இந்திய டென்னிஸ் எதிர்காலம்

Spread the love


புதுடில்லி: புதிய டென்னிஸ் நட்சத்திரங்கள் இல்லாமல் இந்திய டென்னிஸ் தவிக்கிறது. பயஸ், பூபதி, சானியாவுக்கு பின் தரமான வீரர், வீராங்கனைகளை காண முடியவில்லை. சமீபத்திய ஒலிம்பிக்கில் கூட டென்னிசில் பதக்கம் வெல்ல இயலவில்லை. இந்த நிலை விரைவில் மாற வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

டென்னிஸ் அரங்கில் இந்திய நட்சத்திரங்களுக்கு முன்னோடியாக ராமநாதன் கிருஷ்ணன், விஜய் அமிர்தராஜ் இருந்தனர். அதன்பின், லியாண்டர் பயஸ் 48, மகேஷ் பூபதி 47, நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்தனர். கடந்த 1996ல் அமெரிக்காவில் நடந்த அட்லாண்டா ஒலிம்பிக் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பயஸ், வெண்கலம் வென்றார். இது தான், ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்த ஒரே பதக்கம். அதன்பின், இந்தியாவுக்கு ஒரு பதக்கம் கூட கிடைக்கவில்லை.

 

கிராண்ட்ஸ்லாம் இரட்டையரில் பயஸ், பூபதி ஆதிக்கம் செலுத்தினர். ஆண்கள் இரட்டையரில் 8 பட்டம் வென்ற பயஸ், கலப்பு இரட்டையரில் 10 பட்டங்களை அள்ளினார். இதன்மூலம் கிராண்ட்ஸ்லாம் அரங்கில் அதிக முறை கோப்பை வென்ற இந்தியரானார். தவிர இவர், டேவிஸ் கோப்பை இரட்டையரிலும் அதிக வெற்றி (45) பெற்று சாதனை படைத்தார். மறுமுனையில் அசத்திய பூபதி, ஆண்கள் இரட்டையரில் 4, கலப்பு இரட்டையரில் 8 என, 12 பட்டங்களை தட்டிச் சென்றார். பயஸ்–பூபதி கூட்டணி டேவிஸ் கோப்பை இரட்டையரில் அதிகபட்சமாக 25 வெற்றிகளை பதிவு செய்தது.

 

சானியா ஆறுதல்: இவர்களுக்கு பின், இந்திய வீராங்கனை சானியா மிர்சா 34, ஓரளவு நம்பிக்கை தந்தார். ஒற்றையரில் பெரிய அளவில் சோபிக்காத இவர், இரட்டையரில் இதுவரை 42 பட்டம் வென்றுள்ளார். இதில் கிராண்ட்ஸ்லாம் அரங்கில் 6 பட்டம் (3 பெண்கள் இரட்டையர், 3 கலப்பு இரட்டையர்) அடங்கும். இதனால் டபிள்யு.டி.ஏ., இரட்டையர் தரவரிசையில் ‘நம்பர்–1’ இடம் பிடித்தார். ஆனால் காயம், திருமணம், குழந்தை பிறப்பு, வயது காரணமாக தற்போது சொதப்பி வருகிறார். சமீபத்தில் முடிந்த டோக்கியோ ஒலிம்பிக் இரட்டையரில் முதல் சுற்றோடு திரும்பினார்.

 

தொடரும் சோகம்: அதன் பின், சோம்தேவ் தேவ்வர்மன், யூகி பாம்ப்ரி, பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன், சாகேத் மைனேனி, திவிஜ் சரண், புரவ் ராஜா, விஷ்ணு வர்தன், சுமித் நாகல், ரோகன் போபண்ணா, ராம்குமார் ராமநாதன், அன்கிதா ரெய்னா என, பலர் வந்த போதும் பெரிய அளவில் சோபிக்காதது சோகம் தான்.

சாலஞ்சர், ஐ.டி.எப்., உட்பட ஒரு சில போட்டிகளில் மட்டும் சிறப்பாக செயல்படும் இவர்களால் மிகப் பெரிய தொடர்களில் வெற்றியை தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை. தவிர கிராண்ட்ஸ்லாம் தொடரின் பிராதன சுற்றுக்கு நேரடியாக தகுதி பெற முடியவில்லை. தட்டுத்தடுமாறி தகுதி பெற்றாலும், முன்னணி வீரர்களிடம் தோல்வியடைந்து பாதியில் வெளியேறிவிடுகின்றனர்.

 

சர்வதேச டென்னிஸ் அரங்கில் இந்திய நட்சத்திரங்கள் ஆதிக்கம் செலுத்த, அனைத்து இந்திய டென்னிஸ் கூட்டமைப்பு முயற்சி மேற்கொள்ள வேண்டும். இளம் வீரர், வீராங்கனைகளுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். தரமான டென்னிஸ் நட்சத்திரங்கள் உருவானால் தான் ஒலிம்பிக், கிராண்ட்ஸ்லாம் போன்ற மிகப் பெரிய போட்டிகளில் இந்தியா பிரகாசிக்க முடியும். 

Advertisement

THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: