உலகின் சிறந்த இந்திய பவுலிங் படை * ‘ஜாம்பவான்’ சச்சின் பாராட்டு

Spread the love

புதுடில்லி: ‘‘இந்திய அணியின் தற்போதுள்ள பவுலிங் படை தான், உலகின் சிறந்தது,’’ என சச்சின் தெரிவித்தார்.

இங்கிலாந்து சென்ற இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. மழை காரணமாக நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட் ‘டிரா’ ஆக, லார்ட்ஸ் டெஸ்ட் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்திய (364) அணியை விட முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி (391) 27 ரன்கள் முன்னிலை பெற்றது. இரண்டாவது இன்னிங்சில் 298/8 ரன் எடுத்து ‘டிக்ளேர்’ செய்த இந்தியா, தோல்வியில் இருந்து தப்பியது.

கடைசி 60 ஓவரில் 272 ரன் என்ற இலக்கை துரத்திய இங்கிலாந்து அணியை இந்திய ‘வேகங்கள்’ போட்டுத் தாக்க, 120 ரன்னுக்கு சுருண்டு, 151 ரன்னில் தோற்றது. இந்தியா வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி பெற்றது. இதுகுறித்து இந்திய அணி ‘ஜாம்பவான்’ சச்சின் கூறியது:

லார்ட்சில் இந்திய துவக்க வீரர்கள் ரோகித் சர்மா, ராகுல் இணைந்து சிறப்பாக ரன் சேர்த்தனர். இரண்டாவது இன்னிங்சில் இந்தியா 28/3 ரன் என திணறிய போது, அடுத்த சில விக்கெட்டுகள் சரிந்திருந்தால் போட்டியின் நிலைமை மாறியிருக்கும். புஜாரா, ரகானே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினர்.

இங்கிலாந்து அணியில் ஜோ ரூட் தவிர வேறு யாரும் சீரான ரன் குவிப்பை வெளிப்படுத்தவில்லை. முன்னணி பேட்ஸ்மேன்களை சிறப்பான பந்து வீச்சில் வெளியேற்றிய இங்கிலாந்து பவுலர்கள், இந்திய ‘டெயிலெண்டர்களை’ பயமுறுத்த ‘ஷார்ட் பிட்ச்’ பந்துகளை வீசினர். ஆனால் இது இந்திய வீரர்கள் துணிச்சலை துாண்டி விட, 100 ரன்னுக்கும் மேல் எடுக்க உதவியது. ஐந்தாவது நாள் காலையில் போட்டி இங்கிலாந்து கையில் இருந்து நழுவியது.

சிறந்த ‘வேகம்’

தவிர இந்திய அணியில் இப்போதுள்ள பவுலிங் படை தான் உலகில் சிறந்தது. மற்றபடி முன் இருந்தவர்களுடன் ஒப்பிட விரும்பவில்லை. ஏனெனில் எதிர்த்து விளையாடும் பேட்ஸ்மேன்களை பொறுத்து இது மாறும். தற்போதுள்ள பும்ரா தந்திரமாக செயல்படுகிறார். ராபின்சனை அவுட்டாக்கிய விதமே இதற்கு சான்று.

அதேபோல சூழலுக்கு ஏற்ப விரைவில் மாறிக் கொண்டு, புதிய விஷயங்களையும் கற்றுக் கொள்கிறார். கடந்த ஆண்டு மெல்போர்னில் பார்த்த போது இருந்தை விட, இம்முறை நிறைய முன்னேறி விட்டார். எப்போது அழைத்தாலும் 100 சதவீத திறமை வெளிப்படுத்த தயாராக உள்ளார்.

இவ்வாறு சச்சின் கூறினார்.

நம்பவே முடியவில்லை

இங்கிலாந்து அணி முன்னாள் வீரர் ஜெப்ரி பாய்காட் கூறுகையில்,‘‘முட்டாள்தனமாக செயல்பட்டால் டெஸ்டில் வெற்றி பெறும் தகுதியை இழந்து விடுவீர்கள். பேட்டிங்கில் ஜோ ரூட் மட்டும் ரன் சேர்த்தார். மற்ற இங்கிலாந்து வீரர்கள் ஜோ ரூட்டை தான் நம்புகின்றனர். இங்கிலாந்து பவுலர்கள் ஷமி, பும்ராவை அவுட்டாக்குவதை விட, அவர்கள் மீது தாக்கும் வகையில் உள்நோக்கத்துடன் பந்து வீசினர். இந்திய ஸ்கோரை கட்டுப்படுத்த, பீல்டிங்கை தளர்த்தினர். கடைசியில் இந்தியா ‘டிக்ளேர்’ செய்ததை பார்க்க வேண்டிய சங்கடம் ஏற்பட்டது. கடைசி நாள் துவக்கத்தில் இங்கிலாந்து வெல்லும் நிலை இருந்தது. ஆனால் இவ்வளவு மோசமாக செயல்பட்டதை நம்பவே முடியவில்லை. இந்திய அணிக்கு வாழ்த்துகள்,’’ என்றார்.

ஒரு ஆள தொட்டா…

இந்திய வீரர் பும்ரா பேட்டிங் செய்த போது, பட்லர், மார்க் உட் உள்ளிட்ட இங்கிலாந்து அணியினர் வார்த்தை போரில் ஈடுபட்டனர். இதுகுறித்து இந்திய வீரர் ராகுல் கூறுகையில்,‘‘இந்திய அணியின் ஒரு வீரருடன் எதிரணியினர் வார்த்தை போரில் ஈடுபட்டால், அது மீதமுள்ள 10 வீரர்களுடனும் மோதியதாகத் தான் அர்த்தம். அந்தளவுக்கு நாங்கள் ஒருவருக்கு ஒருவர் அணியாக இணைந்துள்ளோம்,’’ என்றார்.

கங்குலி பாராட்டு

லார்ட்ஸ் டெஸ்ட் வெற்றிக்கு பலர் பாராட்டு தெரிவித்தனர். இந்திய கிரிக்கெட் போர்டு தலைவர் கங்குலி வெளியிட்ட ‘டுவிட்டர்’ செய்தியில்,‘இந்திய அணியின் மிகச்சிறப்பான வெற்றி. வீரர்கள் துணிச்சலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதை நேரில் பார்த்த போது மிக உற்சாகமாக இருந்தது,’ என தெரிவித்துள்ளார்.

மார்க் உட் விலகல்

இங்கிலாந்து அணி வேகப்பந்து வீச்சாளர் மார்க் உட். லார்ட்ஸ் டெஸ்டில் 5 விக்கெட் வீழ்த்தினார். பீல்டிங் செய்த போது பவுண்டரி எல்லையில் பந்தை பிடிக்க பாய்ந்த போது, வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. தற்போது இவர், இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் (ஆக. 25–29) பங்கேற்க மாட்டார் என பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்உட் தெரிவித்துள்ளார்.

Advertisement

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: