ஒலிம்பிக் பதக்கத்தை வென்ற ஐந்தே நாள்களில் ஏலம் விட்ட வீராங்கனை… வாங்கியவர் என்ன செய்தார் தெரியுமா? | tokyo olympics silver medalist Maria Andrejczyk auctions her medal

Spread the love


போலந்தைச் சேர்ந்த மரியா ஆண்ட்ரேஜிக்குக்கு வயது 25. இளம் வயதிலேயே ஈட்டி எறிதலில் பல சாதனைகள் படைத்த மரியா 2016 ரியோ ஒலிம்பிக்கில் இரண்டு சென்டி மீட்டர் வித்தியாசத்தில் வெண்கலப் பதக்கத்தை தவற விட்டார். மயிரிழையில் பதக்கத்தை தவறவிட்டருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது. ஒலிம்பிக் முடிந்ததும் தோள்பட்டை காயம் காரணமாக பல போட்டிகளில் பங்கேற்க முடியாமல் தவித்தவருக்கு பேரதிர்ச்சி.2018-ம் ஆண்டு எலும்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டார் மரியா. ஆனால், அவர் நம்பிக்கையை கைவிடவில்லை.

மரியா ஆண்ட்ரேஜிக்

மரியா ஆண்ட்ரேஜிக்
Matthias Schrader

தொடர் சிகிச்சையால் புற்றுநோயிலிருந்து மீண்டு, டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட மரியா, 64.61மீ தூரம் வீசி ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இவரின் முதல் ஒலிம்பிக் பதக்கம் இது. நான்கு ஆண்டு இடைவெளிகளில் பதக்கத்தை தவறிவிட்டு, கேன்சரில் இருந்து மீண்டும் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனைப்படைத்த இந்த சாதனைப் பெண் கருணையின் மறு உருவம்.

கடந்த சில நாட்களுக்கு முன் பிறந்து எட்டு மாதமே ஆன மிலோசெக் மலிசா என்ற ஆண் குழந்தையின் இருதய சிகிச்சைக்கு உடனடியாக பணம் தேவைப்படுவதை ஃபேஸ்புக் மூலம் அறிந்திருக்கிறார் மரியா. இந்தக் குழந்தையை அவர் நேரில் பார்த்தது கிடையாது. ஆனாலும், தன்னுடைய நாட்டு குழந்தைக்கு தானும் ஏதாவது உதவி செய்வோம் என நினைத்த மரியா, ஒலிம்பிக் போட்டியில் தான் வென்ற வெள்ளிப் பதக்கத்தை ஏலம் விட முடிவு செய்தார். அதில் கிடைக்கும் தொகையை மருத்துவ சிகிச்சைக்கு தர முன்வந்தார். அப்போது அவர் டோக்கியோவில் பதக்கம் வென்று வெறும் ஐந்து நாட்களே ஆகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மரியா ஆண்ட்ரேஜிக்

மரியா ஆண்ட்ரேஜிக்
David J. Phillip

சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லவும் மருத்துவ செலவுக்கும் தோராயாமாக 3,85,000 அமெரிக்க டாலர் தேவைப்பட்டது. இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட 3 கோடி. இதில் பாதிக்கும் மேற்பட்ட தொகையை குழந்தையின் பெற்றோர்கள் ஆன்லைன் மூலம் திரட்டி விட்டனர். மீதமுள்ள தொகையை தன் பதக்கத்தை ஏலம் விடுவதன் மூலம் திரட்டலாம் என குழந்தையின் பெற்றோருக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறார் மரியா. புற்றுநோயில் இருந்து மீண்ட மரியாவுக்கு அந்தப் பெற்றோர்களின் வலி புரிந்திருக்கிறது.

“பதக்கத்தின் உண்மையான மதிப்பு என்றும் என் நெஞ்சில் இருக்கும். பதக்கம் என்பது வெறும் பொருள் தானே. ஆனால், அது பலருக்கு மதிப்பு வாய்ந்தது. என்னுடைய வீட்டில் இருந்து தூசி அடைவதை விட இந்த வெள்ளிப் பதக்கம் ஒரு உயிரை காப்பற்றட்டுமே. அதனால்தான் நோய்வாய்பட்ட குழந்தையின் உயிரைக் காப்பாற்ற இதை ஏலத்தில் விட முடிவு செய்தேன்” என விளக்கம் தந்து பதக்கத்தை ஏலத்தில் விட்டார் மரியா.

மரியா ஆண்ட்ரேஜிக்

மரியா ஆண்ட்ரேஜிக்
Matthias Schrader

போலந்து நாட்டைச் சேர்ந்த Zabka எனும் சூப்பர்மார்க்கெட் நிறுவனம் 1,25,000 அமெரிக்க டாலர் செலுத்தி ஏலத்தில் வென்றிருக்கிறது. இதைக் கடந்த திங்களன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்தார் மரியா. இதன்மூலம் குழந்தையின் மருத்துவ செலவுக்கான தொகையும் கிடைத்துவிட்டதாக தன்னுடைய சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டார். இதில் ஆச்சரியப்படத்தக்க விஷயம் என்னவென்றால், ஏலத்தில் வென்ற நிறுவனம் வெள்ளிப் பதக்கத்தை மீண்டும் மரியாவிடமே கொடுத்துவிட்டது. “மரியாவின் மனிதநேயத்தை நாங்கள் மனதார பாராட்டுகிறோம். டோக்கியோவில் வென்ற அவரது வெள்ளிப் பதக்கம் என்றும் அவரிடமே இருக்கட்டும்” என சொல்லியிருக்கிறது Zabka நிறுவனம்.

ஒரு உயிருக்கு முன் ஒலிம்பிக் பதக்கம் ஒன்றும் பெரிதல்ல என்று உலகுக்கு உணர்த்திய இந்த போலிஷ் வீராங்கனை, மனிதநேயத்தில் உயர்ந்து நிற்கிறார்.THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: