உச்சநீதிமன்ற நீதிபதியின் மகன் என நடித்து முன்னாள் அட்வகேட் ஜெனரலை ஏமாற்ற முயன்ற நபர் கைது செய்யப்பட்டார். அவரை போலி என அறிந்து புகார் அளித்ததன் பேரில் அவரை கைது செய்த போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியத்தினர். அவருக்கு 5 மாத சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு சைபர் பிரிவு போலீஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:
கடந்த ஆண்டு செப்.4 அன்று சென்னையைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞரும். முன்னாள் அட்வகேட் ஜெனரலுமான பி.எஸ்.ராமன் புகார் ஒன்றை காவல் ஆணையரிடம் அளித்தார். அவர் கொடுத்த புகாரில் “அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தன்னை வாட்ஸ் ஆப்பில் தொடர்பு கொண்டார். அதில் அந்த நபர் தான் ஒரு வழக்கறிஞர் என்றும், உச்சநீதிமன்ற நீதிபதியின் மகன் என்றும் தெரிவித்தார்.
தான் சென்னைக்கு அலுவல் சம்பந்தமாக வந்திருப்பதாகவும். தன்னுடைய செலவுக்காக ரூ.20,000- தரும்படி கேட்டதாகவும். தான் டெல்லி சென்றவுடன் திருப்பித் தந்து விடுவதாகவும் தெரிவித்து குறுஞ்செய்தி அனுப்பினார்.
அதை உண்மை என்று நம்பிய நானும் அவருக்கு உதவி செய்வதற்காக அவரைத் தொடர்பு கொண்டு என்ன விவரம் எனக்கேட்டபோது வாட்ஸ் ஆப்பில் பேசிய நபர் போலியான நபர் என்பதைப் புரிந்துக்கொண்டேன்.
அவர் மீது சட்டபடியான நடவடிக்கை எடுக்க வேண்டும்”. எனப் புகாரில் தெரிவித்திருந்தார்.
அவர் அளித்த புகார் சென்னை மத்திய குற்றபிரிவு கணிணிவழி குற்றபிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது,
தொடர் விசாரணையில் அட்வகேட் ஜெனரலை ஏமாற்ற முயன்ற நபர் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த அப்ரஜித் பசாக்(54) என்பதும். அவர் உச்ச நீதிமன்ற நீதியரசர் மகன் போன்று ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்ற முயன்றது விசாரணையில் தெரியவந்தது. இதன் பேரில் கடந்த மறுநாளே (05/09/2020) அவர்கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.
இவ்வழக்கில் புலன் விசாரணையின் போது கிடைத்த ஆவணங்கள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் இவ்வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த தினத்திலிருந்து 45 நாட்களுக்குள்ளாக இறுதி அறிக்கை எழும்பூர் குற்றவியல் நடுவர் (சிசிபி மற்றும் சிபிசிஐடி வழக்குகள்) சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது,
இவ்வழக்கின் நீதிமன்ற விசாரணையில் தகவல் தொழில்நுட்ப திருத்தச் சட்டம் பிரிவு 66 D உ-இ, 84C ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றம் செய்தது நிருபணம் ஆன காரணத்தினால் எழும்பூர் குற்றவியல் சிறப்பு நீதிமன்றம் (சிசிபி & சிபிசிஐடி வழக்குகள்) நேற்று முன் தினம் குற்றவாளி அப்ரஜத் பசாக்குக்கு 5 மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்”.
இவ்வாறு சிசிபி போலீஸார் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.