கரோனா வைரஸ் வவ்வால்கள் மூலம் நேரடியாக மனிதர்களுக்குப் பரவவில்லை: எப்படிப் பரவியது? சீனாவில் ஆய்வு செய்த உலக சுகாதார அமைப்பு புதிய தகவல் | AP Exclusive: WHO report says animals likely source of COVID

Spread the love


சீனாவில் உருவாகி, உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பரவிய கரோனா வைரஸ், வவ்வால்கள் மூலம் நேரடியாக மனிதர்களுக்குப் பரவவில்லை. இடையே மற்றொரு விலங்கும் இருந்துள்ளது என்று சீனாவில் ஆய்வு செய்த உலக சுகாதார அமைப்பின் மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சீனாவில் 2019-ம் ஆண்டு உருவான கரோனா வைரஸ், இன்று உலகம் முழுவதையும் ஆட்டிப் படைக்கிறது. உலக அளவில் கரோனாவுக்கு 12.70 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏறக்குறைய 28 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால், இதுவரை கரோனா வைரஸ் எங்கிருந்து பரவியது எனத் தெளிவான தகவல் இல்லை.

சீனாவில் உள்ள ஆய்வகங்களில் இருந்து கரோனா வைரஸ் பரவியது என்றும், வூஹானில் உள்ள மீன் சந்தையில் இருந்து கரோனா வைரஸ் பரவியது என்றும் பல்வேறு தகவல்கள் உருவாகின.

சீனாவில் உலக சுகாதார அமைப்பின் ஆய்வுக் குழுவினர் சென்று ஆய்வு நடத்த வேண்டும், கரோனா வைரஸ் எங்கிருந்து பரவியது, அதன் மூலாதாரம் என்ன, ஆய்வகங்களில் இருந்து பரவியதா என்பது குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கோரிக்கை விடுத்தன.

இதையடுத்து உலக சுகாதார அமைப்பு சீனாவில் ஆய்வு செய்ய முடிவு செய்தது. ஆனால், சீனாவில் ஆய்வு செய்ய அந்நாட்டு அரசு தொடக்கத்தில் மறுத்துவிட்டது. பின்னர் உலக நாடுகளின் அழுத்தம் காரணமாக உலக சுகாதார அமைப்பைச் சேர்ந்த ஆய்வுக் குழுவினர் சீனா சென்று ஆய்வு நடத்த அனுமதி வழங்கப்பட்டது.

உலக சுகாதார அமைப்பைச் சேர்ந்த மருத்துவ வல்லுநர் பீட்டர் பென் எம்பார்க் தலைமையிலான குழுவினர் சீனாவின் வூஹான் மாநிலம் சென்று கரோனா வைரஸ் குறித்து கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் ஆய்வு நடத்தினர்.

இந்த ஆய்வு அறிக்கையை அதிகாரபூர்வமாக ஆய்வுக்குழுவினர் இன்னும் வெளியிடவில்லை. அடுத்த சில நாட்களில் ஆய்வறிக்கையை உலக சுகாதார அமைப்பு வெளியிட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், அந்த ஆய்வில் முக்கியத் தகவல் ஒன்று அசோசியேட் பிரஸ் செய்தி நிறுவனத்துக்குக் கசிந்துள்ளது.

அதாவது சீனாவில் உருவான கரோனா வைரஸ், ஆய்வகங்களில் இருந்து நிச்சயம் உருவாக வாய்ப்பில்லை என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. அதேசமயம், கரோனா வைரஸ் வவ்வால்களில் இருந்து பரவியிருக்கலாம். ஆனால், வவ்வால்கள் மூலம் நேரடியாக மனிதர்களுக்குப் பரவாமல், வேறொரு விலங்கின் மூலம் பரவியிருக்கலாம். அது வீட்டில் வளர்க்கும் கீரிப்பிள்ளை அல்லது பூனை இரண்டில் ஒன்றாக இருக்கக்கூடும் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

உணவுப் பொருட்களைப் பாதுகாத்து வைக்கப்படும் குளிர்பதன அறைகள், அங்கு வைக்கப்பட்டிருக்கும் உணவுகள் ஆகியவை மூலமும் கரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என ஆய்வில் கூறப்படுகிறது.

இந்த ஆய்வின் மூலம் விடை தெரியாத பல்வேறு கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் கரோனா வைரஸ் குடும்பத்தோடு ஒத்த அமைப்புடைய வைரஸ், எறும்புத்தின்னி உடலிலும், பூனை, கீரிப்பிள்ளை உடலிலும் இருப்பதால் சந்தேகம் வலுக்கிறது.

THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *