உஷ்…வீண் சத்தம் வேண்டாம்: சிராஜ் சைகை பின்னணி

Spread the love

லண்டன்: ‘‘என்னை வெறுப்பவர்கள் வாயை அடைக்கவே விக்கெட் வீழ்த்தியதும் வித்தியாசமாக சைகை செய்கிறேன்,’’என முகமது சிராஜ் தெரிவித்தார்.

இந்திய அணியின் இளம் ‘வேகப்புயல்’ முகமது சிராஜ். தற்போது லார்ட்சில் நடக்கும் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் அசத்துகிறார். முதல் இன்னிங்சில் 4 விக்கெட் வீழ்த்தினார். ஒவ்வொரு முறை விக்கெட் வீழ்த்தியதும், உதட்டின் மீது விரல் வைத்து சைகை செய்தார். ‘வாயை மூடி சத்தமில்லாமல் கிளம்பவும்’ என சொல்லாமல் சொன்னார். இவரது சைகைக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இது குறித்து சிராஜ் கூறியது:

என்னை பற்றி விமர்சிப்பவர்கள், வெறுப்பவர்களின் வாயை அடைக்கும் விதமாகவே உதட்டின் மீது விரல் வைத்து கொண்டாடுகிறேன். என்னால் இதை செய்ய முடியாது. அதை செய்ய முடியாது என தவறான கருத்துக்களை சொன்னார்கள். இவர்களுக்கு பந்துவீச்சு மூலம் பதிலடி கொடுக்கிறேன். விக்கெட் வீழ்த்தியதும் எனது ஸ்டைலில் கொண்டாடுகிறேன். 

லார்ட்ஸ் டெஸ்டில் சக வீரர் ராகுல் மீது பாட்டில் கார்க்கை ரசிகர்கள் வீசியதை நான் கவனிக்கவில்லை. ரசிகர்கள் தவறான வார்த்தைகள் எதுவும் சொல்லவில்லை. இங்கிலாந்து சூழ்நிலையில் நான்கு வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்குவது அவசியம். நமது வேகங்கள் சிறப்பாக பந்துவீசுகின்றனர். அதிக உதிரிகளை விட்டுக் கொடுப்பதாக சொல்கின்றனர். இது டெஸ்ட் போட்டிகளில் சகஜமான ஒன்று. வேண்டுமென்றே யாரும் உதிரி ரன்களை கொடுப்பதில்லை.

ஆடுகளத்தில் சரியான இடத்தில் பந்துவீசுவதே எங்களது திட்டம். ஒரு கட்டத்தில் ஆடுகளம் மந்தமாக இருந்தது. உடனே தொடர்ந்து பவுன்சர்கள் வீசலாம் என முடிவு செய்தேன். இதன் பலனாக ‘பவுன்சரில்’ பேர்ஸ்டோவ் விக்கெட்டை கைப்பற்றினேன். தற்போது ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக உள்ளது. இரண்டாவது இன்னிங்சில் இந்திய பேட்ஸ்மேன்கள் ரன் குவிப்பர் என நம்புகிறேன். 

இவ்வாறு சிராஜ் கூறினார்.

Advertisement

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: