அஷ்வினுக்கு டெஸ்ட் யோகம் வந்தாச்சு: ஜடேஜா காயத்தால் வாய்ப்பு

Spread the love


லண்டன்: ரவிந்திர ஜடேஜா காயம் அடைந்த நிலையில், நான்காவது டெஸ்டில் அஷ்வினுக்கு வாய்ப்பு தேடி வருகிறது. 

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ‘டிரா’ ஆனது. லார்ட்சில் நடந்த இரண்டாவது போட்டியில் இந்தியா வென்றது. லீட்சில் நடந்த மூன்றாவது டெஸ்டில் ‘பேட்டிங்’ எடுபடாததால், இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்தது. தொடர் 1–1 என சமநிலையில் உள்ளது. 

நான்காவது டெஸ்ட் வரும் செப். 2ல் ஓவலில் நடக்க உள்ளது. இப்போட்டிக்கான இந்திய அணியில் சுழற்பந்துவீச்சு ‘ஆல்–ரவுண்டர்’ ஜடேஜா இடம் பெறுவது கடினம். லீட்ஸ் டெஸ்டின் மூன்றாவது நாளில் பீல்டிங் செய்த போது இவரது முழங்காலில் காயம் ஏற்பட்டது. நான்காவது நாளில் பேட்டிங் செய்த போதும், வலி அதிகரிக்கவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ‘ஸ்கேன்’ எடுக்கப்பட்டது. பச்சை நிற உடை அணிந்து மருத்துவமனையில் இருக்கும் படத்தை ஜடேஜா தனது ‘இன்ஸ்டாகிராமில்’ வெளியிட்டார். காயம் பெரிதாக இல்லை என்றாலும், அவசரப்பட்டு களமிறக்கி ‘ரிஸ்க்’ எடுக்க இந்திய நிர்வாகம் விரும்பாது. இவருக்கு ஓய்வு கொடுத்து விட்டு, தமிழக சுழற்பந்துவீச்சாளர் அஷ்வினுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம். 

தற்போதைய இங்கிலாந்து தொடரில் பேட்டிங்கை நம்பி தான் ஜடேஜாவுக்கு வாய்ப்பு கொடுத்தார் கேப்டன் கோஹ்லி. ‘சீனியர்’ அஷ்வினை தொடர்ந்து புறக்கணித்தார். முதல் மூன்று டெஸ்டில் ஜடேஜாவின் பேட்டிங்(133 ரன்), பவுலிங்(2 விக்கெட்) எதிர்பார்த்த அளவுக்கு அமையவில்லை. கடந்த 18 டெஸ்டில் 55 விக்கெட் தான் வீழ்த்தியுள்ளார். அஷ்வினை பொறுத்தவரை கடந்த 18 டெஸ்டில் 89 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இங்கிலாந்து சூழ்நிலையில் சிறப்பாக பேட் செய்யக்கூடியவர். இங்கிலாந்துக்கு எதிராக ஒரு சதம் அடித்துள்ளார். சமீபத்தில் சர்ரே கவுன்டி அணிக்காக விளையாடிய இவர், 6 விக்கெட் (எதிர் சாமர்சட்) கைப்பற்றினார். இப்படி அனைத்து விதத்திலும் அசத்தும் அஷ்வின் அடுத்த டெஸ்டில் இடம் பெறுவது உறுதி. 

இது குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் பவுலர் பிராட் ஹாக் கூறுகையில்,‘‘அஷ்வினை தேர்வு செய்வது அவசியம். இவரை 7வது வீரராக களமிறக்கலாம். இதன் மூலம் இந்தியாவின் பேட்டிங் பலம் அதிகரிக்கும்,’’என்றார்

 

வான் வலியுறுத்தல்

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் கூறுகையில்,‘‘அடுத்த போட்டியில் கண்டிப்பாக அஷ்வினை தேர்வு செய்ய வேண்டும். டெஸ்ட் அரங்கில் 5 சதம், 413 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இந்திய அணியின் 8–11வது பேட்டிங் வரிசையில் ரன் எடுக்க பதுங்கும் நான்கு ‘முயல்களை’ வைத்திருக்க முடியாது. லார்ட்ஸ் டெஸ்டில் ‘டெயிலெண்டர்கள்’ விளையாடியதை வைத்து தப்புக்கணக்கு போடுகின்றனர். உண்மையில் 8வது இடத்தில் முகமது ஷமியை அனுப்புவது சரியல்ல. கடைசி கட்டத்தில் அஷ்வினை களமிறக்க வேண்டும். துணை கேப்டன் என்பதால் தான் ரகானே அணியில் நீடிக்கிறாரா என தெரியவில்லை. தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறுகிறார். இங்கிலாந்து அணியை போல இந்திய அணியிலும் துணிச்சலாக மாற்றம் செய்ய வேண்டும்,’’என்றார்.

 

54 நிமிடம்

லீட்சில் நடந்த மூன்றாவது டெஸ்டில் இந்திய அணியின் பேட்டிங் மோசமாக இருந்தது. விக்கெட்டுகள் மடமடவென சரிந்ததால், இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்தது. இது குறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கர் கூறுகையில்,‘‘லார்ட்சில் இந்திய அணி சிறப்பாக மீண்டது. லீட்ஸ் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் முதல் 3 விக்கெட்டுகள் சரிந்ததும், அதிக நேரம் தாக்குப்பிடிக்க மாட்டர் என தோன்றியது. ஆனால் 54 நிமிடங்களில் 7 விக்கெட்டுகள் வீழ்ந்ததை கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. இதை ஏற்பது மிகவும் கடினமாக இருந்தது,’’என்றார். 

Advertisement

THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: