கடும்போட்டிக்கு பிறகு வெள்ளி…பாராலிம்பிக்கில் கலக்கிய இளம் வீரர் பிரவீன்! – Praveen Kumar a Indian athlete won Silver medal in T44 High Jump event

Spread the love

டோக்கியோவின் இன்றைய விடியல் இந்தியாவுக்கு பிரகாசமானதாக அமைந்திருக்கிறது. காலையிலேயே T64 உயரம் தாண்டுதல் போட்டியில் 18 வயதே ஆகும் இந்திய வீரர் பிரவீன் குமார் வெள்ளிப்பதக்கம் வென்றிருக்கிறார்.

உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த பிரவீன் குமாருக்கு ஒரு கால் கொஞ்சம் உயரம் குறைவானதாக இருக்கும். அப்படியிருந்த போதும் தொடர்ச்சியாக விளையாட்டுகளில் ஆர்வமாக இருந்திருக்கிறார். குறிப்பாக, வாலிபாலில் அதிக ஆர்வத்துடன் பங்கேற்றிருக்கிறார். ஒரு முறை எல்லா மாணவர்களும் பங்குபெறும் உயரம் தாண்டும் போட்டியில் பிரவீன் குமாரும் பங்கேற்றிருக்கிறார். அதில் சிறப்பாக செயல்படவே ஆசிரியர்களின் அறிவுறுத்தல்படி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே உயரம் தாண்டுதலில் கவனம் செலுத்த தொடங்கினார். ஆனால், அவருடைய வளர்ச்சி அபாரமாக இருந்தது.

சமீபத்தில் துபாயில் நடந்த உலக பாரா தடகள போட்டியில் தங்கம் வென்றிருந்தார். உலக அளவிலான தரவரிசையில் மூன்றாவது இடம்பிடித்திருந்தார். இப்படியாக இந்தியாவின் பதக்க நம்பிக்கையாகவே பாராலிம்பிக்ஸில் காலடி எடுத்து வைத்தார். இன்று வெள்ளியும் வென்றுவிட்டார்.

பிரவீன் குமார்

பிரவீன் குமார்

பிரவீன் குமார் பங்கேற்றிருந்த T64 உயரம் தாண்டுதலில் 6 பேர் மட்டுமே பங்கேற்றிருந்தனர். அதில் மூன்று பேர் தொடக்கத்திலேயே வெளியேறிவிட்டனர். முதலில் 1.88 மீட்டரை தாண்டிய பிரவீன் குமார் அடுத்து 1.97 மீட்டர் உயரத்தை தாண்டினார். அந்த இரண்டாவது தாண்டுதலிலேயே பிரவீன் பதக்கத்தை உறுதி செய்துவிட்டார். இதன்பிறகு, எந்த பதக்கம் யாருக்கு என்பதற்காகவே டாப் 3-யிலிருந்த வீரர்களுக்கிடையே கடும் போட்டி நிலவியது. மூன்றாவது இடத்திலிருந்த போலந்து நாட்டை சார்ந்த வீரர் 2.04 மீட்டர் வரை சிறப்பாக தாண்டி பிரவீனுக்கு கடும்போட்டி அளித்துக் கொண்டிருந்தார். ஆனால், 2.07 மீட்டருக்கு கம்பி உயர்த்தப்பட்டதும் அவர் தடுமாறினார். மூன்று வாய்ப்புகளிலும் உயரத்தை க்ளியர் செய்ய முடியாமல் கோட்டை விட்டார்.

இன்னொரு புறம் பிரவீன் குமாருக்கும் 2.07 மீட்டரை தாண்டுவதில் சிறிய தடுமாற்றம் இருந்தது. ஆனால், முதல் வாய்ப்பில் தவறவிட்டவர் இரண்டாவது வாய்ப்பில் அட்டகாசமாக 2.07 மீட்டரை க்ளியர் செய்தார். இதனால் பிரவீன் குமாருக்கும் பிரிட்டன் வீரர் ப்ரூமுக்கும் இடையில் தங்கப்பதக்கத்துக்கான போட்டி உருவானது. கம்பி 2.10 மீட்டருக்கு உயர்த்தப்பட்டது. முதல் வாய்ப்பில் தடுமாறிய ப்ரூம் இரண்டாவது வாய்ப்பில் அதை க்ளியர் செய்துவிட்டார். ஆனால், பிரவீன் குமாரால் மூன்று வாய்ப்பிலுமே 2.10 மீட்டரை தாண்ட முடியவில்லை. இதனால், பிரவீன் குமாருக்கு வெள்ளிப்பதக்கமே கிடைத்தது.

பாராலிம்பிக்கில் இந்தியா சார்பில் பதக்கம் வெல்லும் இளம் வீரர் பிரவீன் குமார்தான். இந்த பதக்கத்தின் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 11 ஆக உயர்ந்திருக்கிறது.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: