கமலும் அரசியல் வியாபாரி தான்!| Dinamalar

Spread the love


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :
ஸ்வாதி, சென்னையிலிருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: நடிகர் கமல், ‘நான் அரசியலுக்கு வந்ததால், 300 கோடி ரூபாய், எனக்கு நஷ்டம்’ எனக் கூறியுள்ளார். இவரை யாரும், ‘அரசியலுக்கு வாருங்கள்’ என, கட்டாயப்படுத்தவில்லையே… அப்படி யாரையும் கட்டாயப்படுத்தமுடியாது என்பதற்கு, அவரின் நண்பர் ரஜினியே உதாரணம்!

latest tamil news

நாட்டுக்கு தொண்டு, மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற மனப்பான்மை உள்ளவர் தான், அரசியலுக்கு வர வேண்டும். அரசியலுக்குள் நுழைந்த பின், லாப — நஷ்ட கணக்குஎல்லாம் பார்க்க கூடாது. அப்படி பார்த்தால், அவர் அரசியல்வாதி கிடையாது; வியாபாரி. ‘கப்பலோட்டிய தமிழன்’ வ.உ.சிதம்பரனார், இப்படி கணக்கு பார்த்து தான், வெள்ளையரை எதிர்த்து, போராடி, தன் சொத்தை இழந்து, சிறையில் செக்கிழுத்தாரா? அரசியலுக்கு வந்தால், எதையும் இழக்க தயாராக இருக்க வேண்டும். லாப — நஷ்ட கணக்கு பார்ப்பவர், அரசியலுக்கு வரக் கூடாது. அப்படி கணக்கு பார்த்தால், அந்த நஷ்டத்தை எப்படி சரி கட்டலாம் என்பதிலேயே, மனம் போகும். எதையும் எதிர்பாராமல், மக்கள் சேவையிலேயே ஈடுபடுபவர் தான், எதையும் சாதித்து, தியாகியாக முடியும்.

latest tamil news

உதாரணமாக, ஹிந்தி நடிகர் சோனு சூட், கொரோனா பேரிடர் காலத்தில், எண்ணற்ற மக்களுக்கு, தன்னால் முடிந்த அளவு உதவி செய்தார். பெயர், புகழ், அதிகாரம் என எதையும், எதிர்பார்க்காமல் அவர் செய்தார். அது தான் உண்மையான சேவை. ‘காலத்தினால் செய்த நன்றி’ என, எப்போதும் அவர் போற்றப்படுவார். அதனால் தான், ‘இண்டிகோ’ நிறுவனம், சோனு சூட் படத்தை, விமானத்தில் வரைந்து, அவருக்கு புகழ் சேர்த்திருக்கிறது. மக்களுக்கு தெரியும், யார் உண்மையான சேவை மனப்பான்மையுடன் அரசியலுக்கு வருகிறார்கள் என்பது. எம்.ஜி.ஆர்., அரசியலுக்கு வரும்போது, இப்படித் தானே தன் சொத்துக்களை இழந்திருப்பார்? ஆனால், ஒரு முறை கூட, அவர் இப்படி சொன்னதாக தெரியவில்லை. நடிகர் கமலும், அரசியலை வியாபாரமாகத் தான் பார்க்கிறார் என்பது, அவரின் பேச்சில் தெரிகிறது. அவர், தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த வரவில்லை.

AdvertisementSource link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *