இது உங்கள் இடம்: புறவாசல் பதவி வேண்டாமே!| Dinamalar

Spread the love


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:

சொ.பீமன், அல்லம்பட்டி, விருதுநகர் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: மேல்சபையை உயிர்ப்பிப்பதால், பொதுமக்களுக்கு எந்த நன்மையும் கிடையாது. ‘ஆட்டுக்கு, தாடியால் எந்தப் பயனும் இல்லை. அதுபோல் கவர்னர் பதவியால், பொதுமக்களுக்கு எந்த நன்மையும் இல்லை’ என, விமர்சனம் செய்தோர் தற்போது, ‘மேல்சபையை மீண்டும் அமைப்போம்’ என்று, தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருப்பது, வியப்பாக உள்ளது.

மேல் சபையின் நோக்கமே, சட்டசபையில் நிறைவேற்றப்படும் சட்டங்களை சீர்துாக்கி ஆய்வு செய்து, ஒப்புதல் அளிக்கும் பணியாகும். அதனால் மேல்சபையில், சட்ட வல்லுனர், பொருளாதார நிபுணர் மற்றும் பிற துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்கள் இடம் பெற்றிருந்தனர். நாளடைவில், சட்டசபை தேர்தலில் தோற்கடிக்கப்பட்டோருக்கு, புறவாசல் வழியாக, பதவி வழங்குவதற்கு மேல்சபை பயன்படுத்தப்பட்டது. அதனாலேயே, மேல்சபை ஒழிக்கப்பட்டது.

latest tamil news

மக்களால், தேர்தலில் நிராகரிக்கப்பட்டவருக்கு, சட்டம் இயற்றும் சபையில் உறுப்பினர் பதவி வழங்குவது, ஜனநாயகத்துக்கு புறம்பான செயல். தமிழக சட்டசபையில் உறுப்பினர்கள் எண்ணிக்கை, 234 மட்டுமே உள்ளது. இவற்றை கூட்டணிக் கட்சிகளுக்கு பங்கிடுவதிலும், கட்சிக்காரர்களை திருப்திப்படுத்துவதிலும் சிரமம் உள்ளது என்பது புரிகிறது. அதற்காக, மேல்சபையை உருவாக்குவது தீர்வாக இருக்கக் கூடாது.

சட்டசபையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மட்டுமே இடம் பெற்றிருக்க வேண்டும். எனவே சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையை, 500 ஆக உயர்த்த, பார்லிமென்ட்டில் குரல் கொடுங்கள். தங்களுக்கான பிரதிநிதியை, மக்களே தேர்ந்தெடுக்கட்டும்; அதுவே, உண்மையான ஜனநாயகமாக அமையும்.

AdvertisementSource link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *