கண்ணே கலைமானே…எந்த வயதிலும் வரும் கண் பிரச்சினைகள்

Spread the love

ஐம்புலன்களில் மிகவும் முக்கியமான ஒன்று கண்பார்வை எனச் சொல்லலாம். பார்வையில்லாவிடில் இந்த செய்தித் துணுக்கைக்கூட நம்மால் படிக்க இயலாது.

இளமை, முதுமை இவ்விரு பருவங்களில் கண்பார்வையில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. சிங்கப்பூர்த் தேசியக் கண் பாரமரிப்பு நிலையத்தின் மருத்துவர் சாதியா ஃபரூக்கி (Saadiah Farooqui) சிங்கப்பூரர்களை அதிகம் பாதிக்கும் கண் பிரச்சினைகளைப் பற்றிப் பகிர்ந்துகொள்கிறார்.

முதுமையில் வரக்கூடிய நோய்கள்:

1) கண் புறை நோய்

எப்போது வரும்: 40 வயதிலிருந்து கண் புறை நோய் வரும் சாத்தியம் அதிகரிக்கிறது. ஆனால் பெரும்பாலானோருக்கு 60 வயதைத் தாண்டும் போது வரும் நோய் இது.

எப்படி அடையாளம் காணலாம்: மெல்ல மெல்லக் கண்பார்வை மங்குவது தெரியும்.

பராமரிப்பது எப்படி: முதல் கட்டத்தில் கண்பார்வை மங்கும் போது மூக்குக்கண்ணாடி அணியத் தொடங்க வேண்டும். நாளடைவில் கண்பார்வை மங்கினால் கண் உறை சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.

2) Glaucoma எனப்படும் கண்-அழுத்த நோய்

எப்போது வரும்: 60 வயதைத் தாண்டியவர்கள் அல்லது குடும்பப் பின்னணி உள்ளவர்களுக்கு இளமையில் வரலாம்.

எப்படி அடையாளம் காணலாம்: கண்களில் உள்ள ரத்தக் குழாய் பாதிக்கப்படுவதாலும், கண்களில் ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. இதனால் கண் பார்வை புறப் பகுதிகளில் முதலில் மங்கலாகும், நாளடைவில் கண் பர்வையை இழக்க நேரிடும்.

பராமரிப்பது எப்படி: கண்களில் சொட்டு மருந்து ஊற்றுவது மூலம் நிலைமையைக் கட்டுப்படுத்தலாம். கண்-அழுத்த நோய் வருவதைச் சொந்தமாக அடையாளம் காண்பது கடினம். அதனால் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் கண் பரிசோதனைக்குச் செல்வது முக்கியம்.

சிறுவர்களிடையே வரக்கூடிய கண் பிரச்சினைகள்:

1) Myopia எனும் கிட்டப் பார்வை:

எப்போது வரும்: 4 வயதிலிருந்து பிள்ளைகளுக்குப் கிட்டப் பார்வை வரும் வாய்ப்பு அதிகரிக்கிறது.

எப்படி அடையாளம் காணலாம்: சிறுவர்கள் பார்க்கும் பொருள்களை மிக அருகில் வைத்துப் பார்ப்பது, அல்லது கண்களைச் சுருக்கிப் பார்ப்பது
(squinting) நோய்க்கான அறிகுறிகள்.

பராமரிப்பது எப்படி: சிறு வயதிலேயே அடையாளம் கண்டால் கிட்டப் பார்வையைக் குணப்படுத்தலாம். 4 வயதில் மருத்துவமனையில் உள்ள கண் பரிசோதனைகளை மாணவர்கள் செய்யவேண்டும். திரைகள் அல்லது புத்தகங்களை சிறுவர்கள் முகத்துக்கு மிக அருகில் வைத்துக்கொள்ளாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 30 நிமிடங்களுக்கு ஒரு முறை தூரமாக உள்ளவற்றைப் பார்க்க வேண்டும்.

2) Lazy Eye எனும் வலுவற்ற கண்கள்

எப்போது வரும்: ஒரு கண்ணில் கண் பார்வை சரியாகத் தெரியாத வேளையில் மற்றொரு கண்ணை அதிகம் பயன்படுத்துவது.

எப்படிப் பராமரிப்பது: இளம் வயதில் வருவதால் இந்த நோயையும் குணப்படுத்த முடியும். சரியான மூக்குக்கண்ணாடி அணிந்து, அதன் மீது வில்லைகளை அணிய வேண்டும்.

சிறுவர்கள் 13 வயதாகும் வரை 8-9 மாதங்களுக்கு ஒரு முறை கண்களைப் பரிசோதிக்க வேண்டும் என்று ஆலோசனை கூறுகிறார் டாக்டர் ஃபரூக்கி.

பெரியவர், சிறியவர் யாராக இருந்தாலும் ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைக் கடைப்பிடிக்கவும் அவர் யோசனை கூறுகிறார்.  

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *