இன்றும் டாப் ஸ்கோரர்களின் லிஸ்ட்டில் சச்சின் டெண்டுல்கரின் பெயர்… ஓய்வு பெற்றபிறகும் தொடரும் சாதனை!

Spread the love


களத்தில் இருக்கும்போதே மறக்கப்படும் மனிதர்களுக்கு நடுவில், கடந்த பின்பும் கவனிக்கப்படுபவர்கள்தான், உண்மையான சாதனையாளர்கள்.

பொதுவாக, ஒரு வீரர், தனிப்பட்ட வகையில் எந்த அளவு, தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார் என்பதற்கான அளவீடு, அவர் விளையாடிய காலத்தின் கணக்கீடு மட்டுமன்றி, அவரது தாக்கத்தின் வீரியம், அவர் விடைபெற்ற பிறகும் எத்தனை ஆண்டுகளுக்கு நீடித்திருக்கிறது என்பதைப் பொறுத்ததுதான்.

அவ்வகையில், சச்சின் எனும் சகாப்தம், இரண்டரை தசாப்தங்கள், மையம் கொண்டு, புயலாய் இந்திய கிரிக்கெட்டை கட்டி ஆண்டு, கரை கடந்து 8 ஆண்டுகள் முடிந்துவிட்டன. ஆனாலும், இன்னமும், களத்தில் அடிக்கப்படும் ஒவ்வொரு டாப் கிளாஸ் ஷாட்களும், அவருடைய கார்பன் காப்பியாகத்தான் வர்ணனையாளர்களால் சிலாகிக்கப்படுகிறது. எந்த ஒரு சாதனை பட்டியலை எடுத்துப் பார்த்தாலும், இன்றும்கூட, ஏதோ ஒரு நிலையில், அவரது பெயர் இடம்பெறத்தான் செய்கிறது. அதுதான் அவரது ஆதிக்கத்தின் அளவைச் சொல்கிறது.

கிரிக்கெட்டில், வீரர் ஒருவர் விளையாடும் ஆண்டுகளின் எண்ணிக்கையும், நிலைப்பு தன்மையும் எதிர்தகவில் இருப்பவை. முன்னிருப்பது கூடினால், பின்னிருப்பது வீழ்ச்சியைக் காணும். அதோடு, அவர்களது கரியரின் முடிவில் நிச்சயமாக ஆவரேஜ் அடிவாங்கும். சதங்களின் எண்ணிக்கை குறையும், சதங்களுக்கு இடையேயான இடைவெளி அதிகரிக்கும். நிற்க!

Guard Of Honour For Sachin

இவையெல்லாம் ஒரு சராசரி வீரருக்கான வரையறை மட்டுமே! சச்சின் இத்தகைய எதார்த்தங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டவர். அவரது கரியரின் பிற்பகுதிகளில் கூட, ஏதோ ஒரு சாதனையை, அவரது பேட் உடைத்துக் கொண்டும், படைத்துக் கொண்டும்தான் இருந்தது, சலிப்பின்றி!

ஒவ்வொரு கிரிக்கெட்டருக்கும், அவருடைய உச்சகட்டம் என்பது, அவர்களுடைய ஒட்டுமொத்த பயணத்தின் தொடக்கத்திலோ, நடுவிலோ அமையலாம். ஆனால், சச்சினைப் பொறுத்தவரை, டெஸ்ட் ஃபார்மட்டில், ஒரு காலண்டர் ஆண்டில் அதிகபட்ச ரன்களை அவர் அடித்தது 2010-ல்! அதாவது அவர் ஓய்வுபெறப் போவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாகத்தான். அவர், ஒரே ஒரு வருடத்தைத் தவிர்த்து (2004), பத்து அல்லது அதற்கும் அதிகமான போட்டிகளில் ஆடியிருந்த அத்தனை ஆண்டுகளிலும் (ஆறு முறை) 1000 ரன்களைக் கடந்து சாதனை படைத்திருந்தார். எனினும், 2010-ம் வருடம்தான், சச்சினுக்கு மிகச்சிறந்த வருடம். அவ்வருடம் மட்டும் 23 இன்னிங்ஸ்களில் ஆடிய சச்சின், ஏழு சதங்கள் மட்டுமன்றி, ஐந்து அரைசதங்களையும் கடந்து 1562 ரன்களை குவித்திருந்தார். அவரது கரியரின் இரண்டாவது சிறந்த ஆவரேஜ் (78.10) அந்த வருடம்தான் வந்திருந்தது.

அந்த 37 வயதுடைய துடிப்புடைய இளைஞர், அதே ஆண்டில்தான், 14,000 ரன்கள் என்னும் மைல்கல்லையும், டெஸ்ட்களில் எட்டி இருந்தார். அதுவும் 13,000 எனும் இடத்திலிருந்து, அங்கு வந்து சேர அவர் எடுத்துக் கொண்டிருந்தது 12 இன்னிங்ஸ்கள் மட்டுமேதான். ஃபார்ம் அவுட் ஆகிவிட்டார், சச்சினின் சரித்திரம் முடிவை நெருங்கிக் கொண்டுள்ளது என கதைகள் ஒருபுறம் புனையப்பட்டு கொண்டிருக்க, கற்பனைக்கு அப்பால், 84-க்கும் அதிகமான ஆவரேஜோடு, அந்த 1000 ரன்களை கடந்து பிரமிக்க வைத்திருந்தது இந்த பிரமாண்டத்தின் பிறப்பிடம்.

இதில் சிறப்பு என்னவென்றால், லாரா உள்ளிட்ட சமகால கிரேட்களோடு தொடங்கிய அவரது போட்டி, பான்ட்டிங்கையும் பார்த்து, ஓய்வுபெற்ற சமயம், அதற்கடுத்த தலைமுறை வீரர்களையும் ஒரு கை பார்த்து, இன்று இத்தலைமுறை வீரர்களோடும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

சச்சின்

2010-ல் அதிகபட்சமாக, 14 போட்டிகளில் ஆடிய சச்சின், அங்கிருந்து அதற்கடுத்த மூன்று வருடங்கள், மிக அதிகமான டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கவில்லை. மொத்தமே, 24 போட்டிகளில்தான் அதற்கடுத்த மூன்று ஆண்டுகளுக்கும் சேர்த்தே அவர் பங்கேற்றிருந்தார்.

எனினும், 2010-ல் இருந்து, இந்திய வீரர்கள் இந்த 12 ஆண்டுகளில் அடித்துள்ள டெஸ்ட் ரன்களின் அடிப்படையில் அவர்களை வரிசைப்படுத்தினால், அதில் ஐந்தாவது இடத்தில், சச்சின் டெண்டுல்கர் என்ற பெயர் இன்னமும் கம்பீரமாக நிற்கிறது. அதுவும் ஓய்வு அறிவித்து 8 ஆண்டுகள் உருண்டோடிய பின்னும்.

இன்றைய இந்திய ரெட் பால் கிரிக்கெட்டின் தவிர்க்க முடியாதவர்களாக மாறியுள்ள, கோலி, புஜாரா, ரஹானே முதல் மூன்று இடங்களிலும், முரளி விஜய் நான்காவது இடத்தையும் அலங்கரிக்க, ஐந்தாவது இடத்தில், சச்சின்தான் இன்னமும் இருக்கிறார். 2013-ம் ஆண்டே நின்று விட்ட ஒரு தொடர் வண்டி, இன்னமும் பந்தயத்தில் தொடர்ந்து, ஓடிக் கொண்டுள்ள, ஓடப் போகின்ற மற்ற வண்டிகளுக்கு இணையாக பட்டியலில் இடம் பெற்றிருப்பது சுவாரசியமான விஷயம்தானே?!

200 டெஸ்ட்டில் ஆடியவர் என்ற யாராலும் எட்ட முடியாத உயரம் ஒருபக்கம் எனில், அதிக ரன்கள், அதிக சதங்கள், அதிக அரை சதங்கள், அதிக பவுண்டரிகள் என டெஸ்ட்டில், அத்தனை புள்ளி விபரங்களிலும் அவரது பெயர்தான், இன்றளவும், உச்சத்தில் உட்கார்ந்துள்ளது.

முன்னதாகக் குறிப்பிட்ட, சச்சின் ஐந்தாவது இடத்தில் இருக்கும், 2010-க்குப் பிறகு, இந்தியா சார்பாக அதிக ரன்களைக் குவித்தவர்களுக்குரிய பட்டியலில் உள்ளவர்களின், சராசரி ரன்களை ஆராய்ந்தால், இன்னொரு ஆச்சரியமும் கண்ணுக்குப் புலப்படும். இந்த டாப் 5-ல் மட்டுமல்ல, இந்தப் பட்டியலை, சற்றே நீளச் செய்து, டாப் 20-ல் இருக்கும் இந்திய வீரர்களின் சராசரியையும் சற்றே ஆராய்ந்தால் விளங்கும், சச்சின் சராசரி வீரர் இல்லை என்பது. இந்தப் பட்டியலில், முதலிடத்தில் இருக்கும் கோலியைத் தவிர (51.41), வேறு எந்த வீரருடைய சராசரியும், சச்சினைத் தாண்டி (50.01) இல்லை. விவிஎஸ் லக்ஷ்மண் தவிர்த்து யாரும், 47ஐ கூடத் தாண்டவில்லை என்பதே சொல்லும், அவரது சாதனையின் மதிப்பீட்டை. உண்மையில், 2010-க்கு முன்னதாக இதே பட்டியலை, பின்நோக்கி நீட்டித்து, இந்திய வீரர்களோடு மட்டுமின்றி, மற்ற நாட்டு வீரர்களையும், இந்த ஓப்பீட்டில் இழுத்து விட்டாலும், பட்டியலில் பல இடங்களில், வேறு எந்தப் பெயர் இருக்கிறதோ இல்லையோ, சச்சினின் பெயர் ஒளிரத்தான் செய்யும்.

சச்சின், முரளிதரன்

சரி, கவனத்தைச் சிதற விடாமல், 2010-க்குப் பின்னதாக இந்திய வீரர்கள் விளையாடிய போட்டிகளை மட்டும் இந்த விவாதத்தில் எடுத்துக் கொண்டாலும், சச்சினுக்கு இணையாக, நிலைத்தன்மையோடு கூடிய, நம்பத்தகுந்த ஒரு மாற்று வீரரை, இந்தியா இன்னமும் தேடிக் கொண்டுதான் இருக்கிறது.

மேலே கண்டதில் இரண்டாவது கூற்று, சச்சின் எந்தளவு, சக வீரர்களை தாண்டியும் சாதித்திருக்கிறார் என்பதைக் காட்டுகிறது, அதுவும் பௌலர்கள் ஆதிக்கம் செலுத்தும் காலகட்டத்தில், ஆஸ்திரேலியாவின் அஸ்திரமாக இருந்த பௌலர்களையே ஆட்டிப் பார்த்தவர் என்பதையும் உணர்த்துகிறது. அவர் சந்தித்த எதிரணி, களம் எல்லாமே, இன்றைய சூழலில் இருப்பதைக் காட்டிலும், சற்றே அச்சமூட்டுவதாக இருந்தன. இதுதான், சச்சின் ஏன் சரித்திர நாயகனாக கொண்டாடப்படுகிறார் என்பதையும் உணர்த்துகிறது. ஃபார்ம் இழந்து தடுமாறினார் என்ற கருத்துக்களை எல்லாம் உடைத்தெறிந்து, மறுபடியும், தன்னை நிருபித்துக் காட்டியிருந்தார் சச்சின்.

Also Read: ENG Vs IND : கோலி அவுட்…. ஜேம்ஸ் ஆண்டர்சன் தூக்கிய 3 விக்கெட்ஸ்! LIVE UPDATES

ஆனால், அந்த முதல் கூற்று, விவாதத்துக்கு வித்திடுகிறது. அத்தகைய பௌலிங் படைகளையே, சச்சின் பொடிப் பொடியாக்கினார் எனில், தற்போதைய நிலையில், புஜாரா மற்றும் ரஹானேவின் சராசரிகள், அவருடையதையும் தாண்டி, தடம் பதித்திருக்க வேண்டும். சச்சினுக்கு பதில் இவர் அந்த இடத்தைப் பிடிப்பார் என அடையாளம் காட்டப்படும் கோலியின் சராசரி, பௌலர்களின் கை ஓங்காத இக்கால கட்டத்தில், 60-களில் உலா வந்திருக்க வேண்டும். இது எதுவும் நடைபெறாததுதான், தற்போதைய இந்திய அணி இன்னமும், டெஸ்ட்டில் சச்சின் போன்ற ஒரு வீரரை தேடிக்கொண்டிருக்கிறது என்பதைப் புரியவைக்கிறது.

சச்சின் டெண்டுல்கர் | INDvENG

கோலியையோ மற்ற வீரர்களையோ, குறைத்து மதிப்பிடுவது இங்கே நோக்கமல்ல. சச்சின் எந்தளவு காலம், களம் எல்லாவற்றையும் தாண்டி சாதித்துச் சென்றுள்ளார் என்பதை விளக்குவதோடு, நமது தற்போதைய வீரர்கள் குறித்த சுயபரிசோதனையின் அவசியத்தையும், அவர்கள் போக வேண்டிய தூரத்தின் நீளத்தையும் இது புரிய வைக்கிறது.

சரி ஓப்பீடடையும், செப்பனிடும் பணிகளையும் பின்னர் பார்த்துக் கொள்வோம். இணையில்லா அச்சரித்திர நாயகனைக் கொண்டாடித் தீர்ப்போம்!

அவரது காலகட்டத்தில் இருந்த ஃபேபுலஸ் 4 -ல் தலைசிறந்தவராக மட்டுமன்றி, தற்போதுள்ள ஃபாப் 4-உடன் ஒப்பிட்டால் கூட, சச்சினின் சாதனைகள், யாருக்கும் இளைத்ததாக இல்லை.

MILES TO GO BEFORE I SLEEP என ஆங்கிலத்தில் சொல்லப்படுவதுண்டு. சச்சின் ஓய்வு பெறுவதற்கு முன், கிரிக்கெட்டில் கடந்துள்ளது மைல்களை அல்ல மைல்கற்களை!THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: