இங்கிலாந்துடன் நாளை 2-வது டெஸ்ட்: அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்குமா? ‘டான்ஸிங் ரோஸ்’ ஆகிறாரா கோலி? | 2nd Test: Shardul injury may bring Ashwin back on radar as India aim for better batting show

Spread the love

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. அனுபவமான பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்குமா அல்லது வேகப்பந்துவீச்சாளருக்கு வாய்ப்பு அளிப்பாரா கோலி என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

நாட்டிங்ஹாமில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றிக் காற்று இந்திய அணியின் பக்கம்தான் வீசியது. கடைசி நாளில் 157 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற நிலையில் இந்திய அணி வசம் 9 விக்கெட்டுகள் கைவசம் இருந்தன. மழை இல்லாமல் இருந்திருந்தால், இந்திய அணி 1-0 என்ற கணக்கில் வென்று முன்னிலையில் இருந்திருக்கும்.

இந்திய அணி முதல் டெஸ்ட்டில் ஆதிக்கம் செலுத்தியதற்கு முக்கியக் காரணமாக பும்ரா, ஷமி, ராகுல், தாக்கூர், சிராஜ், ஜடேஜா ஆகியோரை மட்டும்தான் கூறமுடியும். அணியில் அனுபவமான வீரர்கள் என்று கூறிக்கொண்டு இருக்கும் கேப்டன் கோலி, துணை கேப்டன் ரஹானே, புஜாரா மூவரும் குறிப்பிடத்தகுந்த ஸ்கோர் அடிக்கவில்லை.

இந்த 3 பேட்ஸ்மேன்களின் கடந்த 2 ஆண்டுகால பேட்டிங் சராசரியைப் பார்த்தால் மிக மோசமாக இருக்கிறது. அதிலும் ரஹானேகூட ஆஸ்திரேலியாவில் சதம் அடித்துவிட்டார். ஆனால், விராட் கோலியும், புஜாராவும் கடந்த 2 ஆண்டுகளாக சதம் அடிக்கவில்லை, அரை சதத்தை சதமாக்க முடியாமல் இருவரும் திணறிவருகிறார்கள்.

அதிலும் கேப்டன் விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம் கழுதை தேய்ந்து கட்டெறும்பாகிவிட்டதுபோல் இருக்கிறது. 2019-ம் ஆண்டிலிருந்து கோலியின் டெஸ்ட் போட்டி புள்ளிவிவரங்களைக் காணலாம்.

2019-ம் ஆண்டில் விராட் கோலி 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 612 ரன்கள் சேர்த்துள்ளார், இதில் 2 சதங்கள், 2 அரை சதங்கள். இரு சதங்களுமே இந்தியாவில் அடிக்கப்பட்டவை என்பதை மறந்துவிடக் கூடாது. சராசரி 68 ரன்களாக இருந்தது.

2020-ம் ஆண்டில் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியகோலி 116 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார், ஒரு அரை சதம் மட்டுமே அடித்துள்ளார். இந்த ஆண்டில் கோலியின் சராசரி 19 ரன்கள்தான்.

2021-ம் ஆண்டில் 6 டெஸ்ட் போட்டிகளில் இதுவரை ஆடிய கோலி 229 ரன்கள்தான் சேர்த்துள்ளார். இதில் 2 அரை சதங்கள் அடங்கும், சராசரி 25 ரன்கள்தான். மூன்று முறை டக் அவுட் ஆகியுள்ளார்.

2018-ம் ஆண்டில் 10 டெஸ்ட் போட்டிகளில் 4 சதங்கள், 2 அரை சதங்கள் உள்பட 1,036 ரன்கள் சேர்த்த கோலி, 2019, 2020,2021 ஆகிய 3 ஆண்டுகளில் சேர்த்து 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 2 சதங்கள், 5 அரை சதங்கள் உள்ளிட்ட, 957 ரன்கள்தான் சேர்த்துள்ளார்.

அதாவது 2018-ம் ஆண்டில் ஆயிரம் ரன்களுக்கு மேல் சேர்த்த விராட் கோலி, கடந்த 3 ஆண்டுகளாக 17 டெஸ்ட்போட்டிகளில் விளையாடி ஆயிரம் ரன்களைக் கூட எட்டமுடியவில்லை என்றால், அவரின் பேட்டிங் திறமை எங்கு போனது?

ஒரு கேப்டனாக இருப்பவர் டெஸ்ட் அரங்கில் கடந்த 2 ஆண்டுகளாக ஒருசதம் கூட அடிக்காமல் அணியில் எவ்வாறு நீடிக்க முடிகிறது? உலகிலேயே கேப்டனாக இருந்து அதிக அளவில் சதம் அடித்ததில் கோலி, பாண்டிங்கின் சாதனையை சமன் செய்துள்ளார். அவரைக் குறைத்து மதிப்பிடலாமா என்று கேட்பது புரிகிறது.

ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஒரு சதம் கூட கோலியால் அடிக்க முடியவில்லையே. இதுபோன்று 2 ஆண்டுகளாக சதம் அடிக்காமல் கடந்த கால சாதனைகளைக் கூறிக்கொண்டே தோனி இந்திய அணியில் காலத்தைத் தள்ளினார். இப்போது கோலி அந்த இடத்தை நிரப்ப உள்ளாரா என்ற கேள்வி எழுகிறது.

இதுபோன்று இதற்கு முன் இருந்த சச்சின், திராவிட், கங்குலி இதுபோன்று தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் சதம் அடிக்காமல் இருந்ததுண்டா? அதிலும் சச்சின் 3 போட்டிகளுக்கு மேல் சதம் அடிக்காமல் இருந்தது இல்லை. கங்குலி, திராவிட் பற்றி சொல்லவே தேவையில்லை. பேட்டிங்கில் நிலைத்தன்மை என்பது இவர்களிடம் இருந்து கற்க வேண்டும்.

ஆனால், எப்போதெல்லாம் தனது பேட்டிங் மீது விமர்சனங்கள் எழுகிறதோ அப்போது நடக்கும் போட்டிகளில் மைதானத்தில் ரசிகர்களைக் குஷிப்படுத்தும் வகையில் சேட்டைகளைச்செய்து, கை தட்டுங்கள், சத்தமிடுங்கள் எனக் கூறி, கோலி கவனத்தை திசைதிருப்பிவிடுவார்.

‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படத்தில் டான்ஸிங் ரோஸ் என்ற கதாபாத்திரம் வரும். நடனமாடிக்கொண்டே எதிராளியின் கவனத்தை திசைதிருப்பி குத்துச்சண்டையில் ரோஸ் ஈடுபடுவார். கடைசியில் கபிலினிடம் உதை வாங்கி எவ்வாறு தோல்வி அடைவாரோ அதுபோன்று ரன் ஸ்கோர் செய்ய முடியாமல் போகும்போது, தனது சேட்டைகள் மூலம் கவனத்தை திசைதிருப்பி வருகிறார் கோலி. ஒவ்வொரு முறையும் கோலியின் முயற்சி தோல்வியில்தான் முடிகிறது.

அடுத்துவரும் 4 போட்டிகளிலும் கோலி தனது பேட்டிங் திறமையை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இல்லாவிட்டால் இந்திய அணியை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்ல அடுத்த கேப்டனைக் காலம் வழங்கிவிடும்.

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூருக்குக் காயம் ஏற்பட்டுள்ளதையடுத்து, அவருக்கு பதிலாக இசாந்த் சர்மா அல்லது அஸ்வின் இருவரில் ஒருவரில் யாரை கோலி தேர்வு செய்யப்போகிறார் என்பது நாளைதான் தெரியும்.

ஹர்பஜன் சிங்கின் சாதனையை முறியடித்த சிறந்த சுழற்பந்துவீச்சாளர், எந்த மைதானத்திலும் திறமையை நிரூபித்து விக்கெட்டுகளை வீழ்த்தக்கூடிய அஸ்வினை ஏன் தேர்வு செய்ய கோலி மறுக்கிறார் எனத் தெரியவில்லை. அதிலிருக்கும் அரசியலும் புரியவில்லை.

மயங்க் அகர்வால் காயத்திலிருந்து குணமடைந்து பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவர் நாளைய ஆட்டத்தில் களமிறங்குவாரா என்பது கடைசி நேரத்தில் உடற்தகுதி சோதனைக்குப் பின்புதான் தெரியவரும்.

லார்ட்ஸ் மைதானம் நாளை க்ரீன் டாப்பாக இருக்கும் பட்சத்தில் 2018-ம் ஆண்டு நினைவலைகள் இந்திய அணிக்குத் திரும்பிவிடக் கூடாது. க்ரீன் டாப் இருக்கும் பட்சத்தில் அஸ்வினுக்கு வேலை இருக்காது. உமேஷ், இசாந்த் இருவரில் ஒருவரோடு கோலிப்படை களமிறங்கும்.

ஒருவேளை ஆடுகளத்தில் புற்கள் இல்லாமல் இருந்தால், அஸ்வின், ஜடேஜாவின் சுழற்பந்துவீச்சை சமாளிக்க இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் போராட வேண்டியது இருக்கும். அதிலும் கடைசி இரு நாட்கள் அஸ்வின் பந்துவீச்சை இங்கிலாந்து வீரர்களால் நிச்சயம் சமாளிக்க முடியாது என்ற கூறலாம். மற்ற வகையில் வேகப்பந்துவீச்சில் இந்திய அணியில் மாற்றம் ஏதும் இருக்காது.

இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரை புதிய தலைமுறை வீரர்களில் ரூட்டைத் தவிர மற்றவர்கள் மோசமான பேட்டிங்கை, நிலைத்தன்மையற்ற பேட்டிங்கைத்தான் வெளிப்படுத்தி வருகிறார்கள்.

ரோரி பர்ன்ஸுக்கு பதிலாக ஹசீப் ஹமீது சேர்க்கப்படலாம். ஸ்டூவர்ட் பிராட் காயமடைந்திருப்பதால், அவருக்கு பதிலாக மொயின் அலி களமிறங்க வாய்ப்புள்ளது. ஒருவேளை ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தால், மார்க் உட் வரக்கூடும்.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: