இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதி என்ற தகவல் போலி – உதய கம்மன்பில

Spread the love

Published by T. Saranya on 2021-03-31 13:42:02

(எம்.மனோசித்ரா)

இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களுக்கு மீன்பிடி செயற்பாடுகளில் ஈடுபட அனுமதியளிப்பது தொடர்பில் அரசாங்கத்தினால் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை. இந்தியா , பங்களாதேஷ் மற்றும் மியன்மார் போன்ற நாடுகளில் கைது செய்யப்படுகின்ற மீனவர்களை விடுவிப்பதற்காக அரசாங்கம் அந்நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளதாக அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

இலங்கை கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட முடியும் என்று எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை. இவ்வாறானதொரு கொள்கை ரீதியான தீர்மானத்தை அமைச்சரொருவரால் தனித்து எடுக்க முடியாது. அமைச்சரவையே இது குறித்து தீர்மானிக்க வேண்டும். எனினும் அரசாங்கம் என்ற ரீதியில் அவ்வாறானதொரு தீர்மானம் எடுக்கப்படவில்லை.

கடல் எல்லை தொடர்பான அறியாமையினால் தேசிய கடற்பரப்பில் மீன் பிடி செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற மீனவர்கள் தொடர்பில் சகல நாடுகளும் சாதகமான அடிப்படையிலேயே செயற்படுகின்றன. இலங்கை மீனவர்கள் இந்தியா , பங்களாதேஷ் மற்றும் மியன்மார் போன்ற நாடுகளில் கைது செய்யப்படுகின்றனர். இவ்வாறான சந்தர்ப்பங்களில் குறித்த நாடுகளுடன் கலந்துரையாடி வழக்கு தாக்கல் செய்யாமல் அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அதே போன்று இந்திய மீனவர்கள் கைது செய்யப்படும் போது சில சந்தர்பங்களில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனினும் பெரும்பாலான சந்தர்பங்களில் வழக்கு தொடராமலேயே விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்திய அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய வழக்கு தொடராமல் தண்டப்பணம் செலுத்தி இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் இலங்கை மீனவர்கள் கைது செய்யப்படும் போது அவர்களுக்கு இவ்வாறான தீர்வு கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலேயே இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. எதிர்காலத்திலும் இதே போன்ற சுமூகமான தீர்வினையே எதிர்பார்க்கின்றோம்.

மியன்மார் அரசாங்கத்துடன் அந்நாட்டிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுகின்றன. எனினும் அந்நாட்டு சட்ட விதிகளின் படி நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னர் சலுகை பெற்றுக் கொள்ள முடிந்தால் மாத்திரமே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தற்போதைய மியன்மார் அரசாங்கம் அறிவித்துள்ளது. எனினும் அங்கு கைது செய்யப்பட்டுள்ள இலங்கை மீனவர்களின் நலன்சார் மற்றும் சட்ட ரீதியான தேவைகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் தொடர்ந்தும் செயற்பட்டு வருகிறது என்றார்.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *