கத்தாரில் தெருவோர விலங்குகள் சந்திக்கும் சிரமங்களைச் சொல்லில் வடித்து விட முடியாது.
பிரேயா(Freya) வின் முகம் பாதி உருக்குலைந்திருந்தது.
பர்னிக்குக்(Bernie) கடுமையான கத்திக்குத்து, தீப்புண் காயங்கள்…
டியானா (Diana) தன் குட்டிகளை வளர்க்கச் சிரமப்படுகிறது. அதன் உடலில் தோட்டாக்களும் இருக்கின்றன.
மேலே கூறப்பட்டுள்ள விலங்குகள் கத்தாரில் துன்புறுத்தப்பட்ட தெரு நாய்கள்.
வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்து செல்வோர், தாங்கள் வளர்த்த பிராணிகளைப் பெரும்பாலும் அப்படியே கைவிட்டுச் செல்கின்றனர்.
கிருமிப் பரவல் சூழலில் பொழுது போக்குவதற்காக வாங்கப்பட்ட பூனைகளும் நாய்களும், வழக்கநிலைக்குத் திரும்பிக்கொண்டிருக்கும் வேளையில் கைவிடப்படுகின்றன.
கத்தாரில் உலக் கிண்ணக் காற்பந்து 2022ஐ முன்னிட்டு கட்டடக் கட்டுமான பணிகள் நிறைவடையவிருக்கின்றன. அதனால், மேலும் விலங்குகள் குடியிருப்புப் பகுதிகளில் புகலிடம் தேடலாம். அவை துன்புறுத்தலுக்கு ஆளாகலாம் என்று அஞ்சப்படுகிறது.
வாரந்தோறும் சுடப்பட்ட நாய்களையோ வாகனங்களை வைத்து வேண்டுமென்றே தாக்கப்பட்ட நாய்களையோ காப்பாற்ற அழைப்புகள் வருவதாய் மீட்புக் குழு கூறியது.
கத்தாரில் 2004ஆம் ஆண்டு விலங்குவதைக்கு எதிரான சட்டம் இயற்றப்பட்டது. இருப்பினும் அதனைச் செயல்படுத்துவதில் நிலைத்தன்மை இல்லை என்று கூறப்பட்டது.
சமயத்தைக் காரணம் காட்டி சிலர் நாய்களை வதைக்கின்றனர். அது சரியல்ல என்று AFP நிறுவனத்திடம் பேசிய மீட்புக் குழுவினர் கூறினர்.
விலங்குநல மருத்துவமனைகளில் கைவிடப்பட்ட விலங்குகளுக்கான செலவுகள் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. பலர் தாமாக முன்வந்து அத்தகைய விலங்குகளை மீட்டுப் பராமரித்துவருகின்றனர். இருப்பினும் அத்தகையோர் நிதிச் சிரமங்களைச் சந்திக்கின்றனர்.
கத்தாரில் சுமார் 50,000 விலங்குகள் இதுவரை கைவிடப்பட்டிருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. அவற்றின் நிலையை மேம்படுத்த போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும் குறைகூறப்படுகிறது.