என்னால் முடியும்! – உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டிகளில் சாதனை படைத்த 16 வயதுப் பெண்

Spread the love

உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டிகள் இம்மாதம் 24ஆம் தேதி தொடங்கவுள்ளன.

குறைகளை ஒரு பொருட்டாக நினைக்காமல், ‘என்னால் முடியும்’ என்று சாதித்துக் காட்டிய, சாதிக்கத் துடிக்கும் சில விளையாட்டர்களின் கதைகள், ‘செய்தி’ நேயர்களுக்காக!

உடற்குறைகள் இருப்பினும், விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு சிறப்புடன் விளங்குவது அரிதான ஒன்று.

அவ்வாறு, உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளும் சிலரிடமிருந்து கற்றுக்கொள்வதற்கு நிறையவே உள்ளது!

அப்படிப்பட்ட ஒருவர் இளைஞர் சிமோன் குரூகர் (Simone Kruger).

16 வயதில் அவர் தென்னாப்பிரிக்காவைப் பிரதிநிதித்து உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ளார்.

shot put, வட்டு எறியும் போட்டிகளில் உலகச் சாதனை படைத்தவர் சிமோன்.

அவர் பிறப்பின்போதே பக்கவாதம், பெருமூளை வாதம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்.

பல்வேறு உடற்குறைகள் இருப்பினும், இவ்வாண்டுப் போட்டிகளில் தங்கப்பதக்கத்தை வெல்ல முற்படுகிறார் சிமோன்.

பிறக்கும்போதே உடலின் வலதுபக்கச் செயல்பாட்டை இழந்த சிமோன், இயந்திரங்களின் உதவியால் நடக்கத் தொடங்கினார்.

அவரால் தற்போது நடக்கவும் முடியும், ஓடவும் முடியும். வழக்கமான இந்த அன்றாடச் செயல்களைச் செய்ய முடிவதைத் தம் அதிர்ஷ்டமாகக் கருதி, தொடர்ந்து விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்க முயற்சி செய்து வருகிறார்.

அவர், உடற்குறை ஏதும் இல்லாதவர்களோடும் போட்டியிட்டதுண்டு. அவர்களுடன் போட்டி போடும்போது, தம்மால் மேலும் கடினமாக உழைக்க முடிகிறது, சிறப்பாகவும் செயல்பட முடிகிறது என்கிறார் சிமோன்.

தம் வாழ்வை விளையாட்டுப் போட்டிகள் மாற்றியமைத்துள்ளன என அவர் சொல்கிறார். விளையாட்டுகள் இல்லையென்றால், தம் வாழ்நாளைப் படுத்தப் படுக்கையாகவே கழிக்க நேரிட்டிருக்கும் என்பதையும் சுட்டினார்.

சிறுவயதிலிருந்து தமது பெற்றோர் தமக்குச் செய்த பெரிய உதவிகளை சிமோன் தமது ஊன்றுகோலாகக் கருதுகிறார்.

அவரது தினசரிப் பயிற்றுவிப்பாளராக அவரது தந்தை இருக்கிறார். தாமும் தமது தந்தையும் தினமும் சேர்ந்து பயிற்சி செய்வதாகவும் அவர் பகிர்ந்தார்.

பெற்றோரின் ஆதரவைத் தமது பலமாகப் பயன்படுத்தி, உடற்குறைகளையும் மீறித் தொடர்ந்து விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிநடை போடும் சிமோன், அவரைப் போன்ற இளையர்களுக்கு ஒரு முன்மாதிரியாக விளங்குகிறார்.

ஆதாரம்: olympics.com 

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: