இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கரோனா தொற்று: 3 பேர் கட்டாயத் தனிமை | Ravi Shastri tests positive for Covid-19, three support staff members go into isolation

Spread the love

இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருடன் இருந்த அணி ஊழியர்கள் 3 பேர் கட்டாயத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 4-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. வீரர்கள் யாருக்கும் கரோனா தொற்று ஏற்படாமல் இருக்க அனைவரும் பயோ-பபுள் சூழலுக்குள் இருந்து பயிற்சி பெற்று வருகிறார்கள்.

இலங்கைத் தொடரை முடித்துவிட்டு வந்த பிரித்விஷா, சூர்யகுமார் யாதவும் கட்டாயத் தனிமையை முடித்துவிட்டுதான் அணியின் பயோ-பபுள் சூழலுக்குள் இணைந்தனர். இரு அணி வீரர்கள் தங்கியிருக்கும் ஹோட்டல், பயிற்சி மைதானம், உடற்பயிற்சிக் கூடம் ஆகியவற்றில் வேற்று நபர்கள் யாரும் வராத வகையில் பயோ-பபுள் சூழலுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்நிலையில் இத்தகைய கடும் பாதுகாப்பையும் மீறி இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருடன் நெருக்கமாக இருந்த அணியின் உதவி அலுவலர்கள் 3 பேர் கட்டாயத் தனிமைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இதை பிசிசிஐ அமைப்பும் உறுதி செய்துள்ளது.

பிசிசிஐ அமைப்பின் செயலாளர் ஜெய் ஷா வெளியிட்ட அறிவிப்பில், “ பிசிசிஐ மருத்துவக் குழுவினர் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பந்துவீச்சுப் பயிற்சியாளர் பி.அருண், ஃபீல்டிங் பயிற்சியாளர் ஆர்.ஸ்ரீதர், பிசியோதெரபிஸ்ட் நிதின் படேல் ஆகியோரை முன்னெச்சரிக்கையாகத் தனிமைப்படுத்தி வைத்துள்ளனர்.

பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு நேற்று நடத்தப்பட்ட ரேபிட் பரிசோதனையில் அவருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, இந்த 3 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இனிமேல், இந்த 4 பேரும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளனர். இவர்கள் ஹோட்டலில்தான் தங்கியிருப்பார்கள். அணி வீரர்களுடன் செல்லமாட்டார்கள்.

இந்திய அணியின் மற்ற வீரர்கள் அனைவருக்கும் நேற்று இரவும், இன்று காலையும் ரேபிட் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் யாருக்கும் கரோனா இல்லை எனத் தெரியவந்துள்ளது ஆதலால், 4-வது நாள் ஆட்டம் எந்தவிதமான இடையூறுமின்றி நடக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: