இப்படி டெல்லி அணியில் எந்த சீனியர் வீரரை எடுத்தாலும், அவருக்கென்று செம பாசிட்டிவான ஒரு விஷயம் இருந்தால் அருகிலேயே நெகட்டிவான ஒரு விஷயமும் சேர்ந்தே இருந்தது. இதுதான், டெல்லி அணியை இவர்களைத்தாண்டி ஒரு வீரரை தேர்வு செய்ய தூண்டியது. இந்த இடத்தில்தான் ரிஷப் பன்ட் முக்கியத்துவம் பெறுகிறார்.

சமீபமாக, கிரிக்கெட் உலகமே ஆச்சர்யத்தில் மூழ்கும் அளவுக்கு பல அதிரடியான சம்பவங்களை நிகழ்த்தி வருகிறார் பன்ட். எந்த அணியாக, எந்த வீரராக இருந்தாலும் எதிர்த்து நின்று ஒரு கை பார்த்துவிடலாம் என்கிற துணிச்சல் அவரிடம் இருக்கிறது. மேலும் அஷ்வின், ரஹானே, ஸ்மித், தவான் போன்ற சீனியர் வீரர்களிடம் இல்லாத ஒன்றான துள்ளல்மிக்க இளமை ரிஷப் பன்ட்டிடம் இருக்கிறது. டெல்லி அணியும் டேர்டெவில்ஸாக இருந்த சமயத்தில் பல சீனியர் வீரர்களை கேப்டனாக்கி தொடர்ந்து ஏமாற்றத்தையே எதிர்கொண்டு வந்தது. கேப்பிட்டல்ஸாக மாறிய பிறகுதான் எல்லா ஃபார்முலாவையும் மாற்றி இளம் வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அணியாக மாறியது. அது அந்த அணிக்கு நல்ல பலனையும் கொடுத்தது. ஷ்ரேயாஸ் தலைமையில் டெல்லி அணி கடந்த சீசனில் இறுதிப்போட்டி வரைக்கும் முன்னேறியது. மீண்டும் ஒரு சீனியர் வீரருக்கே கேப்டன்ஸியை கொடுத்து மீண்டும் பழைய ஃபார்முலாவை கையில் எடுக்க விரும்பாத டெல்லி அணியின் ஒரே ஆப்ஷனாக ரிஷப் பன்ட் மட்டுமே இருந்தார்.
ஒரு கால்பந்து அணியின் பயிற்சியாளர் போலத்தான் ரிக்கி பான்ட்டிங் பெவிலியனில் உட்காந்து கட்டளைகளை பிறப்பித்துக் கொண்டிருப்பார். அவருடன் முக்கியமான முடிவுகளோடு ஒத்துப்போக சீனியர் வீரர்களைவிட ரிஷப் பன்ட்தான் சரியாக இருப்பார் என்பது அணி நிர்வாகத்தின் முடிவாக இருந்திருக்கிறது. எனவே, ஒரே முடிவாக ரிஷப் பன்ட்டையே கேப்டனாகவும் அறிவித்துவிட்டது டெல்லி அணி.
ஆண்டர்சனை புது பந்தில் அடித்து வெளுத்ததை போல, கேப்டன்சியிலும் யாரும் எதிர்பார்க்காத அதிரடிகளை ரிஷப் பன்ட் நிகழ்த்தினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. ஆனால், திறமையான பேட்ஸ்மேன்களை கேப்டனாக்கி அவர்கள் மேல் சுமையை ஏற்றி, கேப்டனாக மட்டுமல்லாமல் பேட்ஸ்மேனாகவும் அவர்களைத் தடுமாறவைத்த உதாரணங்கள் அதிகம் இருக்கின்றன. சச்சின் டெண்டுல்கரால் கேப்டனாக இறுதிவரை ஒரு கோப்பையைக்கூட வெல்லமுடியவில்ல. விராட் கோலி இந்தியாவின் கேப்டனாக பெரிய அனுபவம் கொண்டிருந்தாலும் பெங்களூரு அணிக்கு இதுவரை ஒரு கோப்பையைக்கூட வென்றுதரவில்லை.
மிகவும் இளம் வீரரான ரிஷப் பன்ட் சீனியர் வீரர்களை சமாளித்து, பேட்டிங் காம்பினேஷனை சரிசெய்து, பெளலிங் ரொட்டேஷனை உடனுக்குடன் மாற்றியமைத்து வின்னிங் ஃபார்முலாவை உருவாக்குவாரா என்பதைக் காண பன்ட் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்!
ரிஷப் பன்ட்டின் கேப்டன்ஸி தேர்வு குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்… கமென்ட் செய்யுங்கள்!