என்னால் முடியும்! – உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டிகளில் சிரமங்களை எதிர்கொண்டு எதிர்நீச்சல் போடுபவர்

Spread the love


உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டிகள் இம்மாதம் 24ஆம் தேதி தொடங்கவுள்ளன.

குறைகளை ஒரு பொருட்டாக நினைக்காமல், ‘என்னால் முடியும்’ என்று சாதித்துக் காட்டிய, சாதிக்கத் துடிக்கும் சில விளையாட்டர்களின் கதைகள், ‘செய்தி’ நேயர்களுக்காக!

உடற்குறைகள் இருப்பினும், விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு சிறப்புடன் விளங்குவது அரிதான ஒன்று.

அவ்வாறு, உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளும் சிலரிடமிருந்து கற்றுக்கொள்வதற்கு நிறையவே உள்ளது!

அந்த வரிசையில், பெலரூஸைச் சேர்ந்த இஹார் போக்கி (Ihar Boki) தனிச்சிறப்புடன் விளங்குகிறார்.

ரியோ 2016 உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டிகளில் ஆக அதிகமான தங்கப் பதக்கங்களை வென்றவர் அவர்.

நீச்சலில் அவர் மொத்தம் 6 தங்கங்களைப் பெற்றார்.

போக்கி இவ்வாண்டின் தோக்கியோ 2020 போட்டிகளிலும் கலந்துகொள்ளவுள்ளார்.

இருப்பினும், அதற்குத் தயார்செய்யும் பாதை மிகச் சவால்மிக்கதாக அமைந்துள்ளதென அவர் கூறியுள்ளார்.

தமக்கு ஏற்பட்ட கொரோனா கிருமித்தொற்றிலிருந்து மீண்டு வருவது பெரும் எதிர்நீச்சலாக அமைந்தது என்றும் சொன்னார்.

ஆனாலும், அது அவரைத் தடுத்து நிறுத்தவில்லை. இவ்வாண்டு ஜூன் மாதத்தில் மடீராவில் (Madeira) இடம்பெற்ற ஐரோப்பியப் போட்டிகளில் அவர் 6 தங்கப் பதக்கங்கள், ஒரு வெள்ளிப் பதக்கம், இரு உலகச் சாதனைகள் ஆகியவற்றைத் தம் சாதனைப் பட்டியலில் சேர்த்துக்கொண்டார்.

27 வயதாகும் அவருக்குச் சிறு வயதிலிருந்தே கண்பார்வைப் பிரச்சினை இருந்தது. சுறுசுறுப்பான அவரை நிதானப்படுத்த நீச்சலில் சேர்த்துவிடும்படி மருத்துவர் ஒருவர் அவரது பெற்றோருக்கு ஆலோசனை வழங்கினார்.

அதன் பின்பே, அவர் நீச்சல் கற்றுக்கொண்டார்.

முதல்முறையாக லண்டன் 2012 உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொண்ட போதே தாம் வெற்றியாளராக வந்தது தம்மைப் பல வழிகளில் மனம் நெகிழச் செய்ததாக அவர் கூறினார்.

9 ஆண்டுகள் கழித்து, இவ்வாண்டு, அவர் தம் 3ஆவது ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ளார்.

வெற்றிபெறுவதைப் பற்றி அதிகம் யோசிக்கவில்லை என்றும், தொடர்ந்து முன்னேற்றத்தை நோக்கித் தம் பயிற்றுவிப்பாளருடன் கடினமாக உழைப்பதாகவும் சொன்னார் போக்கி.

இவ்வாண்டு மிக முக்கியமானது. இவ்வாண்டின் உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டிகள், உலகிற்கு ஒன்றைக் கற்றுத்தரும் – அது நம்மை நாமே நம்பியிருக்கவேண்டும் என்பது.

என்று அறிவுறுத்தும் அவர், நம் குணம், நம் விடாமுயற்சி ஆகியவை கடினமான சூழல்களிலிருந்து மீண்டுவர உதவும் என்பதையும் வலியுறுத்துகிறார்.

ஆதாரம்: olympics.com 

THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: