கிறது.

இந்திய கால்பந்து அணி, உலகத் தரவரிசையில் 104வது இடத்தில் உள்ளது. கடைசியாக 2019, நவம்பர் மாதம் சர்வதேச போட்டியில் பங்கேற்றது. இதன் பின் கொரோனா காரணமாக போட்டிகள் தடைபட்டன. தற்போது 15 மாதங்களுக்குப் பின் இந்திய அணி சர்வதேச போட்டியில் இன்று களமிறங்குகிறது. துபாயில் நடக்கும் நட்பு கால்பந்தில் ஓமனை சந்திக்கிறது.

செத்ரி இல்லை

கொரோனா தொற்று காரணமாக கேப்டன் சுனில் செத்ரி, இந்த போட்டியில் பங்கேற்கவில்லை. இந்திய அணிக்காக அதிக கோல் அடித்த இவர் இல்லாமல், 2019ல் நடந்த உலக கோப்பை தகுதிச்சுற்றில் இந்தியா (எதிர்–கத்தார்) ஒரு கோல் கூட அடிக்கவில்லை. இருப்பினும் சராசரி வயது 24க்கும் சற்று அதிகமாக உள்ள இளம் இந்திய அணி, இம்முறை சிறப்பாக செயல்படும் என நம்பப்படுகிறது.

ஆகாஷ் மிஸ்ரா, லிஸ்டன், இஷான் பண்டிட்டா, பிபின் சிங்குடன், ‘சீனியர்’ வீரர்கள் அம்ரிந்தர் சிங், சிங்ளன்சனா, ராவ்லின் போர்கஸ், சாங்டே உள்ளிட்டோர் சமீபத்திய ஐ.எஸ்.எல்., தொடரில் பங்கேற்ற அனுபவத்துடன் களமிறங்குகின்றனர். உலக கோப்பை தொடர் (கத்தார், 2022) வாய்ப்பை இழந்து விட்டாலும், 2023 ஆசிய கோப்பைக்கு முன்னேற முயற்சிக்கும் இந்திய அணிக்கு இப்போட்டி பயிற்சியாக அமையும்.

ஓமன் பலம்

தரவரிசையில் 81வது இடத்தில் உள்ளது ஓமன். 2019ல் இந்தியாவுக்கு எதிராக மோதிய உலக கோப்பை தகுதிச்சுற்றின் இரு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. வளைகுடா நாடுகளுக்கு இடையிலான ‘கல்ப்’ கோப்பை தொடரில் குவைத், சவுதி அரேபியாவுடன் தோற்றது. கடந்த வாரம் ஜோர்டன் அணிக்கு எதிராக கோல் எதுவும் இல்லாமல் ‘டிரா’ செய்ததால், இன்று நம்பிக்கையுடன் விளையாட காத்திருக்கிறது.

யார் ஆதிக்கம்

இந்தியா, ஓமன் அணிகள் சர்வதேச கால்பந்தில் கடந்த பத்தாண்டுகளில் 6 முறை மோதின. இதில் இந்தியா ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. ஓமன் அணி ஐந்தில் வெற்றி பெற்றது. ஒரு போட்டி ‘டிரா’ ஆனது.

Advertisement

THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *