அஷ்வினுக்கு இடம் கிடைக்குமா * நாளை மூன்றாவது டெஸ்ட் துவக்கம்

Spread the love

லீட்ஸ்: மூன்றாவது டெஸ்ட் நாளை துவங்குகிறது. முதல் டெஸ்டில் சேர்க்கப்படாத அஷ்வின், இம்முறை களமிறங்க அதிக வாய்ப்புள்ளது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ‘டிரா’ ஆனது. லார்ட்சில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 151 ரன்னில் வெற்றி பெற்றது. தொடரில் 1–0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் நாளை லீட்சில் உள்ள ஹெட்டிங்லே மைதானத்தில் நடக்க உள்ளது.

இந்திய அணியின் துவக்க ஜோடி ரோகித் சர்மா (152 ரன்), லோகேஷ் ராகுல் (244) கூட்டணியில் மாற்றம் இருக்காது. ‘மிடில் ஆர்டரில்’ புஜாரா–ரகானே ஜோடி மீண்டு வந்தது இந்திய அணிக்கு ஆறுதலாக இருக்கும். கேப்டன் கோஹ்லி, 2 போட்டியில் 62 ரன் தான் எடுத்துள்ளார். சதம் அடிக்க தடுமாறும் இவர், தற்போது அரைசதம் எட்டவே சிரமப்படுகிறார். அடுத்து வரும் ரிஷாப் பன்டும் (84 ரன்) பெரியளவு ரன்கள் குவிக்க முயற்சிக்க வேண்டும்.

வருவாரா அஷ்வின் 

பவுலிங்கை பொறுத்தவரையில் இந்திய அணி 4 வேகம்+ 1 சுழல் என்ற திட்டத்தில் களமிறங்குகிறது. இதனால் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், இஷாந்த் சர்மா அல்லது ஷர்துல் தாகூர் அணியில் இடம் பெறுவது உறுதி. சுழற்பந்து வீச்சை பொறுத்தவரையில் இம்முறை அஷ்வின் இடம் பெற அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

நாட்டிங்காம் டெஸ்டில் 16 ஓவர்கள் வீசிய ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தவில்லை. லார்ட்சில் 28 ஓவர்கள் வீசிய போதும் விக்கெட் எதுவும் கிடைக்கவில்லை. இவரது பந்துவீச்சை இங்கிலாந்து வீரர்கள் எளிதாக எதிர்கொள்கின்றனர். மறுபக்கம் அஷ்வின் ‘சூப்பர் பார்மில்’ உள்ளார். உலக டெஸ்ட் பைனலில் 4, கவுன்டி போட்டியில் 27 ரன்னுக்கு 6 விக்கெட் சாய்த்தார். இதனால் நாளைய டெஸ்டில் அஷ்வின் சேர்க்கப்படுவார் என நம்பப்படுகிறது.

ஷர்துல் ‘ரெடி’

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் 4 விக்கெட் சாய்தார் ஷர்துல் தாகூர். தொடையின் பின்பகுதி காயம் காரணமாக இரண்டாவது டெஸ்டில் இவர் சேர்க்கப்படவில்லை. தற்போது இவர் காயத்தில் இருந்து மீண்டுள்ளார். லீட்ஸ் டெஸ்டில் இஷாந்த் இடத்தில் களமிறங்க வாய்ப்புள்ளது.

 

கவலை இல்லை

இந்திய வீரர் ரகானே கூறுகையில்,‘‘என்னைப் பற்றிய விமர்சனங்களைக் கண்டு பெரிய அளவில் கவலைப்படுவதில்லை. ரசிகர்கள் எப்போதும் முன்னணி வீரர்கள் குறித்து தான் பேசுவர். அந்தவகையில் ரசிகர்கள் விமர்சிப்பது மகிழ்ச்சி. புஜாராவும், நானும் நீண்டகாலமாக விளையாடுகிறோம். எந்த சூழலில் எப்படி விளையாட வேண்டும் என தெரியும். எங்கள் மீதான நெருக்கடியை எப்படி கையாள்வது என எங்களுக்கு தெரியும். லார்ட்ஸ் டெஸ்ட் இரண்டாவது இன்னிங்சில் எதிரணிக்கு 170 முதல் 180 ரன்கள் இலக்கு நிர்ணயித்தால் போதும் என முடிவு செய்து விளையாடினோம்,’’ என்றார். 

Advertisement

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: