இது உங்கள் இடம்: பெண்களின் கையில் தமிழகம்!| Dinamalar

Spread the love


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:

கு.அருணாச்சலம், கடலுாரிலிருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்:

இப்பகுதியில், ‘பெண் தன்மானத்திற்கு சவால்’ என்ற தலைப்பில், வாசகி ஒருவர் எழுதியிருந்த கடிதம், மிக சரியானது. ஒவ்வொரு தேர்தலிலும் ஆண்களை விட, பெண் வாக்காளர் எண்ணிக்கை தான் அதிகமாகும். அந்த வகையில், இந்த தேர்தலிலும், ஆண்களை விட, பெண் வாக்காளர்கள், 10 லட்சம் பேர் அதிகமாக உள்ளனர்.

இந்த பெண்களின் ஓட்டுக்களை கவரத் தான், அரசியல் கட்சிகள், பல இலவச பொருட்களை தருவதாக, வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளன. இந்த பொருட்களை, நம் சொந்த உழைப்பில் வாங்குவதற்கு வழிவகை செய்யாமல், இன்று வரை, நம்மை பிச்சைக்காரர்களாக மாற்றியது யார் என்று சிந்தியுங்கள் பெண்களே!

நியாயமாக, நம் குடும்ப உறுப்பினர்களுக்கு சரியான வேலைவாய்ப்பு உருவாக்கி தந்திருந்தால், நாம் ஏன் இந்த இலவசங்கள் பெற, வரிசைக்கட்டி நிற்க வேண்டும்? மேலும், நம் குடும்பத்தில் உள்ள ஆண்கள், தினமும், ‘டாஸ்மாக்’ கடைக்கு சென்று, சம்பாதிக்கும் பணத்தில், பெரும் பகுதியை இழந்து வருகின்றனர்.அந்த வருமானத்தில் தான், இலவச பொருட்கள் வழங்கப்படுகின்றன. நம் ஆண்களை, ‘குடி’காரர்களாக மாற்றி, குடும்ப நிம்மதி கெடுத்து, நமக்கு இலவச பொருட்கள் தருவது, எந்த விதத்தில் நியாயம்?

latest tamil news

‘குடி’யால், குடும்பம் நடத்த முடியாமல் பாதிக்கப்பட்டது, பெண்கள் தான். தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதியில், மதுவிலக்கு சம்பந்தமாக ஒரு வரி இல்லை. ஆனால், 2016 தேர்தலில் வெற்றி பெற்றால், முதல் கையெழுத்தே, பூரண மதுவிலக்கு தான் என்றனர்; இன்று அதை, மறந்து விட்டனர். அ.தி.மு.க.,வும் பூரண மதுவிலக்கு குறித்து, ஏதும் அறிவிக்கவில்லை.

அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டியது, பெண் வாக்காளர்களே. தற்போது, ஒவ்வொரு குடும்பமும், பெண்ணால் தான் வழி நடத்தப்படுகிறது.எனவே, இந்த முறை ஆட்சியில் அமர வேண்டியவர் யார் என்பதை, பெண்கள் தான் முடிவு செய்ய உள்ளனர்.அவர்களின் கையில் தான், தமிழகத்தின் எதிர்காலம் உள்ளது.

AdvertisementSource link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: