உத்தரப்பிரதேச மாநிலம், ஜான்சி ரயில் நிலையத்தில் மத மாற்றம் செய்ய முயன்றதாக கன்னியாஸ்திரீகள் ரயிலிலிருந்து இறக்கிவிடப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. டெல்லியிலிருந்து ஒடிசாவின் ரூர்கேலாவை நோக்கிச் சென்றுகொண்டிருந்த உட்கல் எக்ஸ்பிரஸ் ரயிலில், கன்னியாஸ்திரீகள் இருவரும், கன்னியாஸ்திரீகளாவதற்கான பயிற்சியில் இருக்கும் பெண்கள் இருவரும் பயணம் செய்தனர். இவர்கள் கேரளாவைச் சேர்ந்த சைரோ மலபார் தேவாலயத்தின் கீழ் இயங்கும் சேக்ரெட் ஹார்ட் கான்வென்ட்டைச் சேர்ந்தவர்கள். கன்னியாஸ்திரீகள் தங்கள் மதம் சார்ந்த உடையிலும், பயிற்சி பெறும் பெண்கள் சாதாரண உடையிலும் இருந்தனர்.
ரயில் உத்தரகாண்ட் மாநிலம், ரிஷிகேஷ் வந்தடைந்தபோது, அங்கு, பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்தவர்களாகத் தங்களை அடையாளப்படுத்திக்கொண்ட சிலர் ரயிலில் ஏறினர். கன்னியாஸ்திரீகளையும், உடன் வந்த இரண்டு பெண்களையும் பார்த்த அவர்கள், பிரச்னை செய்யத் தொடங்கினர். இரண்டு பெண்களையும் கன்னியாஸ்திரீகள் கட்டாய மதமாற்றம் செய்து அழைத்துச் செல்வதாகக் கூறி அவர்கள் மிரட்டத் தொடங்கினர். இது குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது.

அதில், தாங்கள் கிறிஸ்தவ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று ஒரு பெண் அவர்களிடம் கறுகிறார். கிறிஸ்தவ குடும்பத்தைச் சேர்ந்தவர்தான் என்பதற்கு ஆதாரத்தையும், அடையாள அட்டையையும் காண்பிக்க வற்புறுத்துகின்றனர். அந்தப் பெண், தனது ஆதார் அட்டையை எடுத்துக் காட்டுகிறார். ஆதாரில் மதம் குறித்த தகவல் இல்லாததால், “நீ கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர் என்று இது கூறவில்லை” என்கிறார் அந்த நபர்.