உலக அளவில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா; கடந்த ஒரு வாரத்தில் 33 லட்சம் பேர் பாதிப்பு: உலக சுகாதார அமைப்பு தகவல் | Six-week decline in global Covid-19 deaths has stalled: WHO

Spread the love


உலக அளவில் கடந்த வாரத்தில் கரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த 7 நாட்களில் மட்டும் 33 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த 6 வாரங்களாகச் சரிந்துவந்த இறப்பு வீதமும் நின்றுவிட்டது என்று உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

2019-ம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும் ஆட்டிப்படைத்து வருகிறது. கரோனா வைரஸ் மட்டுமல்லாமல், அதிலிருந்து உருமாற்றம் அடைந்த வைரஸ் பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது.

இதுவரை உலக அளவில் கரோனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12 கோடியே 49 லட்சத்து 65 ஆயிரத்து 722 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் 10 கோடியே 9 லட்சத்து 45 ஆயிரத்து 178 பேர் குணமடைந்தனர். இதில் 27 லட்சத்து 49 ஆயிரத்து 37 பேர் உலக அளவில் உயிரிழந்துள்ளனர்.

இதில் அமெரிக்காவில் மட்டும் அதிகபட்சமாக 3 கோடியே 63 லட்சத்து 6 ஆயிரத்து 534 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5.56 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு இன்று வெளியிட்ட அறிக்கையில், “உலக அளவில் கடந்த 6 வாரங்களாக கரோனா மூலம் குறைந்து வந்த உயிரிழப்பு நின்றுவிட்டது. அதேசமயம், கடந்த ஒரு வாரமாகப் புதிதாக கரோனாவில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அதாவது 21-ம் தேதி வரையில் உலக அளவில் 33 லட்சம் பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். 60 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரேசில், அமெரிக்கா, இந்தியா, பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளில்தான் கடந்த ஒரு வாரத்தில் கரோனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பெரும்பாலும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் புதிதாகப் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.

ஏற்கெனவே இருந்த கரோனா வைரஸ் தவிர்த்து, உலகில் புதிதாக உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. பிரிட்டனில் பி.1.1.7 வகை கரோனா வைரஸ், தென் ஆப்பிரிக்காவில் பி.1.351 வகை வைரஸ்கள், பிரேசிலில் பி.1. வகை வைரஸ்கள் அதிகரித்து, பரவல் வேகத்தையும் அதிகப்படுத்தியுள்ளன” எனத் தெரிவித்துள்ளது.

THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *