ஆஸி. வீரர்கள் சரியில்லை, பயிற்சியாளர் என்ன செய்வார் பாவம்: உஸ்மான் கவாஜா ஆதரவுக் குரல் | Langer will probably feel like players are ‘stabbing him in the back’: Usman Khawaja

Spread the love

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கருக்கு ஆதரவாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் உஸ்மான் கவாஜா குரல் கொடுத்துள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரை இழந்தது ஆஸ்திரேலிய அணி. மேலும் இதற்கு முன் இந்தியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரையும் இழந்தது. ஆஸ்திரேலிய அணியின் மோசமான ஆட்டத்துக்குப் பலரும் அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கரைக் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஆனால் அணியை வெற்றி பெறச் செய்வது பயிற்சியாளரின் பொறுப்பு மட்டுமல்ல, வீரர்கள் முன்னெடுப்பும் வேண்டும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியைச் சேர்ந்த உஸ்மான் கவாஜா கூறியுள்ளார்.

“ஜஸ்டின் லேங்கர் எப்படி உணர்கிறார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? அணி வீரர்கள் அவரை முதுகில் குத்துவதைப் போல அவர் நினைத்திருப்பார். ஏனென்றால் இந்தச் சூழல் அப்படித்தான் இருக்கிறது. அதனால் தான் பெரும் ஏமாற்றமாக இருக்கிறது. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அணியினர் இந்தச் சிக்கலைத் தீர்க்க வேண்டும்.

ஏனென்றால் இதெல்லாம் எப்போதுமே பயிற்சியாளர்களின் குறை அல்ல. வீரர்கள் சரியாக ஆடுவதில்லை. அவர்கள் முன்னால் வந்து பொறுப்பைக் கையில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரே ஒருவர் காரணம் அல்ல. இது குறித்தச் சரியான பார்வை வர வேண்டும்.

லேங்கரைப் பொருத்த வரை அவர் பேரார்வம் கொண்ட ஒருவர். ஆஸ்திரேலிய கிரிக்கெட்டை நேசிப்பவர். அனைவருக்கும் சிறந்ததே கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர், வெற்றியே வேண்டும் என்று ஆசைப்படுபவர். வெற்றியால் இயக்கப்படுபவர். சரியான முறையில் வெற்றி பெறுவதால் இயங்குபவர். அதுவும் அரத்தாள் சர்ச்சைக்குப் பிறகு அவர் அணியில் கொண்டு வந்த மாற்றங்கள் எல்லாமே இந்த வெற்றிக்காகத் தான்.

அவர் மிகவும் உணர்ச்சிகரமானவர் என்பதே அவரது பலவீனம். அது மட்டுமே இப்போது அவருக்குப் பிரச்சினையாக முடிகிறது. அது அவருக்கும் தெரியும். அதை அவர் மாற்றிக் கொள்ள வேண்டும். நான் இது குறித்து அவரிடமும் பேசியுள்ளேன்” என்று கவாஜா ஆதரவுக் குரல் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் டெஸ்ட் கேப்டன் டிம் பெய்னும், லேங்கருக்கு எதிரான விமர்சனங்கள் சரியானதல்ல என்று கூறியுள்ளார்.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: