ஒருசில ஆட்டங்களை மட்டும் வைத்து கோலியை ஒதுக்கிவிட முடியாது: அஜித் அகர்கர் | Cannot write off modern-day great Kohli, he got couple of good balls: Agarkar

Spread the love

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி சில போட்டிகளில் ஒழுங்காக விளையாடாமல் போனதற்காக அவரை மொத்தமாக ஒதுக்கிவிட முடியாது என்று இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அஜித் அகர்கர் கூறியுள்ளார்.

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி முதல் டெஸ்ட் டிரா ஆனதைத் தொடர்ந்து லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 151 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்தத் தொடரில் விராட் கோலி இதுவரை சரியாக ரன் சேர்க்காதது குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக சுனில் கவாஸ்கர், கோலியின் ஆட்டத்தைக் கடுமையாகச் சாடியிருந்தார்.

கோலியின் ஆட்டம் குறித்துப் பேசியிருக்கும் முன்னாள் வீரர் அஜித் அகர்கர், “2018 தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அவர்களின் முக்கியப் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக விராட் கோலி ரன் சேர்த்தார். இந்தத் தொடரைப் பொறுத்தவரை முதல் டெஸ்ட் போட்டியில் ஜேம்ஸ் ஆண்டர்சனின் சிறந்த பந்துவீச்சில் அவர் ஆட்டமிழந்தார்.

இரண்டாவது டெஸ்ட்டில் போராடி 40 ரன்கள் சேர்த்தார். ஆஃப் ஸ்டெம்பைத் தாண்டி ஆஃப் ஸைடில் அவுட் ஸ்விங்கர் பந்து வீசும்போது கண்டிப்பாக ஒரு பேட்ஸ்மேன் அதைத் தொட முயன்று எட்ஜ் ஆகும். பந்து நன்றாக வேகமும், ஸ்விங்கும் ஆகும் களங்கள் இவை. நான்காவது ஸ்டெம்ப் என்கிற அந்தப் பகுதியில் வீசுவது கிட்டத்தட்ட அத்தனை பேட்ஸ்மேன்களுக்குமே ஆடுவது கடினம்தான்.

அதேபோல இரண்டாவது இன்னிங்ஸில் சாம் கரனின் பந்து வீச்சும் சரியாக அவரை ஏமாற்றியது. ரன்கள் எடுக்க வேண்டும் என்று கோலிக்கும் கூட விருப்பம் இருக்கும். இதுவரை அவர் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் போதுமான ரன்களைச் சேர்த்துவிட்டார். ரன்கள் எடுக்காதபோது, அந்தத் தொடரில் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்ற முனைப்பு இருக்கும்.

அந்த ஆர்வம் மிகுதியாய்ப் போனதன் விளைவாக ஆட்டம் இழந்திருக்கலாம். அதற்காக வெறும் மூன்று இன்னிங்ஸில் அவர் சரியாக ஆடவில்லை என்று அவரை ஒதுக்கிவிட முடியாது. அவர் இன்றைய நவீன கிரிக்கெட்டின் உயர்ந்த ஆட்டக்காரர்” என்று கூறியுள்ளார்.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: