இந்தியாவின் வெற்றிக்காக உதவிய யானையும், குதிரையும்: இங்கிலாந்தில் 50 ஆண்டுகளில் வென்ற முதல் டெஸ்ட் தொடர்  | How A Horse And An Elephant Helped India To First Test Win In England

Spread the love


இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று லண்டன் ஓவல் மைதானத்தில் 4-வது டெஸ்ட் போட்டி நடைபெற இருக்கும் நிலையில் 50 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மைதானத்தில் இந்திய அணி பெற்ற வெற்றியை நினைவுகூர வேண்டியது அவசியமாகும்.

கடந்த 1971-ம் ஆண்டு அஜித் வடேகர் தலைமையில் சென்ற இந்திய அணி, லண்டன் ஓவல் மைதானத்தில் பெற்ற வெற்றிதான் இந்திய அணியின் முதல் டெஸ்ட் தொடர் வெற்றியாகும்.

அதன்பின் இதுவரை லண்டன் ஓவல் மைதானத்தில் இந்திய அணி இங்கிலாந்து அணியை வென்றதே இல்லை. ஏறக்குறைய 50 ஆண்டுகளில் பலமுறை டிரா செய்துள்ள இந்திய அணி, இதுவரை ஒருமுறைகூட வென்றது இல்லை. 50 ஆண்டுகளுக்கு முன் இந்திய அணி பெற்ற வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தவர்

சுழற்பந்துவீச்சாளர் பி.எஸ்.சந்திரசேகர். போலியோ நோயால் பாதிக்கப்பட்ட போதிலும் கிரிக்கெட்டில் தன்னுடைய பந்துவீச்சில் தனி முத்திரை பதித்தவர். 58 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய சந்திரசேகர் 242 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

பி.எஸ்.சந்திரசேகர்

விராட் கோலி தலைமையில் களமிறங்கும் இந்திய அணி 50 ஆண்டுகால வெற்றிப் பஞ்சத்தைத் தீர்க்குமா என்பது எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. இந்த எதிர்பார்ப்பு ஒருபுறம் இருந்தாலும், 50 ஆண்டுகளுக்கு முன் இந்திய அணி பெற்ற வெற்றியின் சுவாரஸ்யமான நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளலாம்.

கடந்த 1971-ம் ஆண்டு ஆகஸ்ட் 19 முதல் 24-ம் தேதிவரை இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே டெஸ்ட் போட்டி நடந்தது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 335 ரன்களும், இந்திய அணி 284 ரன்களும் சேர்த்தன. 2-வது இன்னிங்ஸில், 51 ரன்கள் முன்னிலை பெற்று களமிறங்கிய இங்கிலாந்து அணி, 101 ரன்களில் ஆட்டமிழந்தது.

அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்திய இந்திய சுழற்பந்துவீச்சாளர் சந்திரசேகர் 38 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு காரணமாக அமைந்தார். வெங்கட்ராகவன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இங்கிலாந்து அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான எட்ரிச், பிளெட்சர் இருவரையும் சந்திரசேகர் தனது மாயஜால சுழற்பந்துவீச்சால் வெளியேற்றியதுதான் ஆட்டத்தின் திருப்புமுனை, 173 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 101 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. டெஸ்ட் தொடரையும் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.

இந்திய அணியின் இந்த வெற்றிக்கு யானையும், குதிரையும் மனதளவில் காரணமாக இருந்ததுதான் சுவாரஸ்யமான சம்பவமாகும். லண்டனில் உள்ள இந்திய ரசிகர்கள் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, செஸிங்டன் வன உயிரியல் பூங்காவில் இருந்து பெல்லா என்ற யானையை வாடகைக்கு எடுத்து அதற்கு விநாயகர் அலங்காரம் செய்து மைதானத்துக்கு அழைத்து வந்தனர். விநாயகர் உருவமான யானை இருந்தால் இந்திய அணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் அழைத்து வந்திருந்தனர்.

ஓவல் மைதானத்தில் பெற்ற இந்திய அணி வெற்றி பெற்று 50 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. இதையொட்டி, லண்டனில் உள்ள தாஜ் செயின்ட் ஜேம்ஸ் ஹோட்டலில் சிறப்பு நிகழ்ச்சி நடந்து. இதில் முன்னாள் இந்திய அணி வீரர் பகவத் சுப்பிரமணிய சந்திரசேகர் நேரடியாகப் பங்கேற்க முடியாவிட்டாலும், சிறப்பு வீடியோ செய்தியை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

” 50 ஆண்டுகளுக்கு முன் இந்திய அணி ஓவல் மைதானத்தில் பெற்ற வெற்றி பசுமையாக இருக்கிறது. இங்கிலாந்தின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை நானும், திலீப் சர்தேசாயும் பேசிவைத்து ஆட்டமிழக்க வைத்தோம். இங்கிலாந்து வீரர் ஜான் எட்ரிச் பேட்டிங் செய்ய வந்தபோது, என்னிடம் திலிப் சர்தேசாய் கூறியது இன்னும் நினைவில் இருக்கிறது.

“ஏய் சந்திரா, எட்ரிச் பேட் செய்ய வந்துள்ளார், மில் ரீப் வேகத்தில் பந்து வீசு” என்று சத்தமாகத் தெரிவித்தார். மில் ரீப் என்பது இங்கிலாந்தில் நடக்கும் குதிரைப் பந்தயப் போட்டியில் அதிவேகமாக ஓடிப் பரிசுகளை வென்ற குதிரையின் பெயர். ஆதலால், சுழற்பந்துவீச்சாளரான என்னை வேகமாகப் பந்துவீசி பேட்ஸ்மேனை ஏமாற்றிவிடு என்று மறைமுகமாகத் தெரிவித்தார்.

அதற்கு ஏற்ப நான் கூக்ளி முறையில் பந்துவீச எட்ரிஜ் பேட்டைத் தூக்குவதற்குள் க்ளீன் போல்டாகி வெளியேறினார். அடுத்துவந்த பிளெட்சரும் டக் அவுட்டில் ஆட்டமிழந்தார்”.

இவ்வாறு பகவத் சுப்பிரமணிய சந்திரசேகர் தெரிவித்தார்.

அந்தப் போட்டியில் இந்திய அணிக்கு விக்கெட் கீப்பராக இருந்த பரூக் இன்ஜினீயர் கூறுகையில், “ இந்திய கிரிக்கெட்டில் சந்திரசேகர் மிகச்சிறந்த சுழற்பந்துவீச்சாளர் என்பதை மறுக்க முடியாது. எர்ரபள்ளி பிரசன்னா, பிஷன் சிங் பேடி, வெங்கட்ராகவன் வரிசையில் சந்திரசேகரும் ஒருவர். போலியோவில் சந்திரசேகர் பாதிக்கப்பட்டதால், அவர் பந்துவீசும்போது பந்து எந்த திசையில் சுழல்கிறது என்பது அவராலேயே கண்டுபிடிக்க முடியாது. இது அவருக்குரிய மிகப்பெரிய சொத்தாக அமைந்தது” எனத் தெரிவித்தார்.

இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறுகையில், “இந்திய அணி முதல் டெஸ்ட் வெற்றியைப் பெற்றபோது, எனக்கு 9 வயது. பிபிசி வானொலியில் 9.74 மீட்டர் வேவ்லென்த்தில் 31 மீட்டர் அலைவரிசையில் வர்ணனை கேட்டேன். ஒவ்வொரு பந்தின் வர்ணனையும் கேட்டேன்” எனத் தெரிவித்தார்.

THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: