கரோனா பாதிப்பு எதிரொலி; 5-வது டெஸ்ட் போட்டி ரத்து: இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு | Fifth Test between England and India cancelled, confirms ECB

Spread the love

கரோனா பரவல் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோத இருந்த 5-வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. மழையால் பாதிக்கப்பட்ட முதலாவது டெஸ்ட் டிராவில் முடிந்தது. லண்டன் லார்ட்சில் நடந்த 2-வது டெஸ்டில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்திலும், லீட்சில் நடந்த 3-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்திலும், லண்டன் ஓவலில் நடந்த 4-வது டெஸ்டில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன.

5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரில் முன்னிலையில் இருக்கிறது.

மான்செஸ்டரில் இன்று இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி மற்றும் 5-வது போட்டி நடைபெறுவதாக இருந்தது. இதில் வென்று தொடரை கைப்பற்றும் முயற்சியில் கோலி தலைமையிலான இந்திய அணி களமிறங்க தயாராக இருந்தது.

குறிப்பாக ஓவல் டெஸ்டில் இங்கிலாந்துஅணியை 157 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியபின் பெருத்த நம்பிக்கையுடன் இந்திய அணி களமிறங்க தயாராக இருந்தது.

கடைசியாக கடந்த 2007ம் ஆண்டு திராவி்ட் கேப்டன்ஷி்ப்பில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் தொடரை வென்றிருந்தது. இந்த டெஸ்டை டிரா செய்தாலே தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி 14 ஆண்டுகளுக்குப்பின் வென்று சாதனை படைக்கும் நிலை இருந்தது.

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராப்போர்ட் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 3.30 மணிக்கு தொடங்க திட்டமிடப்பட்டு இருந்தது.

ஆனால் 4-வது டெஸ்ட் போட்டியின் போது இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரான 59 வயது ரவிசாஸ்திரிக்கு கடந்த சனிக்கிழமை கரோனா தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோருக்கும் கரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இதனை அடுத்து அவர்கள் 3 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றனர். அத்துடன் அணியின் பிசியோதெரபிஸ்ட் நிதின் பட்டேல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்டார்.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் உதவி பிசியோதெரபிஸ்ட் யோகேஷ் பார்மருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவர் கரோனா தொற்றுக்கு ஆளாகி இருப்பது உறுதியானது. அவர் இந்திய அணி வீரர்களுடன் நெருங்கி பணியாற்றியதால் அணியினர் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அத்துடன் கரோனா தடுப்பு வழிகாட்டுதல் நடைமுறைப்படி இந்திய அணியினர் அனைவரும் ஓட்டல் அறையில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றனர்.

இதனால் இந்திய அணியினர் யாரும் நேற்று பயிற்சியில் ஈடுபடவில்லை. கரோனா பரிசோதனையின் யாருக்கும் தொற்று இல்லை என சோதனை முடிவுகள் வெளியானது. இருந்தாலும் 5 வது டெஸ்ட் போட்டியை ரத்து செய்வதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இந்த டெஸ்ட் தொடரில் இந்தியா 2:1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. 5-வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டதால் தொடரை இந்தியா கைப்பற்றி உள்ளது.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: