இந்திய பவுலர்கள் ஏமாற்றம்: ஜோ ரூட் சதம்

Spread the love

லீட்ஸ்: மூன்றாவது டெஸ்டில் இந்திய பவுலர்கள் ஏமாற்றினர். கேப்டன் ஜோ ரூட் சதம் விளாச இங்கிலாந்து அணி வலுவான முன்னிலை பெற்றது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இந்திய அணி 1–0 என, முன்னிலையில் உள்ளது. மூன்றாவது டெஸ்ட் லீட்சில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 78 ரன்னுக்கு சுருண்டது. முதல் நாள் முடிவில், முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 120 ரன் எடுத்திருந்தது. பர்ன்ஸ் (52), ஹமீது (60) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

நல்ல துவக்கம்: இரண்டாம் நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சை தொடர்ந்த இங்கிலாந்து அணிக்கு ரோரி பர்ன்ஸ், ஹசீப் ஹமீது நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 135 ரன் சேர்த்த போது முகமது ஷமி ‘வேகத்தில்’ பர்ன்ஸ் (61) போல்டானார். அடுத்து வந்த டேவிட் மாலன், பவுண்டரி அடித்து தனது ரன் கணக்கை துவக்கினார். இவர், சிராஜ் வீசிய 58வது ஓவரில் 2 பவுண்டரி விளாசினார். பொறுப்பாக ஆடிய ஹமீது (68), ரவிந்திர ஜடேஜா ‘சுழலில்’ போல்டானார்.

 

ரூட் அபாரம்: பின் இணைந்த கேப்டன் ஜோ ரூட், டேவிட் மாலன் ஜோடி இந்திய பந்துவீச்சை எளிதாக சமாளித்தது. ஷமி வீசிய 68வது ஓவரில் 2 பவுண்டரி விரட்டிய ரூட், ஜடேஜா வீசிய 71வது ஓவரிலும் 2 பவுண்டரி அடித்தார். ஷமி வீசிய 84வது ஓவரில் தொடர்ச்சியாக 2 பவுண்டரி விரட்டிய மாலன், அரைசதம் கடந்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு 139 ரன் சேர்த்த போது சிராஜ் பந்தில் மாலன் (70) அவுட்டானார்.

 

அபாரமாக ஆடிய ரூட், டெஸ்ட் அரங்கில் தனது 23வது சதமடித்தார். தவிர இவர், இத்தொடரில் தொடர்ச்சியாக 3வது சதத்தை பதிவு செய்தார். ஷமி பந்தில் பேர்ஸ்டோவ் (29), பட்லர் (7) சரணடைந்தனர். பும்ரா ‘வேகத்தில்’ ரூட் (121) போல்டானார். மொயீன் அலி (8), சாம் கர்ரான் (15) நிலைக்கவில்லை.

இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்கு 423 ரன் எடுத்து, 345 ரன் முன்னிலை பெற்றிருந்தது. ஓவர்டன் (24) அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா சார்பில் ஷமி 3 விக்கெட் வீழ்த்தினார்.

 

முன்னாள் கேப்டன் மரணம்

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் டெட் டெக்ஸ்டர் 86. மொத்தம் 60 டெஸ்டில் (4502 ரன், 66 விக்கெட்) பங்கேற்றுள்ள இவர், சமீபத்தில் சிறந்த வீரருக்கான ஐ.சி.சி., ‘ஹால் ஆப் பேம்’ பட்டியலில் சேர்க்கப்பட்டார். வயது மூப்பு காரணமாக நேற்று முன்தினம் (ஆக. 25) இரவு காலமானார். இதற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக 3வது டெஸ்டின் 2ம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர்கள் கையில் கறுப்பு பட்டை அணிந்திருந்தனர்.

 

சிராஜ் மீது தாக்குதல்

லீட்ஸ் டெஸ்டின் முதல் நாள் ஆட்டத்தில் பவுண்டரி பகுதியில் பீல்டிங் செய்து கொண்டிருந்த இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் மீது கேலரியில் அமர்ந்திருந்த ரசிகர் ஒருவர் பந்தை எறிந்தார். இம்முறை இந்திய வீரர்கள் தாக்கப்படுவது முதன்முறையல்ல. சமீபத்தில் முடிந்த லார்ட்ஸ் டெஸ்டில் இந்திய வீரர் லோகேஷ் ராகுல் மீது பாட்டில் மூடி வீசப்பட்டது.

இதுகுறித்து இந்திய  அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷாப் பன்ட் கூறுகையில், ‘‘ரசிகர்கள் கூட்டத்தில் இருந்து யாரோ ஒருவர் சிராஜ் மீது பந்தை எறிந்தார். இதுகுறித்து சிராஜ் தெரிவித்த போது கேப்டன் கோஹ்லி மிகுந்த வேதனையுடன், கோபமடைந்தார். மைதானத்தில் உள்ள வீரரிடம், ரசிகர்கள் என்ன கேள்வி வேண்டுமானாலும் கேட்கலாம். ஆனால் இப்படி எதையும் வீசக் கூடாது. இது கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல,’’ என்றார்.

இந்த ஆண்டு ஆஸ்திரேலிய பயணத்தின் போதும், ரசிகர்கள் சிராஜை தகாத வார்த்தைகளால் திட்டினர்.

 

41 விக்கெட்டுக்கு பின்

ஜடேஜா பந்தில் ஹமீது அவுட்டானார். இதன்மூலம் இத்தொடரில் இந்திய ‘சுழலில்’ முதல் விக்கெட் பதிவானது. தவிர, இத்தொடரில் இந்திய ‘வேகங்கள்’ 41 விக்கெட் கைப்பற்றிய பின், இந்திய ‘சுழலுக்கு’ முதல் விக்கெட் கிடைத்துள்ளது. இதற்கு முன், 1989–90ல் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் 25 விக்கெட் சாய்த்த பின், இந்திய சுழலுக்கு முதல் விக்கெட் கிடைத்தது.

ஜோ ரூட் ஜோர்

6

டெஸ்ட் அரங்கில் 23வது சதத்தை பதிவு செய்த ஜோ ரூட், இந்த ஆண்டு 6வது சதமடித்தார். இதன்மூலம் ஒரே ஆண்டில் 6 சதமடித்த 3வது இங்கிலாந்து வீரரானார். ஏற்கனவே டெனிஸ் காம்ப்டன் (1947), மைக்கேல் வான் (2002) இப்படி சதமடித்திருந்தனர்.

 

8

அபாரமாக ஆடிய ஜோ ரூட், இந்தியாவுக்கு எதிராக தனது 8வது சதத்தை பதிவு செய்தார். இதன்மூலம் டெஸ்ட் அரங்கில் இந்தியாவுக்கு எதிராக அதிக சதமடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை விண்டீசின் கேரி சோபர்ஸ், விவியன் ரிச்சர்ட்ஸ், ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோருடன் பகிர்ந்து கொண்டார். இவர்கள் தலா 8 சதமடித்துள்ளனர்.

 

39

ஜோ ரூட், டெஸ்டில் 23, ஒருநாள் போட்டியில் 16 சதமடித்துள்ளார். இதன்மூலம் மூன்று வகையான போட்டிகளிலும் சேர்த்து அதிக சதமடித்த (39) இங்கிலாந்து வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். அடுத்த இரு இடங்களில் அலெஸ்டர் குக் (38 சதம்), கெவின் பீட்டர்சன் (32) உள்ளனர்.

 

12

கேப்டனாக 12வது சதமடித்தார் ஜோ ரூட். இதன்மூலம் டெஸ்ட் அரங்கில் கேப்டனாக அதிக சதமடித்த இங்கிலாந்து வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை அலெஸ்டர் குக் (12) உடன் பகிர்ந்து கொண்டார்.

 

4

டெஸ்டில் இந்த ஆண்டு இந்தியாவுக்கு எதிராக 4வது முறையாக சதமடித்தார் ஜோ ரூட். இதன்மூலம் டெஸ்ட் அரங்கில் ஒரே ஆண்டில் இந்தியாவுக்கு எதிராக 4 சதமடித்த 5வது வீரரானார். ஏற்கனவே விண்டீசின் கிளைவ் லாய்டு (1983), சந்தர்பால் (2002), இலங்கையின் அரவிந்த டி சில்வா (1997), தென் ஆப்ரிக்காவின் ஹசிம் ஆம்லா (2010) இப்படி சதமடித்திருந்தனர்.

Advertisement

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: