ஐஸ்லாந்தில் எரிமலை வெடித்து சிதறியது: இணையத்தில் வைரலாகிறது வீடியோ | iceland volcano eruption

Spread the love


iceland-volcano-eruption
ஐஸ்லாந்தில் வெடித்துச் சிதறிய பேக்ரதால்ஸ்பயாட்ல் என்ற எரிமலை .

ரேக்யூவீக்

ஐஸ்லாந்து தலைநகர் ரேக்யூவீக்கில் அருகே அமைந்துள்ள எரிமலைவெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது. அந்த நாட்டை சேர்ந்த புகைப்பட கலைஞர், ஆளில்லா விமானம் (ட்ரோன்) மூலம் எரிமலையின் சீற்றத்தை மிக அருகில் படம் பிடித்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

வடக்கு அட்லான்டிக் கடலில்ஐஸ்லாந்து தீவு நாடு அமைந்துள்ளது. அங்கு சுமார் 4 லட்சம் பேர் வசிக்கின்றனர். எதிரெதிர் திசையில் மோதிக் கொள்ளும் இரு புவி தட்டுகளுக்கு இடையில் ஐஸ்லாந்து அமைந்திருப்பதால் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. கடந்த 3 வாரங்களில் மட்டும் 40,000 நிலநடுக்கங்கள் நேரிட்டுள்ளன.

ஐஸ்லாந்தில் 30-க்கும் மேற்பட்ட எரிமலைகள் உள்ளன. அவை அவ்வப்போது வெடித்து சிதறுகின்றன. தலைநகர் ரேக்யூவிக்கில் இருந்து 40 கி.மீ. தொலைவில் பேக்ரதால்ஸ்பயாட்ல் என்றஎரிமலை உள்ளது. சுமார் 800ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 19-ம் தேதி இரவு அந்த எரிமலை வெடித்துச் சிதறியது. இது சாம்பலையும் புகையையும் அதிகமாக உமிழவில்லை. எனினும் எரிமலையின் லாவா குழம்பு ஆறாக பாய்கிறது. சுமார் ஒரு சதுர கி.மீ. தொலைவுக்கு லாவா குழம்பு பரவியுள்ளது.

அண்மையில் எரிமலையின் சீற்றம் ஹெலிகாப்டர் மூலம் வீடியோ எடுக்கப்பட்டது. ஆனால் கடும் வெப்பம் காரணமாக எரிமலை அருகே செல்ல முடியவில்லை. எனினும் ஐஸ்லாந்து உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த சுற்றுச்சூழல் புகைப்பட கலைஞர்கள் சிறிய ரக ஆளில்லா விமானம் (ட்ரோன்) மூலம்எரிமலை சீற்றத்தை வீடியோவில் பதிவு செய்து வருகின்றனர்.

அவர்களில் ஐஸ்லாந்தை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஜார்ன் ஸ்டென்ஸ்பெக் (49), எரிமலைக்கு மிக அருகே ட்ரோனை பறக்க செய்து இயற்கையின் சீற்றத்தை தத்ரூபமாக வீடியோ எடுத்துள்ளார். அவரது ட்ரோன், எரிமலையின் வாய் பகுதிக்கு மேலே பறந்து லாவா குழம்பு கொந்தளித்து சிதறி வடிந்தோடுவதை வீடியோவாக பதிவு செய்திருக்கிறது. மெய்கூச்செரியும் அவரது ட்ரோன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதுகுறித்து ஜார்ன் கூறியபோது, “நவீன எப்பிவி மாடல் ட்ரோன் மூலம் எரிமலை சீற்றத்தை வீடியோவாக பதிவு செய்தேன். எனது ட்ரோனின் விலை ரூ.2 லட்சமாகும். எரிமலைக்கு மிக அருகே ட்ரோனை பறக்க செய்தால் வெப்பத்தில் எரிந்துவிடும் ஆபத்து உள்ளது.

எனினும் சாமர்த்தியமாக ட்ரோனை பறக்க செய்து வீடியோ காட்சிகளை பதிவு செய்தேன். பெரும்பாலான மக்கள், ட்ரோனுக்கு என்ன ஆனது என்றே கேள்வி எழுப்புகின்றனர். ட்ரோனுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. நல்ல நிலையில் இருக்கிறது” என்று தெரிவித்தார்.

THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *